Published:Updated:

தமிழக அரசு ஊழியர்களுக்கான எளிதாக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய முறை!

ஓய்வூதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியம்

ஓய்வூதியம்

தமிழக அரசு ஊழியர்களுக்கான எளிதாக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய முறை!

ஓய்வூதியம்

Published:Updated:
ஓய்வூதியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வூதியம்

தனக்குப் பிறகு தன் குடும்பத்தினர் சிரமப்படக்கூடாது’ என்கிற பொறுப்புணர்வு, எல்லாக் குடும்பத் தலைவர்களிடமும் இருக்கிறது. சேமிப்பது, முதலீடு செய்வது, சொத்து சேர்ப்பதெல்லாம் குடும்பப் பாது காப்புக்காகத்தான். அந்த வகையில் அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்புக்கென அரசே செய்து தந்திருக்கும் ஒரு ஏற்பாடுதான், ‘குடும்ப ஓய்வூதியம்’ என்பது.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

இரண்டு வகை...

பழைய பென்ஷன் திட்டத்தின்கீழ் பணியில் உள்ள அரசு ஊழியருக்கான குடும்ப ஓய்வூதியம் என்பது இரு வகையாக உள்ளன. அதாவது, பணியில் உள்ளபோது இறந்துபோகும் ஊழியரின் குடும்பத்துக்குத் தரப்படும் குடும்ப ஓய்வூதியம் என்பது ஒரு வகை. பணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இறந்துபோனால் அவரின் குடும்பத்துக்குத் தரப்படும் குடும்ப ஓய்வூதியம் என்பது இரண்டாவது வகை.

இந்த இரண்டாவது வகை குடும்ப ஓய்வூதியத்தை ஓய்வு பெற்று இறந்துபோன அரசு ஊழியரின் குடும்பத்தினர் சிரமம் இல்லாமலும், காலதாமதம் இல்லாமலும், எளிதாகப் பெறுவதற்கு ஏற்றபடி தற்போதைய நடைமுறையில் சில மாற்றங்களையும் செய்துள்ளது தமிழக அரசாங்கம். இந்த மாற்றங்களைத் தெரிந்துகொள்ளும் முன் தற்போதைய நடைமுறை என்ன என்று பார்ப்போம்.

தற்போதைய நடைமுறை...

ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் ஓய்வு பெறும் தருணத்தில் அவருக்கு மனைவி (அல்லது கணவர்) இருந்தால், இணை ஓய்வூதிய ஆணையை (Joint Pension Payment Order) மாநிலக் கணக்காயர் வழங்கிவிடுவார். இந்த ஆணையில், குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர் என்கிற பத்தியில் அவரின் மனைவி (அல்லது கணவர்) பெயரை மாநிலக் கணக்காயர் குறிப்பிட்டிருப்பார்.

ஓய்வு பெற்ற ஊழியர் இறந்துபோகும்போது அவரின் மனைவி (அல்லது கணவர்) ஊழியர் இறந்துபோகும் வரை எந்தக் கருவூலத்தில் பென்ஷன் பெற்று வந்தாரோ, அந்தக் கருவூலத்தை அணுகி, படிவம் 14-ஐ நிரப்பி விண்ணப்பம் செய்தால், அந்தக் கருவூல அதிகாரியே அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, குடும்ப ஓய்வூதியத்தை அளிக்கத் தொடங்கிவிடுவார். இது எளிய நடைமுறை தான் என்றாலும், இந்தப் பயனைப் பெறுவதில் சிலருக்கு சிறிது இடர்ப்பாடு இருக்கவே செய்கிறது.

அதாவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்த பின், குடும்ப பென்ஷன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 14-ல் 12 பத்திகளில் முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதைப் பூர்த்தி செய்து கையொப்பமிடுவதுடன், இரண்டு தனித்தாள்களில் குடும்ப பென்ஷன் பெற உள்ளவரின் மாதிரி கையொப்பம், உயரம் மற்றும் அங்க மச்சம் தொடர்பான அடையாளம், குழந்தைகள் இருப்பின் அவர்களது வயதுக்கான சான்று ஆகியவற்றுடன் இறப்புச் சான்றையும் இணைக்க வேண்டும். இதனுடன், அரசு அதிகாரி ஒருவரின் அல்லது வசிப்பிடத்தில் பிரபலமாக உள்ள இருவரின் சான்றொப்பம் பெற வேண்டும். தவிர, இரண்டு சாட்சிகளின் கையொப்பமும் பெற வேண்டும்.

இந்த நடைமுறை சற்று சிரமமாக இருப்பதால், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதிய நடை முறையைக் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு ஊழியர்களுக்கான
எளிதாக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய முறை!

புதிய நடைமுறை

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய முறையின்படி, இணை ஓய்வூதிய ஆணையில் மனைவி (அல்லது கணவர்) என்று மாநிலக் கணக் காயரால் குறிப்பிடப்பட்டு உள்ளவர், பென்ஷன் பெற்றுவந்த தன் கணவர் (அல்லது மனைவி) இறந்துபோனால், குடும்ப பென்ஷன் பெறுவதற்கான படிவம் 14-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. பென்ஷன்தாரர் இறந்து போன தகவல் கிடைத்ததும், கருவூல அதிகாரியே இறந்து போனவரின் சர்வீஸ் பென்ஷ னைக் குடும்ப பென்ஷனாக மாற்றிவிடுவார். இதனால், குடும்ப உறுப்பினர்கள் எந்தச் சிக்கலும் இன்றி, குடும்ப பென்ஷன் பெற முடியும்.

