பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

‘‘மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை..!’’

ரகுராம் ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரகுராம் ராஜன்

பொருளாதாரம்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்துடன் (ICSSR) இணைந்து ‘அரசு, சமூகம், சந்தை: இவற்றின் இயக்கம் மற்றும் தளத்தைப் புரிந்துகொள்ளுதல்’ தொடர்பாக பயிற்சிப் பட்டறையைக் கடந்த வாரத்தில் நடத்தியது.

இதன் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த மார்ச் 24 வியாழன் அன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார்.

`ஜனநாயகம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையில் இந்தியப் பொருளாதாரம் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொன்டார்.

“அரசுகள் எந்த ஒரு சூழலிலும் மக்களை முன்னிறுத்திதான் சிந்திக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா போன்ற பல்வேறு கலாசாரப் பண்பாட்டு வழக்கங்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

அனைவருக்குமான வாய்ப்புகள் உருவாக்கப் படுவதுடன், எல்லாத் தரப்பினரும் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் தளங்களைக் கட்டமைக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

வளர்ந்த நாடுகள் அனைத்தையும் உற்றுக் கவனித்தால், அந்த அரசுகள் மக்களைப் பார பட்சமாக நடத்தும் போக்கை கைவிட்டிருப் பதைக் காணலாம்.

அரசு, விமர்சனங்களை வரவேற்கும் அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். மக்கள் சார்ந்து கொண்டு வரப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்திப் பார்த்து, அதன் விளைவுகளைத் தெரிந்து கொண்டு பின்னரே செயல்படுத்த வேண்டும். மக்கள் நலனையும் நாட்டின் மொத்த வளர்ச்சி யையும் கருத்தில்கொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு பல விஷயங்களை அரசு கவனத்தில் கொள்ள மறந்துவிட்டது. குறிப்பாக, கொரோனா பரவலுக்குப் பிறகு, பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள், உட்கட்டமைப்புகள் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது.

ஆனால், இந்தியாவின் முக்கியமான பலமே அதன் மனிதவளம்தான். இன்றைய குழந்தை கள்தாம் நாளைய இந்தியாவின் அடித்தளம். அப்படி இருக்க, மனிதவளம் மீதும், கற்றல் சார்ந்தும் பெரிய அளவில் அரசு கவனம் செலுத்தவில்லை.

தொழில் மூலதனம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் மனித வளத்துக்கான திறன் மூலதனம். ஆனால், கடந்த பட்ஜெட்டில் கல்விக்குத் தர வேண்டிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

அரசு இப்போது தீவிரமாகச் செயல்படுத்தி வரும் உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டங்கள் (PLI) குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன பலன் கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும், இந்தத் திட்டம் மக்களுக்கு பரவலான பலனைத் தருவதாக இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற திட்டங்கள் மூலம் ஆக்கபூர்வமான இலக்கை எட்டவில்லை.

அதுவும் இப்போது இந்தியாவில் உற்பத்தித் துறையை விடவும் சேவைத் துறைதான் அதிகம் பங்களிப்பு வகிக்கிறது. மேலும், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படும் சலுகைகள் மீண்டும் லைசென்ஸ் ராஜ் முறையைச் செயல்படுத்துவது போலத்தான் உள்ளது.ஆனால், அப்படியான நடைமுறை இந்தியாவில் தோல்வி தான் கண்டிருக்கிறது.

அதேபோல, சிப் தயாரிப்புச் சூழலை இந்தியாவில் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்டெல் ஏற்கெனவே உலகம் முழுவதும் வலுவான சந்தையை வைத்துள்ளது. அதிக அளவிலான முதலீடுகளைத் தொடர்ந்து செய்கிறது.

சிப் தயாரிப்புக்கான சூழலை இந்தியாவில் உருவாக்க பெரிய அளவிலான மானியச் சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். அப்போதும்கூட அது ‘வெள்ளை யானை’ போலத்தான். ஆனால், இதில் முதலீடு செய்யும் தொகையை ஆக்கபூர்வமாகக் கல்விக்காகச் செலவு செய்யலாம். ஆராய்ச்சி, திறன் வளர்ப்பு, மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் திறமையான இளைஞர்களை உருவாக்கலாம்.

சீனாவுடன் போட்டி போட்டு உற்பத்திச் சந்தையை வலுப்படுத்த நினைப்பதைவிட, இந்தியாவில் சேவைத்துறை சார்ந்த கேந்திரமாக உருவாக்கும் முயற்சிகளை எடுக்கலாம். சீனாவில் ஊதியம், வட்டி விகிதம் போன்றவற்றை அவர் களால் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது. ஏனெனில், அது ஜனநாயக நாடு அல்ல.

சீனா போல, இந்தியாவால் முடிவுகளை எடுக்க முடியாது. எனவே, சீனாவைப் பின்பற்றுவது இந்தியாவுக்கு ஒத்துவராது. சீனா, தனது உற்பத்தித் துறையை வலிமையாக உருவாக்கத் தொடங்கிய காலத்துக்கும் இப்போது இந்தியா உற்பத்தித் துறையை அணுகிவரும் காலத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே, இந்தியா தனது பொருளாதார நடவடிக்கைகளைத் தீர ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் மனிதவளக் கட்டமைப்பில் கவனம் செலுத் தாமல் உட்கட்டமைப்புகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் நினைத்த பலனை அடைந்துவிட முடியாது. இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக இருக்கக் காரணம், கொரோனா மட்டுமே அல்ல. அதற்கு முன்பிருந்தே நம்முடைய பொருளாதாரம் சீர்குலைந்து போயிருந்ததுதான்.

2008-ல் உலகப் பொருளாதார நெருக்கடி வந்ததிலிருந்தே நம்முடைய பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் அரசால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாததுதான் அத்தனை நெருக்கடிக்கும் முக்கியமான காரணம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அதிகாரத்தைப் பிடிப்பதை மட்டுமே நோக்கமாக வைத் திருக்காமல், மக்கள் நலனுக்கு ஏற்றவாறு மத்திய, மாநில அரசுகள் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு செயலாற்ற வேண்டும்” என்றார் அவர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேட்ட பொருளாதாரம் தொடர்பான கேள்வி களுக்கு தெளிவான பதில் வழங்கினார் ரகுராம் ராஜன்.