Published:Updated:

`எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்!’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( Photo: Vikatan / G. Balaji )

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புப் பேட்டி #VikatanExclusive

தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது நம் தமிழகம். தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசாங்கம் வேகமாக எடுத்து வருகிறது. தமிழகத் தொழில் வளர்ச்சி குறித்து மேலும் அறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். நாணயம் விகடனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி இனி...

``முதலீடுகளைக் கொண்டுவருவதில் கடந்த ஆண்டு உங்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது. அந்தப் பயணங்கள் மூலமாக வந்துள்ள முதலீடுகள் பற்றிய விபரம்?"

``நான் முன்பே கூறியது போல, கடந்த ஆண்டு எனது தலைமையிலான உயர்மட்ட குழு இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணம் அந்த நாடுகளுடனான இரு தரப்பு கூட்டண்மையை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு மீதும் தமிழ்நாட்டின் மீதும் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளது.

குறிப்பாக, வெளிநாடுவாழ் தமிழர்கள் சிறிதும் பெரிதுமாக பல முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் வெற்றிகரமாக அமையப் பெற்ற எனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் ரூ.8,835 கோடி அளவிற்கான முதலீடுகளை ஈர்த்து, 35,520 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

அமெரிக்கப் பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ZL TECHNOLOGIES, KAPISOFT KLOUDLERN, JOGO HEALTH ஆகிய திட்டங்களும் ஐக்கிய அரபு நாடுகள் பயணத்தின்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒரு ஆட்டோ நிறுவனமும் தங்களது வணிக உற்பத்தியினை ஏற்கெனவே துவங்கிவிட்டன.

`எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்!’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

துபாய் அரசு நிறுவனமான DP WORLD தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மற்ற புரிந்துணர்வுத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மேற்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தவிர, எனது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் பயணத்தின்போது ஹால்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துடன் ஒரு கொள்கை அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிறுவனம் ரூ.50,000 கோடி முதலீட்டுடன் கடலூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நிறுவி 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க பயணத்தின்போது தொழில் வழிகாட்டி நிறுவனத்தால், அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் (ATEA) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன் வாயிலாக 23.7.2020 அன்று ஏழு அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துக் கூறவும், அந்தந்த நாடுகளில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், இப்பயணம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இவை அனைத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலரையும் சந்தித்து, அவர்கள் அன்பை பெற்று அவர்களில் பலர் தமிழ்நாட்டுக்கான முதலீட்டுத் தூதுவர்களாக விளங்கிட, ஊக்கமளித்தது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்தது.’’

``தமிழகத்தில் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில் தொழில் நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொழில் துறையினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்கள். அது தொடர்பான திட்டங்கள் ஆலோசனைகள் தமிழக அரசிடம் உள்ளதா?"

``தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம். தூத்துக்குடி, கங்கைகொண்டான், திருநெல்வேலி, மானாமதுரை, நிலக்கோட்டை, பெருந்துறை, ஓசூர், செய்யாறு, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் சிப்காட் தொழில் பூங்காக்கள் இயங்கி வருகின்றன. மேலும் சிப்காட் தொழில் பூங்காக்கள் மணப்பாறை, திண்டிவனம், தர்மபுரி, மணலூர், விருதுநகர், தேனி மற்றும் பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாகத் தொடங்கப்பட உள்ளன. மேலும், இனி புதிதாக உருவாக்கப்படும் தொழில் பூங்காக்கள் குடியிருப்பு வசதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் போன்ற சமூக கட்டமைப்புகள் கொண்ட தொழில் நகரியங்களாக இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெற்று தொழில்கள் வளர வழிவகை ஏற்படும்.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Photo: Vikatan / G. Balaji

``தமிழ்நாட்டில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாகச் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன?"

``சொந்த ஊருக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தகுந்த வழிகாட்டுதல்களும் வசதிகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளைத் தெரியப்படுத்த தனியார் வேலைவாய்ப்புகளுக்கான இணையதளம் திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலமும் தமிழக இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகளைத் தெரியப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் இங்கிருந்து சென்ற தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மீண்டும் வருபவர்களுக்கு உரிய பரிசோதனைகள் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்வதற்கான இணையதள வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்த இணையதளத்தில் 100% பதிவுகளை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.

மேலும், சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தொழில் பூங்காக்களிலேயே அனைத்து வசதிகளுடன்கூடிய குடியிருப்பு வசதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக, ஶ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சிப்காட், வல்லம் வடகால், தொழில் பூங்காவில் 7,000 பேர் தங்குவதற்கு ஏதுவாக 9.50 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.371 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடித் தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது.

அடுத்தகட்டமாக, அங்கு 32 ஏக்கர் நிலப்பரப்பில் 20,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் சுமார் ரூ.700 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதி ஏற்படுத்திட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.''

``ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 25 சதவிகிதம்கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வழக்கமாக வரக்கூடிய முதலீடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வந்ததாகக் கணக்கு காட்டப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு உங்கள் பதில் என்ன?"

``முன்பு முதலீடே வரவில்லை என்றார்கள். பின்னர் வழக்கமாக வரும் முதலீடு என்றார்கள். பின்னர் 25 சதவிகிதம்தான் வந்துள்ளது என்றார்கள். இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படி அறியாதவர்போல் சொல்லிக்கொண்டிருக்க முடியும். விவரங்கள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் தெளிவாக உள்ளன. ஆனால், இப்படி படிப்படியாகவாவது உண்மை நிலையை அறிய எதிர்க்கட்சித் தலைவர் முயல்வது நல்லதுதான். ஒவ்வொரு முறையும் இது போன்ற கேள்விகள் எழுப்பப்படும்போது எங்கள் சாதனைகளை மக்கள் மன்றத்தில் மீண்டும் ஒருமுறை வலுவாக எடுத்து வைக்க வாய்ப்பு கிடைப்பதும் எனக்கு மகிழ்ச்சிதான்.’’

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது நடைபெறும்?"

``தற்போது உலகெங்கும் நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு சாத்தியமில்லை. உலக அளவில் பெரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதைப் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.’’

Note:

இதுதவிர தமிழக தொழில் வளர்ச்சி குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருக்கிறார். அந்த விரிவான பேட்டிக்கு இங்கே க்ளிக் செய்க... https://bit.ly/3lRowT4
அடுத்த கட்டுரைக்கு