செய்ய வேண்டியது என்ன?

இதற்கு அரசு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அரசு ஊழியர் ஒருவர், தான் ஓய்வு பெறும் தேதிக்கு சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே தனக்கான ஓய்வூதியம், பணிக் கொடை, கம்யூடேசன் முதலான வற்றைப் பெறுவதற்குப் படிவம்-5-ஐ பூர்த்தி செய்து, அதைத் தனது அலுவலக அதிகாரி மூலம் மாநிலக் கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது ஓய்வு பெறுப வரின் பெயர், வாழ்க்கைத் துணைவி/துணைவர் தொடர் பான விவரம், பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி, அங்க மச்ச அடையாளங்கள், மாதிரி கையொப்பம், வங்கிக் கணக்கு விவரம் தொடர்பான பல விவரங்களை தனி இணைப்பில் அளிக்க வேண்டும்.

இப்படிச் செய்தபின், ஓய்வு பெற்ற ஊழியர் பிற்பாடு இறந்து போனபின் அவரின் மனைவி (அல்லது கணவர்) ஓய்வு பெற்றவர் வசம் உள்ள இணை ஓய்வூதிய ஆணை, ஒரிஜினல் இறப்புச் சான்று, மறுமண செய்யாததற்கும், பணியில் இல்லை என்பதற்கும் சுய (கையொப்பமிட்ட) சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத் தின் முதல் பக்க நகலுடன் கருவூலம் சென்று குடும்ப ஓய்வூதியம் பெறத்தொடங்கலாம். இதுவே, புதிய, எளிய நடைமுறை.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

 ஓய்வு பெறும் ஊழியரின் மனைவி (அல்லது கணவர்) உயி ருடன் உள்ள நிலையில் மட்டுமே இந்த நடைமுறை பொருந்தும்.

ஓய்வு பெறும் அரசு ஊழிய ருக்கு மனைவியோ, கணவரோ இல்லை எனில், இந்த நடைமுறை பொருந்தாது. இறந்துபோன ஊழியரின் மகன்/மகள் கடைசியாகப் பணியாற்றிய அரசு அலுவலகம்மூலம் விண்ணப்பித்துதான் குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்.

 ஓய்வு பெறும்முன்பே ஊழியரின் மனைவி (அல்லது கணவர்) இறந்துபோய், மறுமணம் செய்துகொள்பவர்கள், முதல் மனைவியின் (அல்லது கணவர்) மரணச்சான்றை சமர்ப்பிக்க வேண்டும். மனைவி (அல்லது கணவர்) விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்திருந்தால், விவாகரத்துக்கான நீதிமன்றத் தீர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.

 தற்போது புதிதாகத் தரப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்ட மனைவி (அல்லது கணவர் ) பெயரும், ஊழியரின் பணிப் பதிவேட்டில் உள்ள மனைவி (அல்லது கணவர்) பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இறப்பு / விவாகரத்து இனங்களில் பணிப்பதிவேட்டில் படிவம் – 3-ல் உள்ள மனைவி (கணவர்) பெயரை அப்டேட் செய்வது அவசியம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான
எளிதாக்கப்பட்டுள்ள குடும்ப ஓய்வூதிய முறை!

வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டிய வழிமுறைகள்!

கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்தர நேர்காணல் நடப்பு ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. வாழ்நாள் சான்று நடைமுறையும் மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்ய கருவூல அதிகாரியின் முன்பு நேரில் ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராக இயலாதவர்கள் தன் வங்கி அதிகாரி, மத்திய - மாநில கெசட்டட் அதிகாரி, வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் வாழ்நாள் சான்று பெற்று தபால் மூலம் கருவூல அதிகாரிக்கு அனுப்பலாம். அல்லது, ஆதார் பதிவுடன் கூடிய கைரேகை பதிவு செய்து ‘ஜீவன் பிரம்மான்’ போர்டல் மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்.

இந்த ‘ஜீவன் பிரம்மான்’ சான்றைப் பதிவு செய்ய இந்திய அஞ்சல் துறை பேமென்ட் வங்கி ஊழியர் ஓய்வூதிய / குடும்ப ஓய்வூதியதாரரின் வீட்டுக்கே வந்துவிடுவார். கட்டணம் ரூ.70. இ-சேவை, பொதுச் சேவை மையம் மூலமோ, பயோ மெட்ரிக் வசதி உள்ள பென்ஷனர் சங்கம் மூலமோகூட நீங்கள் ‘ஜீவன் பிரம்மான்’ வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கலாம் என்பதே புதிய நடைமுறை.

இந்திய அஞ்சல் துறை சேவை பெற ஓய்வூதிய/ குடும்ப ஓய்வூதியதாரர்களின் பெயர், ஆதார் எண், முகவரி, மொபைல் எண் ஆகியவை அஞ்சல் துறை பேமென்ட் வங்கிக்கு பகிரப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிப்போர் https://cms.tn.gov.in/sites/default/files/whatsnew/revised_life_certificate.pdf என்கிற லிங்கில் வாழ்நாள் சான்றுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அதிகாரி/ மாஜிஸ்ட்ரேட்/ நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெற்று, தபால் மூலம் தனது ஓய்வூதியம் தரும் கருவூலத்துக்கு அனுப்பலாம்.