Published:Updated:

ஒரு கிராம் ₹4,181-க்கு வந்த தங்கம்... வரும் ஜூலையில் மீண்டும் உச்சம் பெறுமா? #GoldPrice

Gold
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தங்கத்தின் விலை ஏற்றமும்தான் கடந்த 2020-ம் ஆண்டில் அனைவரையும் மிரட்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வேகமாக அதிகரித்தது என்றால், மறுபக்கம் தங்கம் விலை அதைவிட வேகமாக உயர்ந்தது.

தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வரலாறு காணாத உச்சபட்ச விலையை அடைந்தது. அதன்பிறகு, கொரோனாவின் பாதிப்புகள் மெல்ல மெல்லக் குறைய, அனைத்து நாடுகளின் பங்குச் சந்தை வர்த்தகம் தன் பழைய நிலைக்குத் திரும்ப, அன்றிலிருந்து இன்று வரை தங்கத்தின் விலைவீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் (22 காரட்) அன்று 5,416 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்று (5.3.2021) அதே தங்கம் 4,181 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

gold
gold
Image by Nawal Escape from Pixabay
7 மாதத்தில் ₹9,200 விலை குறைந்த தங்கம்... இன்று மட்டும் ₹608 சரிவு... என்ன நடக்கிறது? #Gold

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் ஏழே மாதத்தில் ஏறிய வேகத்தில் விலை குறைய என்ன காரணம், தங்கத்தின் விலை மீண்டும் ஏறும் என்பதைத் தெரிந்துகொள்ள, கமாடிட்டி துறை நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

முதலில் சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் பேசினோம்.

``தற்போதைய தங்கத்தின் விலை வீழ்ச்சியானது, நுகர்வோர்களுக்கும், தங்கத்தின் மீது முதலீடு செய்வோர் களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும். இந்த சரியான நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதே போல, திருமணத் தேவைகளுக்காகத் தங்கத்தை சேமிப்பவர்கள் அல்லது உடனடித் தேவை இருப்பவர்கள் திட்டமிட்டு தங்க நகைகளை வாங்கி வைக்கலாம். இதனால் நுகர்வோர்களுக்கு பெரிய தொகை மிச்சமாகும். ஓரிரு வாரங்களுக்கு தங்கத்தின் விலை வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதன்பிறகு விலை ஏற்றம் ஆரம்பமாகும்.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

நடப்பு மார்ச் மாதத்திலேயே தங்கத்தின் விலை ஏற்றம் ஆரம்பிக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை வர்த்தகமானது சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதால், முதலீட்டாளர்களின் கவனம் இன்னும் தங்கத்தின் மீது திரும்பவில்லை. அதனால் ஏற்றத்தின் போக்கு திசை மாறி, வீழ்ச்சியிலேயே இருக்கிறது. இந்த நிலை மாறி, விலை ஏற ஆரம்பித்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச விலையைக் காட்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வருகிற ஜூலை மாதத்துக்குள், தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது" என்றார் தெளிவாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து, மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனுடன் பேசினோம்.

``கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தங்கத்தின் விலை ஏற்றமும்தான் கடந்த 2020-ம் ஆண்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜெட் வேகத்தின் ஏறிய தங்கத்தின் விலை, ராக்கெட் வேகத்தில் இறங்கிக் கொண்டிருப்பதை நினைத்து, ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் நடுக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சி விரைவில் கட்டுக்குள் வரும். அப்போது விலை வீழ்ச்சி தடைபட்டு, விலை ஏற்றம் தொடரும்.

ஞானசேகர் தியாகராஜன்
ஞானசேகர் தியாகராஜன்

அதனால் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள் பயந்துபோய், தங்கத்தில் செய்திருந்த முதலீட்டிலிருந்து பின்வாங்க வேண்டாம். தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், தங்க நகைகளை வாங்குபவர்களும் இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திச்சாலித்தனம்" என்றவரிடம், தங்கத்தில் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதைக் கேட்டோம்.

"கடந்த வருடத்தில் உலக அளவில் பங்குச் சந்தைகள் உட்பட முதலீடுகள் மோசமான வருமானத்தைக் கொடுத்ததால் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பினார்கள். ஆனால், தற்போது உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. எனவே, முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தைகளில் குவிந்திருப்பதால், தங்கத்தில் முதலீடுகள் குறைந்துவிட்டன. எனவே, தங்கத்தின் விலையும் சரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால், தங்கம் விலை அதிகரிக்கும். இதுவே இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றால், தங்கம் விலை குறையும். கடந்த நவம்பர் 2020-ல் 74.70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 72.8 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.

தங்கம்
தங்கம்

கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கு உத்தரவால் பல நாட்டுப் பொருளாதாரங்கள் செயல்படாமல் இருந்தன. இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பெரும்பாலான பொருளாதாரங்கள் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. பணம் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகளை நோக்கிச் சென்றுவிட்டன. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம்" என்றார்.

தங்கம் விலை இன்னும் இறங்குமா என்று காத்திருப்பதைவிட, இப்போது கொஞ்சம் குறைந்திருக்கும் விலையில் கொஞ்சம் தங்கத்தையாவது வாங்கிவிடுவது நல்லது. அடுத்துவரும் நாள்களில் தங்கம் விலை உயர்ந்துவிட்டால், வாங்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிடுவோம் என்பது நிச்சயம்!

அடுத்த கட்டுரைக்கு