Published:Updated:

தொடர் நஷ்டம், தோல்வி, விரக்தி; ரூ.75,000 கோடி நிறுவனமாக மாறியது எப்படி? |திருப்புமுனை-28

ராஷேஷ் ஷா எடில்வைஸ் தலைவர்

நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும் என்பார்கள். அப்படித்தான் எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் பல வந்தபோதும் தளராமல் விடாமுயற்சியும் உழைப்பும் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணம் ராஷேஷ் ஷா எடில்வைஸ் குழுமத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி.

தொடர் நஷ்டம், தோல்வி, விரக்தி; ரூ.75,000 கோடி நிறுவனமாக மாறியது எப்படி? |திருப்புமுனை-28

நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும் என்பார்கள். அப்படித்தான் எடுத்த முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டைகள் பல வந்தபோதும் தளராமல் விடாமுயற்சியும் உழைப்பும் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணம் ராஷேஷ் ஷா எடில்வைஸ் குழுமத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி.

Published:Updated:
ராஷேஷ் ஷா எடில்வைஸ் தலைவர்

பிசினஸை விரும்பாத குஜராத்தி!

தொழில் தொடங்கி பெரிய நிறுவனமாக உயர வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, ஆர்வமாக பலருக்கு இருக்கும். குஜராத்திகளுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியமாகவே இருக்கும் என்பார்கள். ஆனால், குஜராத்தியாக இருந்தும், தொழில் குடும்பத்தில் பிறந்தும் ராஷேஷ் ஷாவுக்கு தொழில் தொடங்குவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. அவருடைய அப்பா ஸ்டேஷனரி தொழிலில் இருந்து வந்தார்.

குடும்பத்தொழில் இருந்தாலும் அதில் கவனம் செலுத்த விரும்பவில்லை ஷா. ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் படித்து முடித்தவர், 1989-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ-யில் வேலை செய்ய தொடங்கினார். தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே முடிந்தவரை ஐ.சி.ஐ.சி.ஐ-யில் வேலை செய்தே கழிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், ஐசிஐசிஐ-யில் இவர் சந்தித்த மனிதர்கள் இவரது பாதையையே மாற்றிவிட்டனர் என்று சொல்லலாம்.

எடில்வைஸ்
எடில்வைஸ்

1990-களில் இந்தியாவின் முக்கியமான தொழில்முனைவோர்கள் பலரையும் நேரடியாகச் சந்தித்து உரையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பாரத்போர்ஜ், யுனைடெட் பாஸ்பரஸ், மாஸ்டெக் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காக ஐசிஐசிஐ-க்கு வரும்போது புதுயுக தொழில்கள் குறித்த ஆர்வம் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கின. 1991-ம் ஆண்டு தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, தொழில்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தையும் வேகமெடுத்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராஷேஷ் ஷா ஐசிஐசிஐ-யில் இருந்து விலகி பிரைம் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அங்கு குறுகியகாலம் மட்டுமே பணியாற்றியவர் அந்த வேலையை விட்டார். இன்ஃபோசிஸ் எப்படி ஐந்து நண்பர்களின் கூட்டு முயற்சியால் தொடங்கியதோ அதேபோல ஐந்து நண்பர்களை ராஷேஷ் ஷா கண்டறிந்தார்.

மலை ஏறுவதற்கு என்ன தேவை எனக் கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். ஸ்டாமினா, பாதுகாப்பு நடவடிக்கைகள், பயிற்சி என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லுவார்கள். ஆனால், அடிப்படையான விஷயம் என்ன? மலை ஏற வேண்டும் என்றால் மலை என்று ஒன்று இருக்க வேண்டும்.

ராஷேஷ் ஷா மனைவி வித்யா ஷா
ராஷேஷ் ஷா மனைவி வித்யா ஷா

அதுபோல தொழில் தொடங்க வேண்டும் என முடிவெடுக்கலாம். ஆனால், தொழிலுக்கு அலுவலகம்..? அலுவலகம் இல்லாமல் செயல்பட முடியாதே. ஆனால், ராஷேஷ் ஷா கேராஜில் அல்லது மும்பையின் புறநகரில் செயல்படலாம் என நினைக்கவில்லை. பக்காவான அலுவலகம் வேண்டும் எனத் தேடினார். இடையில் சில மாதங்கள் ஓடிவிட்டதால் நிறுவனத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வருவதாகச் சொன்ன சிலர் வரவில்லை.

ஒரு நாளைக்கு ரூ.5,000 நஷ்டம்!

ஒருவழியாக மும்பை நரிமன் பாயின்டில் அலுவலகம் கிடைத்தாகிவிட்டது. 500 சதுர அடி அலுவலகம். மாதம் ரூ.1.5 லட்சம் வாடகை. அதாவது தினமும் ரூ.5,000. அலுவலகம் தொடங்கிய சில நாள்கள் மிகவும் கொடுமையானவை என விவரிக்கிறார் ராஷேஷ். ` அலுவலகத்தில் யாரும் கிடையாது, நானும் ஆபீஸ் பையனும்தான். வருவோம் சில அழைப்புகள் உரையாடல்கள் இருக்கும். அதன் பிறகு பையை எடுத்துக்கொண்டு கிளம்புவோம்.

