Published:Updated:

இன்று முதல் அறிமுகமாகும் இ-ரூபாய்... UPI போல வெற்றிகரமாகச் செயல்படுமா? விளக்குகிறார் அர்ஜுன் விஜய்!

Digital payment | டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

யு.பி.இ பணப் பரிமாற்றம் வந்தபிறகு நம் வாழ்க்கை பெரிதாக மாறியிருக்கிறது. இந்த இ-கரன்சி வந்தபிறகு நமது வாழ்க்கையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம்!

இன்று முதல் அறிமுகமாகும் இ-ரூபாய்... UPI போல வெற்றிகரமாகச் செயல்படுமா? விளக்குகிறார் அர்ஜுன் விஜய்!

யு.பி.இ பணப் பரிமாற்றம் வந்தபிறகு நம் வாழ்க்கை பெரிதாக மாறியிருக்கிறது. இந்த இ-கரன்சி வந்தபிறகு நமது வாழ்க்கையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இன்னும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்போம்!

Published:Updated:
Digital payment | டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

கிரிப்டோ கரன்சிகளைப் போல ரிசர்வ் வங்கியே தனியாக இ-கரன்சியை வெளியிடும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது டிஜிட்டல் ரூபாய் இன்று முதல் சோதனை அடிப்படையில் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த டிஜிட்டல் கரன்சி முதலில் மொத்த விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. சோதனை அடிப்படையில் இந்த இ-கரன்சிகள் எப்படி செயல்படும் என்பதை ஆராய்ந்த பிறகே படிப்படியாக இதை நாடு முழுக்க விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் ரூபாய் மதிப்புகள் குறித்த தெளிவான விளக்கத்தை நமக்கு அளிக்கிறார் ஜியோட்டஸ் (Giottus) நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ஜுன் விஜய்.

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?

``மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency - CBDC) அல்லது டிஜிட்டல் ரூபாய் என்று அழைக்கப்படும் இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் ஆகும். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதைப் பயன்படுத்தலாம்.

நாம் தற்போது பயன்படுத்தும் பணம் என்பது பேப்பர் மற்றும் உலோக நாணய வடிவிலும் உள்ளது. டிஜிட்டல் கோட்டுகள் (Digital Code) மூலம் உருவாக்கப்படுவதுதான் டிஜிட்டல் ரூபாய். இந்தியாவில் 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என அறிவித்திருந்தார். அதன்படி, நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

கிரிப்டோகரன்சி vs டிஜிட்டல் ரூபாய்

இதை கிரிப்டோகரன்சி என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். இதற்கும் கிரிப்டோகரன்சிக்கும் சம்பந்தம் இல்லை. கிரிப்டோ கரன்சி என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பரவலான டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகும். இதை நாம் மற்றவருக்கு எளிதாக அனுப்ப முடியும். இருப்பினும், இது எந்தவொரு நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் இல்லை. அதாவது, கிரிப்டேகரன்சிகளின் செயல்பாடானது எந்தவொரு வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்குள் வராது.

கிரிப்டோ கரன்சிகள்
கிரிப்டோ கரன்சிகள்

ரிசர்வ் வங்கி தற்போது அறிமுகம் செய்துள்ளது டிஜிட்டல் நாணயம் ஆகும். அதாவது, ரூபாயின் டிஜிட்டல் வடிவமாகும். `டிஜிட்டல் ரூபாய்’ என்பது பிட்காயின், எத்திரியம் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளிலிருந்து வேறுபட்டது. இது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பாதுகாப்பானதாக ஒரு டிஜிட்டல் ரூபாய் என்பது நாம் பயன்படுத்தும் ஒரு ரூபாய்க்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்கும்.

மேலும், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், டிஜிட்டல் ரூபாயின் மதிப்பு எப்போதும் ஒரே மாதிரி அதாவது, ரூபாய் மதிப்புக்கு நிகராகவே இருக்கும். இதனால் டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்துவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது.

டிஜிட்டல் ரூபாய் எப்படி செயல்படும்?

டிஜிட்டல் பேமென்ட் முறைகளில் நாம் காணும் அனைத்து நன்மைகளையும் டிஜிட்டல் ரூபாயில் இருக்கும். இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒருபோதும் கிழிக்கவோ, எரிக்கவோ, சேதப் படுத்தவோ முடியாது. நோட்டுகளை இழப்பது போல, டிஜிட்டல் ரூபாயை இழக்க முடியாது.

டிஜிட்டல் பேங்கிங்
டிஜிட்டல் பேங்கிங்

இந்த டிஜிட்டல் நாணயத்தை ஒரு சில நாடுகள் மட்டும் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய ஒன்பது வங்கிகள் மூலம் இன்று டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூடிய விரைவிலேயே இந்த டிஜிட்டல் ரூபாய் முழுப் பயன்பாட்டிற்கு வரும் எனவும், தற்போது அரசுப் பத்திரங்கள், கடன் பத்திரங்களை வாங்க இந்த டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

என்றாலும், சோதனை அடிப்படையிலான காலத்தில் ஏதாவது பிரச்னை வருகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அப்படி பெரிய பிரச்னை எதுவும் வராத பட்சத்தில் இது இன்னும் பரவலான பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாயைத் தற்போது எல்லோரும் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட சில தொழில்களில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காரணம், இது சோதனை அடிப்படையில் மட்டும்தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தச் சோதனையில் நாம் வெற்றி அடைந்துவிட்டால் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் போல இதை நிரந்தரமாகவே எளிதாகப் பயன்படுத்த முடியும்.

கரன்சி
கரன்சி

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்ட டிஜிட்டல் ரூபாயின் வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நாம் இப்போது பயன் படுத்தும் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகள் எல்லாமே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது. அந்த வகையில், டிஜிட்டல் ரூபாயின் வளர்ச்சியும் இந்தியாவில் அதிகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

வெளிநாட்டுக்கு எளிதில் பணம் அனுப்ப முடியும்...

டிஜிட்டல் ரூபாய் மதிப்புகளை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இணைய வசதி இல்லாத நேரத்திலும் எப்படிப் பயன்படுத்தலாம் போன்ற பல முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பணம்
பணம்

இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு நமக்கு எந்த ஒரு இன்டர்மீடியடேட்டரும் தேவை இல்லை. நேரடியாக நாம் வங்கிகளில் இருந்து பயன்பாட்டாளர்களைக் கொண்டு சேர்க்கவும் முடியும். இதனால் யாருக்கு வேண்டுமானாலும் நாம் எளிதாகப் பணம் அனுப்ப முடியும்; அதே போல, பெறவும் முடியும்.

பணத்தை அந்த நாட்டின் ரூபாய் மதிப்புக்கு ஏற்றபடி வங்கியின் மூலம் மாற்றி அனுப்புவதில் பல படிநிலைகள் உண்டு. ஆனால், தற்போது அறிமுகப்படுத்திய டிஜிட்டல் ரூபாய்களில் பணத்தை பிற நாடுகளுக்கு அனுப்புவதோ, அந்த ரூபாய் நாட்டின் மதிப்புக்கேற்ப மாற்றுவதோ மிகவும் எளிது என்பதுடன், மிகவும் பாதுகாப்பானதும் ஆகும்’’ என்று நீண்ட விளக்கம் அளித்தார் அர்ஜுன் விஜய்.

கறுப்புப் பணம் ஒழியும்!

ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட யு.பி.இ-ஆக இருந்தாலும் சரி, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாயாக இருந்தாலும் சரி, கறுப்புப்பணம் புதிதாக உருவாகாமல் தடுக்க பெரிய அளவில் உதவி செய்வதாக இருக்கும்.

கருப்புப் பணம்
கருப்புப் பணம்

டிஜிட்டல் முறையில் அனைத்துப் பணமும் பரிவர்த்தனை செய்யப்படுவதால், எல்லாப் பரிவர்த்தனைகளும் கணக்கில் வந்துவிடுவிம். அதனால், அரசுக்கு வர வேண்டிய வரி வருமானம் அதிகரிக்கும்.

யு.பி.ஐ பணப் பரிமாற்றம் வந்தபிறகு நமது பொருளாதாரம் பெரிதாக மாறியிருக்கிறது. இந்த இ-கரன்சி வந்தபிறகு நமது வாழ்க்கையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்ப்போம்!