Published:Updated:

நிதியமைச்சரின் இரண்டாம்கட்ட நிதி அறிவிப்பு... யாருக்கு பலன் அளிக்கும்? ஓர் அலசல்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் இரண்டாம்கட்ட அறிவிப்பாக, புலம் பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கான 9 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழில்துறையை மேம்படுத்தவும் குறைவான வருமானம் கொண்ட மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கவும் பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கும் என்றும் கூறியிருந்தார்.

முதல் கட்டமாகச் சிறு குறு தொழில்களுக்கான 15 அம்சங்களை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இரண்டாம் கட்ட அறிவிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் ஆகியோருக்கான 9 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சரின் பி.எஃப்., இ.எஸ்.ஐ அறிவிப்புகள், சிறு குறு நிறுவனங்களுக்குப் பயனளிக்குமா? ஓர் அலசல்!
மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு அறிவிப்பு
நிதி அமைச்சரின் அறிவிப்புகள்

1. அடுத்த இரண்டு மாதங்களுக்கு அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்படும். இதற்காக 3,500 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த ரேஷன் பொருள்கள் மாநில அரசு மூலம் விநியோகிக்கப்படும். இப்பொருள்களைப் பெறுவதற்கு ரேஷன் அட்டை தேவையில்லை. இதன்மூலம், தற்போது வருமானம் இல்லாமல் தவித்து வரும் சுமார் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

2. `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், நகரங்களில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகைக்குக்கு வீடுகள் கட்டித்தரப்படும். அரசு நிலங்களில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து PPP முறையில் இந்த வீடுகள் கட்டித்தரப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் தங்களின் தொழிலாளர்களுக்கு, தனியார் நிலங்களில் வீடு கட்டித் தருவதற்கு முன்வரும் நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிக்கப்படும். 

விவசாயிகள்
விவசாயிகள்

3. முத்ரா சிஷூ திட்டத்தின்கீழ் கடன் வாங்கிய வணிகர்களிடம் பெறப்படும் 2 சதவிகித வட்டியைத் தள்ளுபடி செய்துள்ளார்கள். இதற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 கோடி சிறு வணிகர்கள் பலன் அடைவார்கள்.

4. சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்க 5,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தங்களது தொழிலைத் தொடங்க 10,000 ரூபாய் கடனாக வழங்கப்படும். இதனால், 50 லட்சம் தெருவோர வியாபாரிகள் பயனடைவார்கள்.

தள்ளுவண்டி இரவு உணவுக் கடை
தள்ளுவண்டி இரவு உணவுக் கடை

5. கட்டுமான துறைக்கு உந்துதல் கொடுப்பதற்காக, மார்ச் 2020-ல் முடிய வேண்டிய மத்திய அரசின் வீட்டுக் கடன் திட்டத்தை மார்ச் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. 70,000 கோடி ரூபாய் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படவுள்ளது. இதனால் ஸ்டீல், சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பதோடு லாரி போக்குவரத்தின் தேவையும் அதிகரிக்கும். இதன் மூலம் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 2.5 லட்சம் பேர் பயனடைவார்கள்.

6. ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் பல மாநில அரசுகளிடம் இருந்து வந்த காடு மற்றும் இயற்கை சார்ந்த திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு உடனடியாக ஒப்புதல் வழங்கப்படும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்குக் காடுகள் பராமரிப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு போன்ற இடங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாடு ரேஷன் கார்டு
தமிழ்நாடு ரேஷன் கார்டு

7. NABARD மூலம் விவசாயக் கடன்களுக்காகக் கூடுதலாக 30,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு வருடத்துக்கு 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 30,000 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிகளின் மூலம் கடனாகக் கொடுக்கப்படும். இதன்மூலம் 3 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்.

8. விவசாயிகளுக்கு கிஸான் கிரெடிட் கார்டு மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கிஸான் கிரெடிட் கார்டுகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்கும் கொடுக்கப்படும்.

9. மார்ச் 31. 2021-க்குள், இந்தியாவில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளும் டிஜிட்டல் முறைக்குக் கொண்டுவரப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படும்படி மாற்றப்படும்.

கைகொடுக்குமா புதிய திட்டங்கள்?

மத்திய நிதி அமைச்சரால் தற்போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் கடுமையான சூழலைச் சமாளித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பலன் அளிக்குமா என்று விசாரித்தோம்.

நீண்ட கால திட்டங்களில் முக்கியமானது நகரங்களில் இருக்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகையில் வீடு கட்டித்தருவது.
நாகப்பன்

"ஏற்கெனவே செய்த விஷயங்களைத்தான் மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அறிவிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை மூன்று விஷயங்கள்.

ஒன்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களும் பருப்பும் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு தற்போதைய உடனடித் தேவை இது.

இரண்டு, தெருவோரக் கடை வைத்திருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் அறிவிக்கப்பட்டது முக்கியமான விஷயம். இது சலுகை கிடையாது, கடன். ஆனால், இவர்களின் முதலுக்கு அதையாவது கொடுத்துதான் ஆக வேண்டும்.

மூன்று, விவசாயிகளுக்கு NABARD மூலமாகக் கடன் கொடுப்பதற்கு 30,000 கோடி கூடுதலாக ஒதுக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே நபார்டு மூலமாக 90,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக 30,000 கோடி கொடுத்திருப்பதால் சிறு விவசாயிகள் பயன் அடைவார்கள். இதுவும் சலுகை கிடையாது கடன்தான்.

பொருளாதார நிபுனர் நாகப்பன்
பொருளாதார நிபுனர் நாகப்பன்

தற்போதைய தேவை என்பது இந்த மூன்றுதான். மீதம் இருப்பவை எல்லாமே இப்போது பலன் தருபவை கிடையாது. ஆனால், நீண்டகால திட்டத்தில் ஓரளவு கிடைக்கலாம். இந்த நீண்ட கால திட்டங்களில் முக்கியமானது நகரங்களில் இருக்கும் தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகையில் வீடு கட்டித்தருவது. இதனால் உடனடி மாற்றம் எதிர்பார்க்க முடியாது. திட்டத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தே மாற்றங்கள் இருக்கும். மற்றபடி இப்போதைக்கு எந்தக் கடனும் தள்ளுபடி கிடையாது. இலவசம் என்று எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதுமட்டும் உறுதியாகத் தெரிகிறது" என்கிறார்.

உண்மையிலேயே விவசாயிகளுக்கு உதவி செய்வதாக இருந்தால் வட்டி இல்லாத கடனை வழங்கியிருக்க வேண்டும்.
சுந்தர விமலநாதன்
சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன், "நிதியமைச்சரின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை. தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கக்கூடிய திட்டங்களை மட்டுமே அறிவித்திருக்கிறார். உண்மையிலேயே விவசாயிகளுக்கு உதவி செய்வதாக இருந்தால், வட்டி இல்லாத கடனை வழங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் தழைக்கும். கிசான் கிரடிட் கார்டினால் பெரிய பயன் ஏதுமில்லை. ஏற்கெனவே அந்த கார்டு வைத்திருக்கும் விவசாயிகள் வங்கிகளுக்குச் சென்றால் வங்கிகளில் மரியாதையும் கொடுப்பதில்லை; கடனும் தருவதில்லை. இன்றைக்கு அறிவித்து அறிவிப்புகள் அனைத்தும் காகிதத்தில் உள்ள அறிவிப்பாக மட்டுமே இருக்குமே தவிர விவசாயிகளுக்கு நடைமுறையில் பயன்படாது" என்கிறார்.

வரும் 18-ம் தேதி லாக்டவுன் 4.0 அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அடுத்த கட்டுரைக்கு