Published:Updated:

`கடன் வழங்க லஞ்சம்; விடிய விடிய விசாரணை!’ - `எஸ் வங்கி' நிறுவனர் அதிரடி கைது

ராணா கபூர்
ராணா கபூர்

எஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கடன் வழங்க லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் பேங்க், தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வங்கியில் நம்பிக்கையோடு டெபாசிட் செய்யும் எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணா கபூர் என்ற ஒற்றை மனிதரின் செயல்பாட்டால் எஸ் பேங்க் பெரும் வளர்ச்சி அடைந்து தற்போது அவராலேயே அதே வேகத்தில் கீழே வீழ்ந்துள்ளது.

எஸ் வங்கி
எஸ் வங்கி

2004-ம் ஆண்டு வங்கி தொடங்கிய ராணா அடுத்த 10 ஆண்டுகளில் அந்த வங்கியைப் பல கோடி சொத்து மதிப்புள்ள மிகப்பெரும் நிறுவனமாக வளர்த்தெடுத்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் அதிக வட்டிக்குக் கடன் வழங்கினால் வங்கி விரைவில் வளர்ச்சியடையும் என அவர் எண்ணினார். ஆனால், அதுவே தற்போது வாராக்கடனாக மாறி எஸ் வங்கியைப் பெரும் சரிவை நோக்கித் தள்ளியுள்ளது.

`எஸ் பேங்க்' வீழ்ந்த கதை! ஏன், எப்படி? #YesBank

எஸ் பேங்க் நிதிச்சுமையில் சிக்கியது தேசிய அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கியை மீட்டெடுக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு நாள்களாக மும்பையில் உள்ள எஸ் பேங்கின் நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரின் மகள்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதன் முடிவில் ராணா கபூர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ராணா கபூர் கைது
ராணா கபூர் கைது
ANI

பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு அவரை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்து மும்பை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது கடும் நிதி நெருக்கடியிலிருந்த பல நிறுவனங்களுக்குத் தெரிந்தே அதிக அளவில் கடன் வழங்கி அதன் மூலம் ராணா ஆதாயம் அடைந்தது தெரியவந்துள்ளது. கடன் வழங்குவதற்கு பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி தன் மகள்கள் பெயரில் ராணா புதிய நிறுவனம் தொடங்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்தச் சூழலில் ராணாவின் கைது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு