கடந்த மே 14-ம் தேதி, சென்னையில் டை சென்னை அமைப்பு 'ஷிப்ட் 2022' என்கிற தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்திற்கு கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை பல்வேறு நகரங்களில் இருந்து 750-க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் வந்திருந்தார்கள். வேறுவேறு தொழில்களைச் செய்யும் தொழில்முனைவோர்கள் ஒரு குழுவாகக் கூடி, தாங்கள் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வைக் கண்டறிவது எப்படி, தாங்கள் பின்பற்றும் நல்ல விஷயங்களை பிற பிசினஸ்மேன்களுடன் பகிர வெளிநாடுகளில் அமைப்புகள் உண்டு. நம் நாட்டில் இப்படிப் பட்ட ஒரு முயற்சியை கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் `பவுன்சிங் போர்டு’ என்கிற பெயரில் பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்கள் தங்கள் அனுபவங்களை இந்தக் கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளும்படி அமைத்திருந்தார் டை சென்னை அமைப்பின் நிர்வாக இயக்குனர் அகிலா ராஜேஸ்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தக் கருத்தரங்கில் முதலில் பேசிய கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே ரங்கநாதன், ``நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் புத்தகங்களைத் தொடவே மாட்டேன், ஆனால் தொழில் தொடங்கியவுடன் அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கிறேன். நல்ல முறையில் பிசினஸ் செய்ய வேண்டும் எனில், நம்முடைய அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் சனிக்கிழமை முழுக்க நான் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்காக செலவு செய்கிறேன்.
இப்போது ஈரோடு, கரூர், திருப்பூர் என சில நகரங்களில் மட்டும் நடக்கும் `பர்சனல் போர்டு’ என்கிற குழுவை எல்லா நகரங்களிலும் செயல்படுத்த விருக்கிறோம். தொழில்முனை வோர்கள் அனைவரும் இந்தக் குழுவில் சேர்ந்து, அவர்களை வளர்த்துக் கொள்வதன், அவர்களின் பிசினஸையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅடுத்து பேசிய விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பா.ஸ்ரீனிவாசன், `கற்றதும் பெற்றதும்’ என்ற தலைப்பில் பேசினார். ``பவுன்சிங் போர்டில் நுழைந்தபின்பு நான் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. அதில் இணைந்தபிறகு நான் கற்ற முதல் பாடம், நமக்குத் தெரியாது என்பதை தெரியாது ஒப்புக்கொள்வதுதான். அப்படித் திறந்த மனதுடன் பிரச்னைகளை அணுகும்போது நமக்கு சரியான தீர்வு கிடைக்கிறது’’ என்றார்.
அடுத்து பேசவந்த இன்டெக்ரா நிறுவனத் தின் சி.இ.ஒ.வான ஶ்ரீராம் சுப்பிரமண்யா, கடந்த 10 ஆண்டுகளில் பவுன்சிங் போர்டு தன்னை எப்படியெல்லாம் செழுமைப்படுத்தி இருக்கிறது என்பது குறித்து பேசினார். ``எங்கள் நிறுவனத்தின் லாபத்தில் 3 சதவிகிதத்தையும், எனது தனிப்பட்ட லாபத்தில் 3 சதவிகிதத்தையும் பொதுக் காரியங்களுக்கு அளிக்கிறோம். எங்கள் நிறுவனத்தைச் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத, சுற்றுச் சுழலுக்கு நன்மை செய்யும் வகையில் நடத்தி வருவதாக’’ குறிப்பிட்டார். இவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களில் சரிபாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். தவிர, விழுப்புரத்துக்கு அருகே உள்ள இவரது பண்ணையில் 10,000 மரங்களை நட்டு, வளர்த்து வருவதாகவும் அவர் சொன்னார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு முதலில் பேசவந்தார் வென்ப்ரோ பாலிமர் நிறுவனத்தின் வெங்கடேஸ்வரன். ``ஈரோட்டில் ‘பர்சனல் போர்டு’ குழுவில் சேருவதற்குமுன்பு என் உடல் எடையைக் குறைக்க எத்தனையோ முறை முயற்சி செய்து தோல்வி கண்டிருக்கிறேன். ஆனால், இதில் சேர்ந்தபிறகு ஒவ்வொரு வாரமும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால், என் உடல் எடையை நன்கு குறைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல, எங்கள் குடும்ப பிசினஸ் அடுத்த தலைமுறைக்கு சென்றடை வதற்கு தேவையான ஆலோசனைகள் அனைத்தும் `பர்சனல் போர்டு’ மூலமே தனக்குக் கிடைத்ததது. என் உடல் ஆரோக்கியம் அதிகரித்திருப்பதுடன், என் மனநலமும் அதிகரித்து, என் பிசினஸும் நன்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த நன்மை எல்லா தொழில்முனைவர்களுக்கும் கிடைக்க வேண்டும்’’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அடுத்து பேசிய, பொன்ப்யூர் நிறுவனத்தின் பொன்னுசுவாமி, ``நான் 60 வயதுக்குப்பிறகு சி.ஐ.ஐ அமைப்புக்கு வந்து பொதுத் தொண்டு ஆற்ற முக்கியமான காரணம், `பவுன்சிங் போர்டு’ நண்பர்கள் தந்த உற்சாக ஊக்குவிப்புதான். `பவுன்சிங் போர்டு’ மூலம் நான் பெற்ற நன்மைகள் பட்டியல் போட முடியாது. நாணயமாக, நேர்மையாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்த பிசினஸ்மேன்களை நட்பாக பெற்றது நான் செய்த பெரும் பாக்கியம்’’ என்றார்.
கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை குலுங்கக் குலுங்க சிரித்த வைத்தார் ஜி.ஆர்.டி ஜிவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் அனந்த பத்மநாபன். ``நல்லவர்கள் சம்பாதிக்கத் தயங்கக்கூடாது. நல்லவர்களிடம் அதிக பணம் சேர்ந்தால்தான் அவர்கள் ஊருக்கு பல நன்மைகளைச் செய்வார்கள். ஒரு மனிதர் ஐந்து கார் வைத்திருந்தாலும் ஒரு காரைத்தான் பயன் படுத்த முடியும். 50 சட்டை வைத்திருந்தாலும் ஒரு சட்டை யைத்தான் போட முடியும். எனவேதான், எங்களுக்கு லாப மாகக் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஊருக்கே தந்துவிடுகிறோம்’’ என்றார்.
இந்தக் கருத்தரங்கில் பேசிய யு.ஆர்.சி நிறுவனத்தின் எம்.டி. தேவராஜன், ஈரோட்டில் பல பர்சனல் போர்டுகளை அமைத்ததைப் பற்றியும், இன்னும் பல புதிய பர்சனல் போர்டுகள் அமைக்கவிருப்பது குறித்தும் பேசினார்.
மதியம் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பேசிய காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், ``நான் ஒரு டாக்டர். தலைமைப்பண்பு எதுவும் இல்லாமல் இருந்த நான் `பவுன்சிங் போர்டில்’ சேர்ந்த பிறகுதான் பல ஊர்களில் மருத்துவமனை அமைத்தேன் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கடைசியில் பேசிய பாரத் மேட்ரிமணி நிறுவனத்தின் சி.இ.ஒ., ``பவுன்சிங் போர்டு குழு உறுப்பினர்களுடன் பேசும்போது புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும். அப்படி கிடைத்தது, எங்களுடைய சமீபத்திய ஐடியா, ஜோடி என்கிற ஆப்’’ என்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டால் சிலபல நல்ல விஷயங்களை `டேக் அவே’யாக எடுத்துச் செல்லலாம் என்கிற எதிர்பார்ப்பில் இந்தக் கருத்தரங்கிற்கு வந்திருந்த தொழில்முனைவோர்கள் அனைவரும் ஏகப்பட்ட நல்ல ‘டேக் அவே’கள் கிடைத்தது கண்டு அதிசயித்துப் போனார்கள். இந்தக் கருத்தரங்கில் பேசியவர் தங்கள் வாழ்க்கையில் பெரும் பாடுபட்டு கற்றுக் கொண்ட பல பிசினஸ் பாடங்களை எல்லாம் சொல்ல, எந்தக் பாடத்தை எடுப்பது, எந்தப் பாடத்தை விடுப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார்கள். ஆக, ‘டேக் அவே’ சுனாமியாகவே இருந்த இந்தக் கருத்தரங்கம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தக் கருத்தரங்கில் ஒரு பகுதியாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பர்ப்பிள்பாண்ட் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி நிறுவனத்தின் இயக்குநர் சுந்தர ஈஸ்வர் இந்தக் கலந்துரையாடலை வழிநடத்த, நான்கு இளம்தொழில் அதிபர்கள், பர்சனல் போர்டு’ மூலம் தங்களுக்குக் கிடைத்த நன்மைகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
``பர்சனல் போர்டு-ல் நாங்கள் சேருவதற்குமுன்பு நாங்கள் எப்போதும் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக் கொண்டு இருப்போம். எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தினோம். நாங்கள் பிசினஸ் செய்வதற்காக எல்லா நேரத்தையும் செலவிடுவதால், அவர்கள் அடையும் வேதனையை முதல்முதலாக தெரிந்துகொண்டோம். எங்கள் குழந்தைகள் எங்கள் அருகாமையை வேண்டி நிற்பதையும் புரிந்துகொண்டோம். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும்போது, எங்கள் முகத்தில் அறைகிற மாதிரி இருந்தது. நாங்கள் செய்த தவறை அவர்கள் எங்களுக்கு சரியாக உணர்த்தினார்கள். இதன்பிறகு மாதம் ஒருமுறை குடும்ப உறுப்பினர்களை வெளியில் அழைத்துச் செல்வது என அவர்களுடன் குறிப்பிடத்தகுந்த அளவு நேரம் செலவழிக்கிறோம். இதனால் எங்கள் வாழ்க்கை அடியோடு மாறியிருப்பதுடன், நாங்கள் மகிழ்ச்சியாகவும், உடல்நலத்துடனும் இருக்கிற அதே நேரத்தில் எங்கள் பிசினஸும் நன்கு முன்னேற்றம் காணத் தொடங்கி இருக்கிறது’’ என்றார்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள்.