Published:Updated:

₹1.5 லட்சம் கோடி கூடுதல் கடன், PF மானியம், இலவச விசா; நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தவை என்னென்ன?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( Photo: Twitter// @PIB_India )

ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15,000 அல்லது அதற்கும் கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை , நிறுவனத்தின் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை என 24% தொகை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

கொரோனா தொற்றின் முதல் அலை மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது அலையும் நாட்டு மக்களிடையே பொருளாதார அச்சத்துடன் மருத்துவ ரீதியிலான பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தொழில்கள் நசிந்து பலர் வருமானமில்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ``கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அதிக நிதியுதவி அளிக்கும் நோக்கத்துடன், ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதில், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். இதற்கான வட்டி விகிதம் 7.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் வசதி மூன்று ஆண்டுகள் அமலில் இருக்கும்.

கடன்
கடன்

ரூ.1.1 லட்சம் கோடியில் மீதமிருக்கும் ரூ.60,000 ஆயிரம் கோடி நிதி மற்ற துறைகளுக்கான ஒதுக்கப்படுகிறது. இதற்கும் மத்திய அரசாங்கம் கடன் உத்தரவாதம் வழங்கும். இதற்கான வட்டி விகிதம் 8.25% நிர்ணயிக்கப்பட்டுள்ளது . கடன் உத்திரவாதம் வழங்காதபோது, இந்த வகை கடன்களுக்கான வட்டி 10-11% என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, அவசரக் கால கடன் வசதியாக தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு `Emergency Credit line Guarantee Scheme' என்கிற திட்டத்தின்கீழ் ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கிழ் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்களில் ரூ.1.25 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு அரசு உத்தரவாதம் கொடுக்கும். இதன் மூலமாக 25 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்தக் கடனுக்கான வட்டி என்பது, வங்கி விதிக்கும் வட்டியுடன் கூடுதலாக 2% வசூலிக்கப்படும். அதிகபட்ச கடன் கால அளவு மூன்று வருடங்கள் ஆகும்.

பி.எஃப். மானியம்!

வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு, `ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் யோஜனா' திட்டத்தின் கீழ், சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15,000 அல்லது அதற்கும் கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை , நிறுவனத்தின் பங்களிப்பாக 12% பி.எஃப். தொகை என 24% பி.எஃப். தொகை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இதற்கு பணியாளர்களின் எண்ணிக்கை 1,000-க்குள் இருக்க வேண்டியது அவசியம்.

Provident Fund
Provident Fund
``பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு!" - நிர்மலா சீதாராமன்

ஒருவேளை, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12% மட்டும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டம் 30.06.2021-லிருந்து 31.03.2022-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறைக்கு முக்கிய பங்கு உண்டு. கடந்த 2019-ம் ஆண்டில் 1.10 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களால் 31 பில்லியன் டாலர் அதாவது, சுமார் ரூ.2.30 லட்சம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் சராசரியாக 21 நாட்கள் இந்தியாவில் தங்குகிறார்கள்.

Tourism - Representational Image
Tourism - Representational Image
Image by Rudy and Peter Skitterians from Pixabay

அவர்கள் சராசரியாக தினமும் இந்திய மதிப்பில் ரூ.2,400 அளவுக்கு செலவு செய்கிறார்கள். இது உள்நாட்டு பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கிறது. எனவே, சுற்றுலாத் துறையை உக்குவிக்கும் விதமாக, கொரோனா பிரச்னைகள் முடிந்து, இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்பட ஆரம்பிக்கும்போது முதல் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு