லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

பண நிர்வாகம்... சரியாகக் கையாள்வது எப்படி? - புதுமணத் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்!

புதுமணத் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதுமணத் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்!

ஆயுள் காப்பீட்டு பாலிசி ஏற்கெனவே எடுத்திருக்கும்பட்சத்தில் அதில் நாமினியாக இணையர் பெயரை மாற்றுவது அவசியம்.

திருமண வாழ்க்கையின் அடிப்படை பிரச்னைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நிதி சார்ந்த விஷயங்கள் இருப்பதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்தத்துக்கும், திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிவுவரை செல்லவும்கூட பல நேரங்களில் நிதி சார்ந்த விஷயங்கள் காரணமாவதைப் பார்க்கிறோம். இந்த நிலை ஏற்படாமலிருக்க திருமணமானதிலிருந்தே தம்பதியர் பண நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். அப்படிச் சில விஷயங்களைப் பார்ப்போமா....

பண நிர்வாகத்தில் இணக்கம்...

முதலில் நீங்களும் உங்கள் இணையரும் (கணவன்/மனைவி) பண நிர்வாகத்தில் எவ்வளவு இணக்கமாக இருக் கிறீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். செலவு செய்வதில் நீங்கள் தாராளமாக இருக்கலாம். உங்கள் இணையர் சிக்கனமாக இருக்கலாம் அல்லது இருவரும் சிக்கனமாகவோ அல்லது இருவரும் தாராளவாதிகளாகவோ இருக்கலாம்.

கா.ராமலிங்கம், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

உங்கள் பார்வையில் ஃபிக்ஸட் டெபாசிட்டும் தங்கமும் சிறந்த முதலீடுகளாக இருக்கலாம். உங்கள் இணையரோ பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்தான் சிறந்த முதலீடுகள் என நினைக்கலாம். நீங்கள் இருவரும் இருவரின் செலவு செய்யும் முறை, முதலீட்டில் உள்ள சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். செலவு, முதலீடு ஆகியவற்றுக்கு பொது வான ஒரு முறையை உருவாக்கிக்கொள்வது நல்லது அல்லது உங்களின் சேமிப்பை ஃபிக்ஸட் டெபாசிட், தங்கத்திலும் உங்கள் இணையரின் சேமிப்பை பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டிலும் போடுவதாக முடிவு செய்துகொள்ளலாம். பணம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவும்.

ஆவணங்களில் பெயர் மாற்றம்..

திருமணத்துக்குப் பிறகு பல்வேறு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டி வரலாம். புதிய இடத்தில் குடியிருக்கும்பட்சத்தில் இருவரின் வங்கிக் கணக்குகள், முதலீட்டுக் கணக்குகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்வது அவசியமாகும். அடுத்து இருவருக்கும் சேர்த்து புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மனைவி, கணவர் பெயரின் முதல் எழுத்தை தங்களின் இனிஷியலாக மாற்றிக்கொள்ள முடிவெடுக்கும்போது வங்கிக் கணக்கு தொடங்கி பல ஆவணங்களில் அதனை மாற்று வது மிக அவசியம்.

நாமினி மாற்றம்..

ஆயுள் காப்பீட்டு பாலிசி ஏற்கெனவே எடுத்திருக்கும்பட்சத்தில் அதில் நாமினியாக இணையர் பெயரை மாற்றுவது அவசியம். அதேபோல் வங்கிக் கணக்குகள், முதலீடு களிலும் நாமினியை மாற்றுவது நல்லது. இல்லை என்றால் ஏதாவது சிக்கல், அசம்பா விதம் என்றால் அதன் பலன் போய்ச்சேராமல், பெற்றோர் வழியிலான குடும்ப உறவுகளுக்குப் போய்ச்சேரக் கூடும். அவர்கள் உங்களின் இணையருக்கு அந்தப் பலனைத் தருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது குடும்ப உறவுக்குள் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கும்.

வயதான பிறகுதான் உயில் எழுதி வைக்க வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. இப்போதே உங்களின் முதலீடு கள் மற்றும் சொத்துகள் குறித்து உயில் எழுதி வைத்து விடுவது நல்லது. உயில் எழுதவில்லை என்றால் உங்களின் சொத்துகள் உங்கள் பாசத்துக்குரிய, உங்களை நம்பி இருக்கும் இணையருக்கு முழுமையாகப் போய்ச்சேராது. அது சட்டப்படியான வாரிசுகள் அனை வருக்கும் பிரிந்து செல்லும்.

பண நிர்வாகம்... சரியாகக் கையாள்வது எப்படி? - புதுமணத் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்!

நிதிப் பொறுப்புகள் ஒதுக்கீடு..

