Published:Updated:

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் இதெல்லாம் அவசியம்! நிபுணர் அலசல்

Representational Image
Representational Image

பொருளாதாரத்தை மீட்டெடுக்க, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனப்பங்குகளை வாங்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் நல்ல நிலையில் இயங்கும் நிறுவனங்களில் சிலவற்றை விற்கவேண்டியிருக்கும். ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு எழக்கூடும்.

கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.1 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த சர்வதேச நாணய நிதியம், தற்போது தனது கணிப்பை 4.8 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. இந்தக் கணிப்பு மேலும் குறைவதற்கு வேண்டுமானால் வாய்ப்பிருக்குமேயொழிய அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Representatonal Image
Representatonal Image

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, வாராக்கடனில் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது, பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைப்பது, ஜி.எஸ்.டி வரிவிகித வரம்பைக் குறைப்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. எனினும் பொருளாதார இறக்கத்திலிருந்து மீள்வதாக இல்லை. இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளோடு பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பொருளாதார நிலையை மீட்டெடுப்பதற்கான பல்வேறு அறிவிப்புகள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரச்சரிவை மீட்டெடுக்க பட்ஜெட் அறிவிப்பில் என்னென்ன செய்ய வேண்டுமென்று, பொருளாதார வல்லுநரும், தமிழ்நாடு திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினருமான ஜி.சிதம்பரத்திடம் கேட்டோம்.

``உற்பத்தியான பொருள்களுக்கும் பணியாளர்களுக்கும் இருக்கின்ற தேவைப்பாடுதான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக இருக்கிறது. உற்பத்திப்பொருளுக்கான தேவை குறைந்தால் உற்பத்தியும் குறையும். உற்பத்தி குறைந்தால் முதலீடு குறையும். வேலைவாய்ப்பும் குறையும். இவையனைத்துமே சங்கிலித்தொடர்போல சுழற்சியாக இயங்குபவை. இச்சுழற்சியில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்பு மற்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தற்போது குறைவாக உள்ள தேவைப்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினால், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கலாம்.

திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் ஜி.சிதம்பரம்
திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் ஜி.சிதம்பரம்

மேற்கூறியதைத் தத்துவார்த்தமாகப் பார்க்கையில் எளிமையாக இருக்கிறது. `கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே!' என்ற தத்துவம் எளிமையாக இருந்தாலும், கடைப்பிடிப்பது கடினமாக இருப்பதைப் போல, ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் கடினமானதாக இருக்கும். பொதுவாக, பொருளியல் கோட்பாடுகள் மூன்று வழிமுறைகளைக் கொண்டுள்ளன.

பணவியல் வழிமுறைகள் (Monetary policy measures)

அயல்நாட்டு வணிக முறைகள் (Trade policy measures)

நிதியியல் வழிமுறைகள் (Fiscal policy measures)

உற்பத்தியைப் பெருக்குவதற்கு உதவியாக வரி விகிதங்களைக் குறைத்து கடன் அளிப்பதை எளிமைப்படுத்துவதே பணவியல் கொள்கையாகும். இதன்படி, கடந்த 2019-ல் ரிசர்வ் வங்கி 5 முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்தபோதும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏற்கெனவே வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் பொதுத்துறை வங்கிகள், கடன் அளிப்பதை ஊக்கப்படுத்தும் நிலையில் இல்லை. எனவே, ரிசர்வ் வங்கி அளித்த ஊக்கமருந்து பலனளிக்கவில்லை என்றே கருத வேண்டும். அடுத்த முயற்சியாக ஏற்றுமதியை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்கலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆர்.சி.இ.பி (Regional Comprehensive Economic Partnership) எனப்படும் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளின் கூட்டமைப்பில் இறுதிக்கட்டமாக இணைந்து செயல்பட இந்தியா மறுத்துவிட்டது. அயல்நாட்டு வணிகத்தில் இந்தியாவின் வலிமையின்மையையே இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Representational Image
Representational Image

அடுத்து நிதியியல் சார்ந்த வழிமுறைகளைப் பார்த்தோமானால், வரிச்சுமையைக் குறைத்து அதன்மூலம் நுகர்வு, தேவை, உற்பத்தி மூன்றையும் பெருக்க முயலலாம். கார்ப்பரேட் வரியை ஏற்கெனவே குறைத்தாயிற்று. மேலும் குறைக்க வாய்ப்பில்லை. தனிநபர் வருமான வரியில் சலுகைகள் அளித்து நுகர்வைப் பெருக்கலாம். ஜி.எஸ்.டி-யில் உள்ள உயர் வரிவிகிதங்களைக் குறைத்து சீர்படுத்தலாம். புதிய வரிகளை விதிப்பதற்கோ, வரிக்கட்டணங்களை அதிகரிப்பதற்கோ வாய்ப்பேயில்லை. ஆனால், செலவினங்களைக் கட்டாயம் பெருக்க வேண்டும். அதன்மூலம் தொய்வுகண்டுவரும் தேவைகளைப் பெருக்கலாம். ஆனால் வருவாய் குறைய, செலவினங்கள் அதிகரிக்க, பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்குமே? வேறுவழியில்லை. பற்றாக்குறையைச் சமாளிக்க கடனைத் திரட்டுவதே ஒரே வழி. ஆனால், நிதிப்பற்றாக்குறை ஜி.டி.பி-யில் 3 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று நியதி இருக்கிறதே? அசாதாரணக் காரணங்களை எடுத்துக்கூறி, நியதியை மீறுவதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது எளிதுதானே?

பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும்போது கடனைப் பெருக்கி வளர்ச்சியை ஊக்குவிப்பது தவறான செயலல்ல என்று கருத வேண்டும். அனைத்துக்கும்மேலே இன்னொரு வழிமுறையும் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சந்தைப்படுத்தி நிதி திரட்டுவதே அந்த வழிமுறை. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனப்பங்குகளை வாங்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் நல்ல நிலையில் இயங்கும் நிறுவனங்களில் சிலவற்றை விற்கவேண்டியிருக்கும். ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு எழக்கூடும். பற்றாக்குறை பட்ஜெட் என்பது புதிதல்ல. பற்றாக்குறையின் அளவிலும், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளிலும்தான் மாற்றங்கள் இருந்திருக்கின்றன. எனவே, செலவினங்களை 35 லட்சம் கோடிக்குமேல் உயர்த்த வாய்ப்புள்ளது. பொருளாதாரக் கோட்பாடு வகுத்துக்கொடுக்கும் வட்டத்துக்குள்தான் பயணிக்க வேண்டுமென்று எந்த நிர்பந்தமும் இல்லை. நம் நிதி அமைச்சர் எந்த வழியைப் பின்பற்றப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வருமான வரி மூலம் இந்திய அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு? #Budget2020

இவர் கூறுவதைவைத்துப் பார்க்கும்போது வரவுள்ள பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும்நோக்கில் வரிச்சலுகைகள், ஜி.டி.பி குறைப்பது, வங்கிகளின் வட்டிவிகிதக்குறைப்பு போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இத்தகைய அறிவிப்புகள் இல்லாதபட்சத்தில் மக்களிடையே பணப்புழக்கம் மேலும் குறைந்து பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கக்கூடும். நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை இதற்கு பதிலளிக்குமா?

அடுத்த கட்டுரைக்கு