செல்லும்போது இன்றைக்கு ரூ.5,000 நஷ்டம் என்னும் விரக்தியில் வீட்டுக்குக் கிளவும்புவேன். கிட்டத்தட்ட முதல் சில வாரங்களுக்கு இதுதான் நிலைமையாக இருந்தது. ஒரு நாளை தொடங்கும்போதே இன்றைக்கு ரூ.5,000 நஷ்டம் என்பதுதான் நிலையாக இருந்தது.

ராஷேஷ் ஷா
ராஷேஷ் ஷா

அடுத்த அடி...

இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் தொழிலில் இறங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். இதற்கான அனுமதி செபியிடம் வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் மூலதனம் வேண்டும்.

இன்றைய சூழலிலேயே ஒரு கோடி ரூபாய் என்பது பெரிய தொகை. 1996-ம் ஆண்டு அது இன்னும் மிகப்பெரிய தொகை. இவர் வசமிருந்த ரூ.20 லட்சம், நண்பர்களிடம் திரட்டியது என மொத்தம் ரூ.50 லட்சம் மட்டுமே வந்தது. பெற்றோர் அனுமதியுடன் வீட்டை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் என ஒரு கோடி திரட்டியாகிவிட்டது.

ஆனால், விண்ணப்பிக்கும் நேரத்த்தில் ஒரு கோடி ரூபாய் என்பதை ரூ.5 கோடியாக உயர்த்தியது செபி. நினைத்துப் பாருங்கள். நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும் என்பார்கள். எதற்காக இத்தனை காலம் கஷ்டப்பட்டார்களோ அதைச் செய்ய முடியாத சூழல், தவிர அந்தச் சமயத்தில் ஆசியா முழுவதும் நெருக்கடி இருந்ததால் சந்தை சூழ்நிலையும் சரியில்லை.

இதனால் எம் அண்ட் ஏ பிரிவில் (merger and acquisition) களம் இறங்க முடிவெடுத்தார். பணியாளர்கள் இல்லை, நிறுவனத்துக்கு என எந்த வரலாறும் இல்லை, பெரிய மூலதனம் இல்லாமல்தான் ஆரம்பகாலம் இருந்தது.

ராஷேஷ் ஷா
ராஷேஷ் ஷா

ஆனாலும் தொடர்ச்சியான முயற்சியாலும் உழைப்பாலும் எடில்வைஸ் நிறுவனம் 1999-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் என்னும் இலக்கை எட்டியது. 2000-ம் ஆண்டு 11 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது. ஆனால், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்ததால் மீண்டும் வருமானம் சரிந்தது.

உதய் கோடக் ஐடியா

2006-ம் ஆண்டு உதய் கோடக்கை சந்தித்து உரையாடினார் ராஷேஷ் ஷா. அப்போது பிஸினஸ் குறித்து பேச்சு சென்றது. பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் இருந்தால் வார நாள்களில் மட்டுமே வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தை சார்ந்த தொழில் என்பது தினமும் பால் கறப்பதுபோல, ஆனால் கடன் பிஸினஸ் என்பது டெய்ரி நிறுவனம் நடத்துவதுபோல. கடனுக்கு வார விடுமுறை எல்லாம் கிடையாது என உதய் கோடக் கூறியிருக்கிறார்.

அதுவரை பங்குச் சந்தை சார்ந்த சேவைகளில் மட்டுமே இருந்த எடில்வைஸ் தற்போது அனைத்துவிதமான நிதி சார்ந்த சேவைகளிலும் செயல்பட்டு வருகிறது. வீட்டுக்கடன், மியூச்சுவல் பண்ட், இன்ஷூரன்ஸ், வெல்த் மேனேஜ்மெண்ட் என நிதிச்சேவை பிரிவில் தவிர்க்க முடியாத குழுமமாக எடில்வைஸ் உள்ளது.

ராஷேஷ் ஷா
ராஷேஷ் ஷா

நாளொன்றுக்கு ரூ.5,000 நஷ்டம் அடைந்து விரக்தியில் இருந்த எடில்வைஸ் இன்று ரூ.75,000 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

ஒரு புகைப்பட கலைஞர் 100 போட்டோகளை எடுப்பார், அவற்றிலிருந்து மிகச் சிறப்பான ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுப்பார். 99 புகைப்படங்கள் வீண்தான் என்றாலும், சிறப்பானதை எட்டுவதற்கு உழைப்பு, அர்ப்பணிப்பு அவசியமானது. அதுபோலத்தான் நாங்கள் பல தோல்விகளை சந்தித்திருக்கிறோம். ஆனால், எங்களிடம் இருக்கும் அனைத்து பிஸினஸ்களும் சிறப்பானவை என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை எனக் கூறுகிறார் ராஷேஷ் ஷா.

ராஷேஷ் ஷா
ராஷேஷ் ஷா

உங்களுக்கு எண்ணம் இல்லை என்றால்கூட உங்களது சுற்றுப்புறத்தை சரியாக வைத்துக்கொண்டாலே போதும், உங்கள் மூலம் என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும் என்பதற்கு ராஷேஷ் ஷா (Rashesh shah) மிகச்சிறந்த உதாரணம்.

- திருப்புமுனை தொடரும்!