Published:Updated:

ரூ.150 கோடி மோசடி... சீனாவில் இருந்தவாறு இந்தியாவில் கைவரிசை! பகீர் கிளப்பும் `பவர் பேக் ஆப்’ மோசடி!

பவர் பேக் ஆப் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
பவர் பேக் ஆப் மோசடி

F I N A N C I A L F R A U D

ரூ.150 கோடி மோசடி... சீனாவில் இருந்தவாறு இந்தியாவில் கைவரிசை! பகீர் கிளப்பும் `பவர் பேக் ஆப்’ மோசடி!

F I N A N C I A L F R A U D

Published:Updated:
பவர் பேக் ஆப் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
பவர் பேக் ஆப் மோசடி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எல்லாமே ஸ்மார்ட்டாக அப்டேட் ஆகிக்கொண்டிருப்பது போல, மோசடிகளும் நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக் கின்றன. ரைஸ் புல்லிங், இரிடியம், ஈமு கோழி, எம்.எல்.எம் என்று களத்தில் இறங்கி நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த மோசடிகள், இப்போது கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து நாம் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் நிகழ்த்தப் படுகின்றன. ஆஃபர் மேசேஜ்கள் வடிவில் அனுப்பப்படும் மால்வேர் களில் தொடங்கி பணம் ஈட்டும் கேம் ஆப்கள், அதிக ரிட்டர்ன் தரும் இன்வெஸ்ட்மென்ட் ஆப்கள் என டிஜிட்டல் உலகில் விரிந்திருக்கிறது மோசடிக் கும்பலின் வலை.

இந்த மோசடிக் கும்பலிடம் சிக்கி பலர் பணத்தை இழந்த பிறகுதான், இந்த ஆப்கள் குறித்த தகவலே வெளியில் தெரிய வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நம்மை அதிர வைத்திருக்கிறது தற்போது வெளிச்சத் துக்கு வந்திருக்கும் `பவர் பேங்க் ஆப்’ மோசடி.

பவர் பேங்க், ஈஸ் பிளான், சன் ஃபேக்டரி (Power Bank, EZ Plan, Sun Factory) உள்ளிட்ட பெயர்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக இயங்கிவந்த இந்த ஆப்கள், ‘உங்கள் முதலீட்டுத் தொகையில் 5-10% உடனடி வருவாய்’ என்று கிடைக்கும் என்றெல்லாம் விதவிதமான திட்டங் களைச் சொல்லி, மக்களின் ஆசை யைத் தூண்டியிருக்கின்றன. பலரும் முதலில், சிறு தொகையை முதலீடு செய்து, ‘சொன்னபடி பணம் திரும்ப வருதா?’ என்று பரிசோதித்துப் பார்த் திருக்கின்றனர். முதலில் சொன்னபடி அவரவருக்கான வருவாய் வரவே... பின்பு, அதிக தொகையை முதலீடு செய்திருக்கின்றனர். ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து, பல லட்சம் ரூபாய் வரை பலரும் இதில் முதலீடு செய்திருக்கின்றனர்.

கடந்த இரண்டே மாதத்தில் இந்த ஆப்களில் இந்தியா முழுக்க உள்ள ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுமார் ரூ.150 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் 122 பேர் (சென்னையில் பதிவாகியுள்ள புகாரின்படி) இதில் பணத்தைப் போட்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான், இவற்றில் முதலீடு செய்திருந்த டெல்லியைச் சேர்ந்த நபர்கள் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகார் எழுதத் தொடங்கினர். டெல்லி சைபர் க்ரைம் போலீஸார் களமிறங்கி விசாரித்த பிறகுதான், அவை சீனாவிலிருந்து இயங்கும் அதிர்ச்சிகரமான பின்னணி குறித்து தெரியவந்திருக்கிறது.

ரூ.150 கோடி மோசடி... சீனாவில் இருந்தவாறு இந்தியாவில் கைவரிசை! பகீர் கிளப்பும் `பவர் பேக் ஆப்’ மோசடி!

இந்த வழக்கில் தற்போது வரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். வழக்கினை விசாரித்து வரும் டெல்லி சைபர் க்ரைம் டி.சி.பி-யான அனிஷ் ராய், ``பல்லாயிரக்கணக்கான நபர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருந்த அந்த ஆப் பக்கங்களில் பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மை இல்லை. எனவே, எங்கள் டிப்பார்ட்மென்டைச் சேர்ந்த ஒருவரை இதில் சிறு தொகையை முதலீடு செய்ய வைத்தோம். அதன் மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தபோது, அதில் முதலீடு செய்யும் பணம் 25 ஷெல் நிறுவனங்கள் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதைக் கண்டறிந்தோம்.

