Published:Updated:

இஎம்ஐ ஒத்திவைப்பு; கிரெடிட் கார்டுக்கு பொருந்துமா? -ஆர்பிஐ அறிவிப்பை விளக்கும் வங்கி ஊழியர் சங்கம்

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் இந்த லாக்-டவுன் உத்தரவால் பல நன்மைகள் விளைந்தாலும் மக்களின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக மக்கள் வீட்டிலே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே சுற்றித் திரிந்தால் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசின் இந்த லாக்-டவுன் உத்தரவால் பல நன்மைகள் விளைந்தாலும் மக்களின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

வாங்கிய கடன்களுக்கு இ.எம்.ஐ கட்டவாவது காசு தேவை என பல நண்பர்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதேபோல் ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டத்தேவையில்லை. அனைத்துக் கால கடன்களுக்கும் தவணைகளைச் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் அனுமதிக்கப்படுகிறது உள்ளிட்ட பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றன.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்
`இஎம்ஐ கட்டுவது மூன்று மாதங்களுக்கு  ஒத்திவைக்கப்படுகிறது!’ -ஆர்பிஐ ஆளுநர் தகவல்

ஆர்.பி.ஐ கவர்னர் அறிவிப்பில் பல தகவல்கள் இருந்தாலும் கடனுக்கான இ.எம்.ஐ ஒத்திவைக்கலாம் என்ற அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு இருந்தது. எனினும் ஆர்.பி.ஐ கவர்னர் செய்தியாளர் சந்திப்புக்குப் பின் பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பில் வந்தது. குறிப்பாக மூன்று மாதங்களுக்கான இ.எம்.ஐ, ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பறந்தன.

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பேட்டி தொடர்பாக, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்.

`` மூன்று மாதங்கள் இ.எம்.ஐ கட்டுவதை ஆர்.பி.ஐ ஒத்திவைத்துள்ளது. நிச்சயமாக கேன்சல் செய்யவில்லை. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதி கணக்கில், ஒருநபர் இன்னும் ஒரு வருடத்துக்கு இ.எம்.ஐ கட்ட வேண்டும் என்றால் இந்தப் புதிய அறிவிப்பின்படி வரும் மூன்று தவணைகளை ஒத்திபோடலாம். அதாவது ஒருவருடம் மூன்று மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும்.

சி.பி.கிருஷ்ணன்
சி.பி.கிருஷ்ணன்

ஒருவர் மூன்று மாத இ.எம்.ஐ கட்டத் தவறினால் சாதாரணமாக வாராக்கடன் என்று வங்கிகள் வகைப்படுத்தும். இது ஒரு அசாதாரண சூழல் என்பதால் இந்தமுறை அப்படி வங்கிகள் எடுத்துக்கொள்ளாது. மேலும், மூன்று மாதங்கள் இ.எம்.ஐ கட்டாமல் விடுவதனால் சிபில் ஸ்கோரும் குறையும். இந்த முறை சிபில் ஸ்கோரிலும் இது எதிரொலிக்காது’’ என்றார்.

சரி, இது எந்தெந்த வங்கிளுக்குப் பொருந்தும்?

``பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராம வங்கிகள், பிரதேச வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி அல்லாத வங்கிச் சேவை நிறுவனங்கள், ஹவுஸிங் ஃபைனான்ஸ், மைக்ரோ ஃபைனான்ஸ் உட்பட அனைத்துக்கும் ஆர்.பி.ஐ-யின் இந்த உத்தரவு பொருந்தும். பொதுத்துறை வங்கிக்கு மட்டுமென்று இல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் இது பொருந்தும்!”

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

இ.எம்.ஐ தேதி நெருங்கும் நேரத்தில் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கும்.. வரும் இ.எம்.ஐ வங்கி அல்லது நிதி நிறுவனம் எனது கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளாதா.. அல்லது என்னால் கட்ட முடியாது என வங்கிகளிடம் தெரிவிக்க வேண்டுமா?

கடன் பெற்ற எந்த தனிநபரும் வங்கிகளிடம் சென்று கடிதம் மூலமாகவோ வேறு வழிகளிலோ தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்.பி.ஐ-யின் இந்த அறிவிப்பின்படி, வங்கிகள் தானாகவே இ.எம்.ஐ தொகையை, மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்து விடும்.”

தொழில் கடன் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா?

``நாடு முழுவதும் நிலவும் அசாதாரண சூழல் நிச்சயம் தொழில் துறையையும் பாதிக்கும் என்பதால் அவர்களும் மூன்று மாதம் வட்டியைக் கட்ட வேண்டிய அவசியம் வராது. எனினும் குறிப்பிட்டுள்ள மூன்று மாத காலகட்டத்துப் பின்னர் அவர்கள் வட்டியைச் சேர்த்து கட்ட வேண்டியது வரும். தொழில் கடனுக்கு மட்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது!”

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

இ.எம்.ஐ ஒத்திவைப்பு, கிரெடிட் கார்டுக்குப் பொருந்துமா?

``ஆர்பிஐ -யின் அறிவிப்பில் தெளிவாகக் கடன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கல்விக் கடன், வீட்டு கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களும் இதனுள் அடங்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் கிரெடிட் கார்டு இ.எம்.ஐ குறித்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் அதற்கான இ.எம்.ஐ வழக்கம்போல் கட்ட வேண்டியது வரும்.”

தொடந்து பேசியவர், ``ஆர்.பி.ஐ, வங்கிளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால், இதனால் கடைக்கோடி மக்களுக்குப் பலன் கிடைக்கிறதா என்பதை ஆர்.பி.ஐ உறுதி செய்ய வேண்டும். காரணம் ரெப்போ விகிதத்தை ஆர்.பி.ஐ எவ்வளவு குறைத்தாலும் தனியார் நிறுவனங்கள் வட்டி விகிதத்தைக் குறைப்பதில்லை" என்றார்,

அடுத்த கட்டுரைக்கு