Published:Updated:

ரிலையன்ஸோடு கைகோக்கும் ஃபேஸ்புக்... யாருக்கு என்ன லாபம்?

ஃபேஸ்புக்- ஜியோ
ஃபேஸ்புக்- ஜியோ

2016-ம் ஆண்டு, ஜியோ தொடங்கப்பட்ட தேதியிலிருந்து தற்போது வரை சுமார் 388 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களும், கொரோனா நாள்களுக்குப் பிறகு, 'விர்ரூம்' என விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கின்றன.

ஆம், முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை  43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம். இவ்விரு பெரிய நிறுவனங்களின் இந்த முதலீட்டு இணைப்பு, உலக நாடுகளின் கவனம் மொத்தத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

இதனால் யாருக்கு என்ன லாபம்? டிஜிட்டல் உலகில் இவ்விரு நிறுவனங்களும் நிகழ்த்தப்போகும் மாற்றங்கள் என்னென்ன  என்பன பற்றி இனி பார்க்கலாம்...

ஃபேஸ்புக்கிற்கு அடித்தது யோகம்!

இந்தியா, ஃபேஸ்புக் சமூக வலைதளத்துக்கு உலகிலேயே அதிக பயனாளர்கள் உள்ள நாடாக இருந்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆப்ளிகேஷனுக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பயனாளர்கள் இருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. அதனால், வேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில், ஃபேஸ்புக் நிறுவனம் வலுவான இடத்தைப் பிடிக்க இந்த ஒப்பந்தம் உதவும்.

388 மில்லியன்
ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை!

இசை, நேரலை ஒளிபரப்பு, ஆன்லைன் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளில் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பங்குதாரர் ஆகியுள்ளதன் மூலம், இந்திய வர்த்தகச் சந்தைக்குள் நேரடியாகக் காலடி எடுத்துவைக்கிறது ஃபேஸ்புக். இதனால், இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு ஏற்கெனவே உள்ள தொழில் ஆதாயங்களை விரிவுபடுத்த இந்த முதலீடு நிச்சயம் உதவும். 2016-ம் ஆண்டு ஜியோ தொடங்கப்பட்ட தேதியிலிருந்து தற்போது வரை, சுமார் 388 மில்லியன்  வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் நேரடியாக ஃபேஸ்புக் சென்றடைய முடியும்.

இனி, ரிலையன்ஸுக்கு ரிலாக்ஸ்!

"2021 மார்ச் மாதத்துக்குள், அதாவது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், கடன் ஏதும் இல்லாத நிறுவனமாக மாற வேண்டும்" என முகேஷ் அம்பானி சொல்லிவந்த நிலையில் ஃபேஸ்புக், ஜியோ நிறுவனத்தின் மீது முதலீடு செய்திருக்கிறது. 

இந்தப் பங்கு விற்பனையின்மூலம் கிடைத்திருக்கும் பணம், ரிலையன்ஸ் நிறுவனத்தை கடன் சுமையிலிருந்து கண்டிப்பாக மீட்டெடுக்கும்.  அதுமட்டுமில்லாமல், இந்த முதலீட்டின் மூலம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் உள்ளிட்டவை ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப்-பைப் பயன்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும்.  'ஜியோ மார்ட்' எனும் ஆப் மூலம் உணவுப் பொருள் விநியோகத்தை அதிகரிக்கவும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னதாகத் திட்டமிட்டிருந்தது. அது, இனி எளிதில் சாத்தியமாகும்.

'சிறு, குறு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சின்னச்சின்ன மளிகைக் கடை உரிமையாளர்களும்கூட, வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி ஆர்டர்களைப் பெறலாம்.

அவர்களின் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சிறப்பான சேவைகளை வழகுவதற்கான  ஐடியாக்களையும் விரைவில் நடைமுறைப்படுத்துவோம்' என இந்த முதலீட்டு இணைப்பின்  மூலம் இரு நிறுவனங்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

Shri Mukesh D. Ambani, Chairman, Reliance Industries Limited welcomes Mark Zuckerberg, founder Facebook Inc. as a long...

Posted by Jio on Tuesday, April 21, 2020

இதுகுறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உடனான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ வழிவகுக்கும். இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் ஃபேஸ்புக்கின் செயலிகள் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஆப்ளிகேஷன்களில் ஒன்றாகிவிட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43

குறிப்பாக வாட்ஸ் அப் இந்தியாவின் 23 அதிகாரபூர்வ மொழிகளிலும் கிடைப்பதால் அதிக மக்களால் தினசரி  பயன்படுத்தப்படுகிறது. அதேபோல ரிலையன்ஸ் ஜியோவும் இந்திய குடும்பங்களில் ஓர் அங்கமாக இருக்கிறது. அதனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் இருவரும் சேர்ந்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து வழங்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை!

