Published:Updated:

மோசடித் திட்டங்களில் பணத்தை இழக்காமல் இருக்க இதுவே வழி..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மோசடித் திட்டங்களில் பணத்தை இழக்காமல் இருக்க இதுவே வழி..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு அவசியம் தேவையான டீமேட் (demat) கணக்கை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிவிரைவில் 10 கோடியைத் தொடவிருக்கிறது என்கிற செய்தி உள்ளபடியே நம்மை மகிழ்விப்பதாக இருக்கிறது. கொரோனாவுக்கு முன்புவரை சுமார் 3 கோடி என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் 10 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது அசூர வளர்ச்சிதான்.

10 கோடி டீமேட் கணக்கு என்பது நமக்கு மிகப் பெரிய எண்ணாகத் தெரிந்தாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது பெரிய எண்ணிக்கை இல்லை என்பது புரியும். அமெரிக்காவில் பங்குச் சந்தையில் நேரடியாக அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மறைமுகமாக ஈடுபடுகிறவர் களின் எண்ணிக்கை 60 சதவிகிதத்துக்குமேல். ஆனால், நம் நாட்டில் அது வெறும் 5 சதவிகிதத்துக்குள்தான் இருக்கிறது. 130 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 10 கோடி டீமேட் கணக்குகள் என்பது நிச்சயம் போதாது. இன்னும் அதிகமான மக்களை பங்குச் சந்தை முதலீட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனில், அடுத்த 10 ஆண்டுகளில் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 20 கோடி என்கிற அளவுக்கு இருக்கத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்தினால் போதாது; டீமேட் கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்தக் கணக்குகளை எப்படி கவனமாகப் பயன்படுத்த வேண்டும், டீமேட் கணக்கை வைத்து செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன, செய்யக் கூடாத விஷயங்கள் என்ன, பங்குச் சந்தை முதலீடு எந்தளவுக்கு ரிஸ்க்கானது, ரிஸ்க்கைக் குறைத்து நிறைவான வருமானத்தைப் பெறும் வழிகள் என்னென்ன என்பதை அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும்.

இன்றைய நிலையில், முதலீடு என்று நினைத்து, மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு, பலரும் பல ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறார்கள். அதிக லாபம் என்கிற பேராசையே இதற்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், டீமேட் மூலம் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடானது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியால் வரையறுக்கப்பட்டது. தவறாகப் புரிந்துகொண்டு, பேராசையுடன் பங்குச் சந்தையை அணுகினால், அதிலும் பணத்தை இழக்கும் அபாயம் உண்டு என்பதால், முதலீட்டுக் கல்வியை அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டாயம் தர வேண்டும்.

பங்குச் சந்தை முதலீடு என்பது அறிவுபூர்வமாக வளர்ந்த ஒரு நாட்டுக்கான அடையாளம் ஆகும். அந்த அறிவை நம் மக்கள் அனைவருக்கும் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் வளரும்; மக்களும் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசும், கல்வி நிறுவனங்களும், மக்களும் சேர்ந்து எடுப்பது அவசியம்!

- ஆசிரியர்