Election bannerElection banner
Published:Updated:

புத்தாண்டு பிறந்தாச்சு மக்களே... வீட்டு பட்ஜெட் போட்டாச்சா? #2020NewYear

Representational Image
Representational Image

சேமிப்புப் பழக்கம் நம் வருமானத்தைச் சிக்கனப்படுத்தி, தக்கவைக்க உதவும். முதலீடு, சேமித்த பணத்தின் மதிப்பை அதிகரிக்க உதவும்.

புத்தாண்டு பிறந்துவிட்டது. எனினும், நம்முடைய வருமானத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நமக்கு இருக்கும் கடன்களிலும் மாற்றம் வரப்போவதில்லை. ஆனால், அவற்றில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் குறித்து இப்போது நாம் சிந்திக்கலாம். பிறந்த நாள் என்பது ஒருவரின் வயதின் கணக்கீடாகக்கொண்டு, அந்தந்த வயதில் நிறைவேற்ற வேண்டிய கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதுபோல, புதிய ஆண்டு பிறக்கும்போது வரும் ஆண்டில் வீட்டுத்தேவைக்கான இலக்கை நிர்ணயித்து பட்ஜெட் போடுவது அவசியம்.

Representational Image
Representational Image

பட்ஜெட் போடுங்க பாஸ்...

கடந்த ஆண்டில் வீட்டுக்காக என்னென்ன பெரிய பட்ஜெட் பொருள்களைப் புதிதாக வாங்கியிருக்கிறோம், தவணையில் வாங்கியிருந்தால், அது முடிவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கின்றன என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும். அதன் அடிப்படையில், தற்போதைய மாத/ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டில் என்ன பொருளை வாங்கலாம், என்னென்ன பொருள்கள் வாங்குவதை இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடலாம் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். இதைத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டால், தவணைக்கடன் மாயையில் சிக்காமல் இந்த ஆண்டை நிதிச்சிக்கல் இல்லாமல் எதிர்கொள்ளலாம்.

பட்ஜெட் என்பது வெறும் ஆண்டு பட்ஜெட் மட்டுமல்ல, ஒவ்வொரு வார இறுதியிலும் ஷாப்பிங் செல்லும்போதும் பட்ஜெட் போட்டு, என்னென்ன வாங்க வேண்டுமென்று திட்டமிட்ட பின்பே கடைக்குச் செல்லுங்கள். பட்ஜெட் போட்டாலும் அதைத்தாண்டி வாங்கும்படியாக இருக்கக்கூடும். எவ்விதத் திட்டமிடாமலும் போனால், நாம் வாங்கும் பொருள்களில் பலவும், அப்போதைக்கு தேவையற்ற செலவாகவே இருக்கும்.

சேமிப்பு
சேமிப்பு

அவசர கால நிதி முக்கியம்!

பட்ஜெட் போடுவதில் அனைவரும் கோட்டைவிடுவது, அவசரகால நிதி ஒதுக்கீடு செய்வதில்தான். உறவினர்கள், நண்பர்களின் திருமணம் போன்ற விசேஷங்கள், திடீர் மருத்துவச்செலவு, பணியிழப்பு போன்றவை நேர்ந்தால் சமாளிக்கத் தேவையான நிதி உள்ளிட்டவற்றுக்காகவும் பட்ஜெட்டில் ஒரு பகுதி ஒதுக்க வேண்டும். குறிப்பாக, சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட்வரை தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பணி இழப்பு சிக்கல்கள் வரலாம். அத்தருணங்களில் அடுத்த பணி கிடைக்கும்வரை அதைச் சமாளிக்கத் தேவைப்படும் நிதியை, உங்கள் சம்பளத்தைப்போல் குறைந்தது ஐந்து மாதச்சம்பள அளவுக்காவது சேர்த்து தனியாக வைத்திருப்பது நல்லது. இதை, வங்கி வைப்பு நிதி, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருக்கலாம்.

சேமித்தால் மட்டும் போதுமா?