இந்தியாவில் மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. மத்திய அரசின் இந்தத் தீவிர முயற்சியால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சற்று வேகமாகவே அதிகரித்தது. 

சினிமா டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், மின்கட்டணம், உணவகங்களில் பணம் செலுத்துதல், பணம் கொடுக்கல் வாங்கல், பெட்ரோல் போடுவதற்கு, ஷாப்பிங் செய்வதற்கு என அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பெருகியது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், போன் பே, பேடிஎம், கூகுள் பே, பீம் என்கிற ஆப்களும் பல்வேறு சலுகைகளை வாரி இரைத்தன. 

digital payment
digital payment

இதையெல்லாம் கவனித்துவந்த, ஃபேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் தாங்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கால்பதிக்க வேண்டும் என நினைத்தது. இதற்காகத் தங்களுடைய  'வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடிவுசெய்தது. ஆனால், அந்த அப்ளிகேஷனுக்கான வரவேற்பு இந்திய மக்களிடம் குறைவாகவே இருந்துவந்தது.  குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும் ஜியோவுடன் தற்போது இணைந்திருப்பதால், இனி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பணப்பரிவர்த்தனை விஷயமும் கைகூடும்.

இந்தியாவில் 400 மில்லியன், அதாவது 80% ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாகவும், பல கோடி பேர் ஜியோவை பயன்படுத்துவதாகவும் தரவுகள் சொல்கின்றன.

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்!

ஃபேஸ்புக்குடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆசியாவிலேயே மிகப் பெரும் பணக்காரராகியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இந்த ஒப்பந்தத்தினால், அம்பானியின் சொத்து மதிப்பானது $4.7 பில்லியன் அதிகரித்து $49.2 பில்லியனைத் தொட்டுள்ளது. இவர், சீனாவின் ஜாக் மாவைவிட $3.2 பில்லியன் கூடுதலாகப் பெற்று, ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 

இந்த ஒப்பந்தத்திற்குமுன், அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு பங்குகள் 14 பில்லியன் டாலர் அளவிற்குச் சரிந்து காணப்பட்டது. இது, ஆசியாவிலேயே மிகப்பெரிய இழப்பாகக் கருதப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக்கின் ஒப்பந்தம், அம்பானியின் சொத்து மதிப்பை மீண்டும் உயரச் செய்துள்ளது.

அதிகரிக்கும் அடல்ட் பதிவுகள்... சைபர் புள்ளியிங்... சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது  ஃபேஸ்புக்?

ஏற்றத்தில் ரிலையன்ஸ் பங்குகள்!

ஃபேஸ்புக் உடனான இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 23.04.2020-ம் தேதியும், 24.04.2020-ம் தேதியும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகிவருகின்றன. ஒப்பந்த அறிவிப்பு வெளியான அன்று, ஒரே நாளில் பங்கு வர்த்தகத்தில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமானது. 

RIL
RIL

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1,080 ரூபாயாக இருந்தது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்திற்குப் பிறகு அதிகபட்சமாக 1486.60 ரூபாய்க்கு உயர்ந்து வர்த்தகமாகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை முடியும் போது, இந்நிறுவனத்தின் பங்கு, 46.10 ரூபாய் அதிகரித்து 1,417.00 ரூபாயில் வர்த்தகத்தை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடன் பிரச்னையில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இனி கொஞ்சம் கொஞ்சமாக மீளும் என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை பிறந்திருப்பதாலும், நிறுவனத்தின் செயல்பாடு இனி நன்றாக இருக்கும் என்பதாலும் பங்குவிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக  நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், முக்கியத் தரகு நிறுவனங்களில் ஒன்றான ஷேர்கான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலையை 1,710 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, மோதிலால் ஓஸ்வல் தரகு நிறுவனமும் இலக்கு விலையை 1,589 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆக, டிஜிட்டல் உலகின் முடிசூடா மன்னர்களான ஃபேஸ்புக்-ஜியோ இணைப்பு, இரு நிறுவனத்திற்கும் லாபம் என்பதைத் தாண்டி, மாபெரும் டிஜிட்டல் புரட்சிகளை  இந்தியாவில் நிச்சயமாக ஏற்படுத்தும். 

ஒருங்கிணைந்த பின்னோக்கிய வணிக உத்தி... ரிலையன்ஸ் சாதித்தது எப்படி?
அடுத்த கட்டுரைக்கு