பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஏலச்சீட்டில் ஆரம்பத்திலேயே பணத்தை எடுப்பது லாபமா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

மோகன் குமார், காரைக்கால்

நான் மாதம் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டில் புதிதாகச் சேர்ந்துள்ளேன். சீட்டில் சேர்ந்து, ஆரம்ப மாதங்களிலேயே பணத்தை எடுத்துவிடுவது நல்லதா, அப்படி எடுப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?

ஏ.சிற்றரசு, பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்.

“ஏலச்சீட்டை முதல் சில மாதங்களில் எடுக்கலாமா அல்லது சீட்டின் காலம் முடியும் தருவாயில் எடுக்கலாமா என்பது உங்கள் தேவையைப் பொறுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. உங்களுக்கு உடனடித் தேவைகள் இருக்குமானால், ஆரம்பத்திலேயே பணம் எடுத்து, அந்தத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சேமிப்பதற்காகத்தான் சீட்டில் சேர்ந்துள்ளீர்கள் எனில், கடைசியில் எடுப்பது நல்லது. இதன் மூலம் உங்களுக் குக் கிடைக்கும் லாபம், வங்கி ரெக்கரிங் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியைவிட அதிகமாக இருக்கும்.

சீட்டுப் பணத்தை எடுத்து உங்கள் வியாபாரம் அல்லது தொழிலில் முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கு மானால், சீட்டில் கிடைக்கக் கூடிய லாபத்தைவிட அந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிக மாக இருக்குமா என்பதைக் கணக்கிட்டு, தகுந்த நேரத்தில் சீட்டை எடுத்துப் பயன் படுத்தலாம்.

சீட்டுத் திட்டத்தின் ஆரம்பத்திலேயே பணம் எடுத்துவிட்டால், பணத் துக்குப் பாதுகாப்பு என்று சிலர் ஆரம்பத்திலேயே பணம் எடுக்கிறார்கள். அது போன்ற அச்சமோ, ஐயமோ உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் அந்தச் சீட்டு நிறுவனத் தைவிட அதிக பாதுகாப்பான சீட்டு நிறுவனத்தில் சீட்டு கட்டுவதுதான் நல்லது.”

ஏலச்சீட்டில் ஆரம்பத்திலேயே 
பணத்தை எடுப்பது லாபமா..?

பத்மநாபன், திருவல்லிக்கேணி, சென்னை

பங்குகளின் விலை கணிசமாக இறங்கும்போது அவற்றை ஆவரேஜ் செய்கிறோம். அதனால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கொடுக்கிறது. இதேபோல, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை என்.ஏ.வி (NAV) மதிப்பு குறைவாக இருக்கும்போது ஆவரேஜ் செய்யலாமா. இதனால் நீண்ட காலத்தில் லாபம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா. வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறதா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“சிஸ்டமேட்டிக் இன் வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் மாதந்தோறும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வரவும். பங்குச் சந்தை அதிக இறக்கத்தில் அல்லது கரடியின் பிடியில் இருந்தால் வழக்கத்தைவிட கூடுதலாக முதலீடு செய்யவும். தொடர்ந்து முதலீடு செய்வதுடன், இறக்கத்தில் அதிகமாக முதலீடு செய்வதன்மூலம் நீண்ட காலத்தில் அதிக செல்வத்தைச் சேர்க்க முடியும்.”

ஏலச்சீட்டில் ஆரம்பத்திலேயே 
பணத்தை எடுப்பது லாபமா..?

சங்கர்லால், கன்னியாகுமரி.

நான் இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெறப் போகிறேன். எனக்குக் கிடைக்கும் மொத்த தொகையை மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்யலாமா? அல்லது மொத்தமாக முதலீடு செய்துவிட்டு, சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (SWP) முறையில் பணத்தைத் திரும்ப எடுக்கலாமா? இவற்றில் எது லாபகரமாக இருக்கும், கவனிக்க வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கிறதா?

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“ஒரு காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் வருமான வரி கட்ட வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. அப்போது குரோத் ஆப்ஷனுடன் ஒப்பிடும்போது டிவிடெண்ட் ஆப்ஷன் லாபகரமாக இருந்தது. ஆனால், இப்போது டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் லாபத்திலிருந்து மட்டுமே டிவிடெண்ட் வழங்க வேண்டும் எனச் செபி விதிமுறை கொண்டுவந்தது. அப்படி செயல் படுவது கடினம் என்பதால், டிவிடெண்ட் என்பதை வருமான விநியோகம் மற்றும் மூலதனத்தை விலக்கி கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் ஐ.டி.சி.டபிள்யூ (IDCW - Income Distribution cum Capital Withdrawal) எனச் செபி மாற்றியது. மேலும், டிவிடெண்ட் தொகைக்கு 10% மூலத்தில் வரி (TDS) பிடிக்கப்பட்டு மீதித் தொகையைத்தான் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், இந்த டிவிடெண்ட் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பெரும் பாலும் மாதம்தோறும் வழங்கப் படாது. ஃபண்டின் வருமானத்தைப் பொறுத்தும் ஃபண்ட் மேனேஜரின் விருப்பத்தைப் பொறுத்தும் டிவிடெண்ட் தரப்படும்; அதுவும் நிலையான தொகையாக இருக்காது.

இதற்கு பதில் தொகுப்பு நிதியிலிருந்து மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (Systematic withdrawal Plan - SWP) முறையில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த முறையில் பணம் எடுக்கும்போது டி.டி.எஸ் பிடிக்க மாட்டார்கள்.

மேலும், இந்த முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. அதற்கு மேற்படும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும். இதுவே கடன் ஃபண்டுகள் என்கிறபோது மூன்றாண்டுகளுக்குப் பிறகான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்குப் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்ட வேண்டிவரும்.

ஈக்விட்டி ஃபண்ட் எனில், முதலீட்டை ஓராண்டுக்குள் எடுத்தால் 15% வரி கட்ட வேண்டிவரும். கடன் ஃபண்ட் எனில், முதலீட்டை மூன்றாண்டுக்குள் எடுத்தால் அடிப்படை வரி வரம்புக்கு உட்பட்டு வரியைக் கட்ட வேண்டிவரும்.”

வீரன் தர்காஸ், சென்னை

தேசிய பென்ஷன் திட்டத்தில் (NPS) நடைமுறைப்படுத்த உள்ள புதிய அம்சங்கள் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

எஸ்.சரவணன், சர்டிஃபைட் டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

“தேசிய பென்ஷன் திட்டத்தில் (NPS) முதலீடு செய்து சேமித்த பணத்தில் 60% தங்களது செலவுக்காகத் திரும்பப் பெற வழியுள்ளது. 75 வயது வரை 60% பணத்தை என்.பி.எஸ் கணக்கிலேயே முதலீடாக வைத்திருப்பதற்கான வாய்ப்பும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அளித்துள்ளது.

ஆனால், 40% பணத்தைக் கட்டாயமாக காப்பீடு நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மேற்கூறிய நடைமுறைகளை மாற்றி அமைக்க பி.எஃப்.ஆர்.டி.ஏ வரும் நாள்களில் வழிவகை செய்ய உள்ளது. இனி நடை முறைக்கு வரவுள்ள புதிய அம்சங்கள் வருமாறு;

* 60% பணத்தை முழுமையாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மாதாந்தர செலவுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வழி உள்ளது. (மாதத்துக்கு ஒரு முறை / மூன்று மாதத்துக்கு ஒரு முறை / ஆறு மாதத்துக்கு ஒருமுறை) ( Systematic Lumpsum withdrawal). இந்த வசதியைப் பெற சந்தாதாரர் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து பெற முடியும்.

* 75-ம் வயதில் கணக்கு முடிக்கப்பட்டு மீதமிருக்கும் தொகையை சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கில் மொத்தமாகச் செலுத்தப்படும். ஒருவேளை சந்தாதாரர் 75 வயதுக்கு முன்னரே இறக்க நேரிட்டால் அவருடைய என்.பி.எஸ் கணக்கில் இருக்கும் மீதமுள்ள தொகையை வாரிசுதாரர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.”