சேமிப்புப் பழக்கம் நம் வருமானத்தைச் சிக்கனப்படுத்தி, தக்கவைக்க உதவும். முதலீடு, சேமித்த பணத்தின் மதிப்பை அதிகரிக்க உதவும். பொருளாதார மந்தநிலையால், நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துவரும் எதார்த்த சூழலில், வருமானத்தைச் சேமித்து, முதலீட்டின் மூலம் மதிப்பை அதிகரிக்கச் செய்வது அவசியமாகும். உங்களுடைய வருமானம் குறைவாக இருக்கும்பட்சத்தில் உங்களின் திறமையைப் பயன்படுத்தி ஓய்வுநேரத்தில், நாள்களில் வேறு ஏதேனும் வருமானம் ஈட்டுவது குறித்தும் சிந்தித்து முடிவெடுக்கலாம். உங்களுடைய திறமை, அயராத உழைப்பு இரண்டையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.

Representational Image
Representational Image

பங்குச்சந்தை முதலீட்டில் கவனம்!

கடந்த சில மாதங்களாகப் பங்குச்சந்தை உச்சத்திலிருந்தாலும் முதலீட்டாளர்கள் மனதில் கேக் வெட்டிக்கொண்டாடும் உற்சாக மனநிலை இல்லை. இதற்குக் காரணம், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்கு விலை மட்டுமே பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன. ஏனைய பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் இல்லை. எனவே, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், கவனமாக, சீரான வருமானம் தரக்கூடிய, நல்ல நிர்வாக அமைப்புடைய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது அவசியம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், வருமானம் குறைந்திருப்பதைப் பார்த்து பதற்றத்தில் வெளியேறிவிட வேண்டாம். இதுபோன்ற இறக்கமான சூழ்நிலையைச் சமாளிக்கத்தான், சமன்படுத்தத்தான் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே. எனவே, முதலீடுகளை அவசரப்பட்டு விலக்காமல், நிதி ஆலோசகர்களின் ஆலோசனையின்பேரில் தேவைப்பட்டால் வேறு ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவது நல்லது.

சுவர் இருந்தால்தானே சித்திரம்!

அனைத்துக்கும் மேலாக உடல்நலம் பேணுவது மிகவும் அவசியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? பிசினஸில் ஈடுபடுவோரும், ஷிஃப்ட் முறையில் பணியாற்றுவோரும், உழைக்கும் நேரத்துக்கேற்ப உறங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியர்கள் இரவில் உறங்கும் சராசரி நேரம் 7.01 மணி நேரமாக உள்ளது. இது அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு மக்களின் உறங்கும் நேர சராசரியைவிடக் குறைவாகும். குறிப்பாக 18 - 40 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் குறைவான நேரமே உறங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக, சமூக வலைதளங்களைக் கூடுதல் நேரம் பயன்படுத்துவது, நேரம்பாராத உழைப்பு, மன உளைச்சல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்கள். சரியான உறக்கமின்மைதான் அனைத்து வியாதிகளுக்கும் அழைப்புக்கார்டு கொடுக்கும். எனவே, சரியான அளவிலான உறக்கம், உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பதற்கு இந்த புத்தாண்டிலிருந்து தீவிர முயற்சியெடுக்கலாம். மருத்துவக்காப்பீடு இதுவரை எடுக்காதவர்கள், கண்டிப்பாக இந்த ஆண்டிலிருந்து எடுத்துவிடுவது நல்லது.

உறங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்
உறங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்
சேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்!

சமூகத்துக்கும் ஏதாவது பண்ணுங்க பாஸ்!

பணம் சம்பாதிப்பது மட்டுமே மன நிறைவைத் தந்துவிடாது. அந்தப் பணத்தைக்கொண்டு இந்த சமூகத்தின் மாற்றத்துக்கு நம்மாலான பங்களிப்புதான் உண்மையான மனநிறைவைத் தரும். சமூகத்துக்கான பங்களிப்பு என்றதும் பெரிதாக யோசிக்கத் தேவையில்லை. உங்கள் பகுதியில், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிப்பது, நடைபாதைகளில் யாசகம் வேண்டி நிற்கும் முதியோர்களுக்கு உணவு, உடை வழங்குவது என உங்கள் வருமானத்துக்கேற்ற சமூகப் பங்களிப்பை வழங்கலாம். சென்ற ஆண்டு வரை அப்படியான பழக்கம் இல்லாதவர்கள் புத்தாண்டிலிருந்து தொடங்கலாம். சரிதானே மக்களே?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு