ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாயைத் திரட்டி மோசடி செய்துள்ள இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தற்போது விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு சோதனை நடத்தி வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேலூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் என்ற இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்து மாதந்தோறும் அதிக வருமானத்தைத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பல நூறு கோடிகளில் பணத்தைத் திரட்டியது. சில மாதங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இந்நிலையில், இந்த மோசடி பற்றி ஜூனியர் விகடன், நாணயம் விகடன் கட்டுரையாக வெளியிட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பலரும் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகார்கள் மீது காவல் துறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நிறுவனத்தின் மீது விரைவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து பொருளாதாரக் குற்றப் பிரிவினர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சோதனைக்குப் பிறகு பல உண்மைகள் வெளிவரும் என்றும், இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட லட்சுமி நாராயணன், வேத நாராயணன் சகோதரர்கள், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.