`மகாராஷ்டிரா 1 ட்ரில்லியன் டாலர் எகானமியைத் தாண்டிவிட்டது!' - கமல் சொன்னது சரிதானா?

கமலின் இந்தப் பதிலைக் கேட்டவர்கள், `அட, பொருளாதாரத்தை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருக்கிறாரே!’ என்று வியந்திருப்பார்கள். இந்த விஷயத்தில் உண்மை என்ன? மகாராஷ்டிரா ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டதா?
தமிழகத்தின் மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் பேசாத விஷயங்களைப் பேசுவது உலக நாயகனின் ஸ்பெஷல். ஆனால், அதைப் புரியாதபடிக்குப் பேசிவிடுவதும் அவருடைய ஸ்பெஷல்தான். சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். அதில், `தமிழகத்தின் பொருளாதாரத்தை ஆண்டுதோறும் 10 - 20% உயர்த்தி, அடுத்த 10 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் (சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்) என்கிற அளவுக்கு உயர்த்துவோம்’ என்று தேர்தல் வாக்குறுதி தரப்பட்டிருந்தது.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தார் கமல். அந்தப் பேட்டியில், இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் தொடர்பான வாக்குறுதியைப் பற்றி பேட்டி கண்டவர் கேட்க, அதற்கு கமல் அளித்த பதில், அடப்பாவமே என்றிருந்தது. ``தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது கனவோ, நிறைவேற முடியாத விஷயமோ அல்ல. மகாராஷ்டிரா மாநிலம் அதைச் செய்திருக்கிறது. அந்த மாநிலம் ஒரு ட்ரில்லியன் டாலர் என்பதைத் தொட்டு பல ஆண்டு காலமாகிவிட்டது. அந்த அளவை நாமும் தொட வேண்டும்’’ என்று சொல்லியிருந்தார்.
கமலின் இந்தப் பதிலைக் கேட்டவர்கள், `அட, பொருளாதாரத்தை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருக்கிறாரே!’ என்று வியந்திருப்பார்கள். இந்த விஷயத்தில் உண்மை என்ன? மகாராஷ்டிரா ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டதா?
நாட்டின் ஜி.டி.பி (Gross Domestics product) என்பது விவசாயம், உற்பத்தி, சேவை ஆகிய மூன்று துறைகளின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் ஆகும். நம் நாட்டின் ஜி.டி.பி-யின் மதிப்பு தற்போது சுமார் 2.5 ட்ரில்லியன் டாலர் என்கிற அளவில் இருக்கிறது. ரூபாய் மதிப்பில் இதைச் சொல்ல வேண்டும் என்றால், சுமார் 175 லட்சம் கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். இதனை 2025-க்குள் 5 ட்ரில்லியன் டாலராக (சுமார் 300 லட்சம் கோடி ரூபாயாக) உயர்த்த வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயித்து, செயல்பட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி.பி என அதாவது, Gross State Domestics Product என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மாநிலமும் விவசாயம், உற்பத்தி, சேவை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தின் அடிப்படையில்தான் இந்த ஜி.எஸ்.டி.பி கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில் மிக அதிகமான ஜி.எஸ்.டி.பி வருமானம் கொண்ட மாநிலம் கமல் சொன்னதுபோல மகாராஷ்டிராதான். ஆனால், அவர் சொன்ன மாதிரி, அதன் ஜி.எஸ்.டி.பி மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர் அல்ல. 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்படி, மகாராஷ்டிராவின் ஜி.எஸ்.டி.பி ரூ.32.24 லட்சம் கோடி மட்டுமே. இதை டாலர் கணக்கில் சொல்ல வேண்டும் என்றால், 0.5 ட்ரில்லியன் டாலருக்கும் கொஞ்சம் கீழே என்று சொல்லலாம். ஒரு ட்ரில்லியன் டாலர் என்கிற இலக்கில் பாதிக் கிணறைக்கூட மாகாராஷ்டிரா தாண்டவில்லை. ஆண்டுதோறும் சுமார் 20% பொருளாதார வளர்ச்சி கண்டால் மட்டுமே அடுத்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மகாராஷ்டிராவால் மாற முடியும் என்பதுதான் உண்மை நிலை.
தமிழகத்தின் ஜி.எஸ்.டி-யின் மதிப்பு மகாராஷ்டிராவின் ஜி.எஸ்.டி மதிப்பில் சுமார் 65 சதவிகிதம்தான். கடந்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்படி, தமிழகத்தின் ஜி.எஸ்.டி.பி மதிப்பு ரூ.20.91 லட்சம் கோடி மட்டுமே. இது சுமார் 0.30 ட்ரில்லியன் என்று வைத்துக்கொள்ளலாம். தமிழகத்தின் ஜி.எஸ்.டி.பி ஆண்டுதோறும் 25% என்கிற அளவில் வளர்ந்தால் மட்டுமே 10 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை அடைய முடியும். இவ்வளவு வேகமாக நம்மால் வளர முடியுமா, முடியும் எனில் அதற்கான திட்டங்கள் என்ன என்பதெல்லாம் மிகப் பெரிய கேள்விகள்.

மாநிலங்களின் மொத்தப் பொருளாதார உற்பத்தி குறித்த நிலவரங்கள் இப்படி இருக்க, மேற்சொன்ன நேர்காணலில் தவறான தகவலை உதாரணமாகக் காட்டி பேசியிருக்கிறார் கமல். இனியாவது புள்ளி விவரங்களை சரியா தெரிஞ்சுகிட்டு பேசுங்க கமல்!