தினசரி குடும்பச் செலவுகளை யார் கவனித்துக்கொள்வது, மின்சாரக் கட்டணம், காப்பீட்டு பாலிசி பிரீமியம் உள்ளிட்ட கட்டணங்களை யார் கட்டு வது, முதலீடுகளை யார் கவனித்துக் கொள்வது என்பதைப் பிரித்துக்கொண்டு செயல்படுவது நல்லது. இந்தப் பணிகளில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது நல்லது. காரணம், யாருக்காவது உடல்நிலை சரியில்லை அல்லது வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருந்தால் அடுத்தவர் அந்த வேலையைச் சுலபமாகச் செய்ய முடியும்.

குடும்ப பட்ஜெட் முக்கியம் பாஸ்...

பணத்தை சரியாகக் கையாள குடும்ப பட்ஜெட் போடுவது மிக முக்கியம். இந்த பட்ஜெட்டில் இருவரின் சம்பளத்தைச் சேருங்கள். அதேபோல் இருவரின் செலவுகளையும் சேருங்கள். மொத்த வருமானத்தில் அவசிய தேவைக்கு 50%, ஆசைக்கு 30%, சேமிப்புக்கு 20% என்று ஒதுக்கிச் செலவிட்டால் தேவையில்லாத செலவுகள் குறைவதோடு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகாது. பட்ஜெட் போட்டு செலவு செய்யும்போது உங்கள் பணம் எங்கே செல்கிறது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். தேவையில்லாத செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கு சேமிப்பு சுலபமாக இருக்கும்.

அவசரகால நிதி அவசியம்..

பல குடும்பங்களில் திடீர் செலவு வரும்போது திண்டாடிப் போகி றார்கள். அவர்களிடம் அவசரகால நிதி எதுவும் இல்லாததுதான் காரணம். திடீர் மருத்துவச் செலவு, வேலை இழப்பு, வேலை மாற்றம், வாகனம், வீடு மற்றும் வீட்டு உப யோகப் பொருள்கள் திடீ ரென பழுதாகி விட்டால் அவசரகால நிதி இருந்தால் நிலைமையைச் சமாளிக்க முடியும். பொதுவாக, குடும்பச் செலவில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான தொகையை அவசரகால நிதியாக வைத்திருப்பது நல்லது.

ஆயுள் காப்பீடு கவரேஜ்... தாமதம் வேண்டாம்

ஒருவரோ அல்லது இருவருமோ வேலை பார்க்கும் பட்சத்தில் இதுவரை ஆயுள் காப்பீடு எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுங்கள். ஏற்கெனவே எடுத்திருக்கும் பட்சத்தில் கவரேஜ் போதுமான அளவுக்கு இருக்கிறதா என பாருங்கள். பொதுவாக, வேலை பார்ப்பவர் பெயரில் ஆண்டு சம்பளத்தைப்போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். இருப்பதிலேயே மிகக் குறைவான பிரீமியம் பாலிசி கொண்ட டேர்ம் பிளான் எடுப்பது சரியாக இருக்கும். இருவருக்கும் தனித்தனியே மருத்துவக் காப்பீடு இருக்கும்பட்சத்தில் அதன் கவரேஜ் போதுமானதா என சரி பார்க்கவும். இருவருக்கும் இல்லை என்றால் இணைந்து பாலிசி எடுத்துக்கொள்ளவும். ஒருவருக்கு மட்டும் பாலிசி இருக்கும்பட்சத்தில் மற்றவரை அந்த பாலிசியில் இணைத்துக் கொள்ளவும்.

மேலும், மகப்பேறு செலவுகளுக்கு பாலிசியில் கவரேஜ் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். இல்லை என்றால் பாலிசியை புதுப்பிக்கும் போது அதை துணை பாலிசியாக எடுத்துக்கொள்ளவும். புதிதாக பாலிசி எடுப்பதாக இருந்தால் இந்த கவரேஜ் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வது அவசியம்.

கடனை அடைத்துவிடுங்கள்!

உங்களுக்கு ஏதாவது கடன் இருந் தால், அதை அடைக்கத் திட்ட மிடவும். அதிக வட்டியிலான கடனை முதலில் அடைக்கவும். அப்படிச் செய்யும்போது வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும். மேலும், வீட்டுக் கடன் போன்றவற்றை மெதுவாக அடைப் பதில் தவறில்லை. திரும்ப கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைப்பதுதான் காரணம்.

ஒருங்கிணைந்த நிதித்திட்டம்....

சொந்த வீடு வாங்குவது, வெளி நாட்டுச் சுற்றுலா, கார் வாங்குவது உள்ளிட்ட நிதி இலக்குகளை நிறை வேற்ற, கடன் வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ இருவரும் இணைந்து ஒருங்கிணைந்த நிதித் திட்டத்தை உருவாக்குங்கள். தேவைப்பட்டால் நிதி ஆலோசகரின் உதவியை நாடத் தயங்காதீர்கள். கூடவே பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் மற்றும் உங்களின் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டுக் கும் இப்போதே திட்டமிடுங்கள். நீண்டகாலம் இருப்பதால் குறைவான தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும்.