அந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருந்த மொபைல் எண்களை ஆய்வு செய்தபோது, இதில் தொடர்புடைய ஷேக் ராபின் என்பவர் மேற்கு வங்கத்தில் இருப்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்தோம். அதே நேரத்தில் மேலும் டெல்லியிலிருந்த 9 நபர்களையும் ட்ரேஸ் செய்து கைது செய்தோம். இவர்களை விசாரித்த போதுதான் இந்த ஆப்கள் சீனாவிலிருந்து இயங்கி வந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. டெல்லியில் கைது செய்யப்பட்ட 9 பேர்களில், அவிக் கெடியா மற்றும் ரொனக் பன்சால் ஆகிய இருவர் சார்ட்டட் அக்கவுன்டன்ட்டுகள். அவர்கள் இருவரும் 110-க்கும் மேற்பட்ட ஷெல் நிறுவனங்களை உருவாக்கி, ஒரு நிறுவனத்தை ரூ.2 - 3 லட்சம் வரை சீனாவைச் சேர்ந்தவர் களுக்கு விற்பனை செய்துள்ளனர். தவிர, இந்த மோசடிக்காக 29 வங்கிக் கணக்குகளை நிர்வகித் திருக்கின்றனர். சீனாவில் உள்ள நபர்கள் Telegram, Dingtalk, WeChat போன்ற செயலிகள் வழியாகப் பேசி வந்திருக்கின்றனர். சீனா விலிருந்து இதை இயக்குபவர்களின் பெயர்களைக் கண்டு பிடித்துள்ளோம். முகவரியைக் கண்டறிய முயன்று வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆப்களில் பணம் முதலீடு செய்து பணத்தை இழந்து உள்ளதாக இதுவரை 122 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்புடைய குற்றவாளிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டிருப்பதாலும், இங்கே பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. சென்னை சைபர் க்ரைம் போலீஸார் சிலரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ``நூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் தந்திருக்கிறார்கள். ஒருசிலர் பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் இழந்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அதிக ரிட்டர்ன் கிடைக்கிறது என்ற ஆசையில் அதைப் பற்றி முழுமையாக ஆராயாமல் பணத்தைக் கட்டி ஏமாந்தி ருக்கின்றனர். இதுமட்டுமல்ல fly world shares என்ற ஆப்பில் பணத்தை இழந்துள்ளதாக தற்போது பலர் புகார் அளிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்த ஆப்பை முடக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, பல பெயர்களில் ஏராளமான ஆப்கள் இருக்கின்றன. மக்கள் புகார் அளித்த பிறகுதான் அது நமக்கே தெரிய வரும். பணம் போன பிறகு, போராடுவதைவிட முன்கூட்டியே தடுப்பதுதான் சிறந்தது. ஆகையால், அதிக ரிட்டர்ன் தருகிறோம் என்றால் எதையும் ஆராயாமல் பணத்தைப் போடுவதை நிறுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் நிறுவனங்களிலும் மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்” என்றனர்.

ஶ்ரீராம்
ஶ்ரீராம்

இப்படியான மோசடிகளி லிருந்து எப்படித் தப்பிப்பது... இப்படியான மோசடி ஆப்களை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து இணையப் பாதுகாப்பு வல்லுநர் ஶ்ரீராமிடம் பேசினோம்,

``இப்போது இப்படி நிறைய ஆப்கள் இருக்கின்றன. ஆள் சேர்த்துவிட்டால் தனி கமிஷன் தருவது, முதலீடு செய்தால் இரண்டு மடங்காகத் திரும்பத் தருவது என்று பல விதங்களில் அவை செயல்படுகின்றன. உங்கள் பணத்தை மோசடி செய்வதுடன் உங்கள் போனில் உள்ள தகவல்களையும் திருடிக் கொள்வார்கள். இந்த ஆப்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தால் நடத்தப்படுவதில்லை. புதிது புதிதாக போலியான நிறுவனங் களை உருவாக்கி புதுப்புது பெயர்களில் வந்துகொண்டே இருக்கும். இன்று புகாருக்கு உள்ளாகியிருக்கும் ஆப்பை முடக்கிவிட்டால் நாளை வேறொரு பெயரில் தொடங்குவார்கள். இவை யெல்லாம் சிறிய நிறுவனங்களின் பெயர்களில் ப்ளே ஸ்டோருக்குள் வருவதால், கூகுள் ப்ளே ஸ்டோரும் இதைக் கண்காணிப்பது சிரமம். வாடிக்கையாளர்கள் பலரால் ரிப்போர்ட் செய்யப்பட்ட பிறகே கூகுள் ப்ளே ஸ்டோர் அதைக் கவனிக்கும்.

இந்த மோசடி ஆப்களிலிருந்து எப்படி தப்பிப்பது எனில், நீங்கள் ஒரு ஆப்பை டவுன்லோடு செய்யும்முன், முதலில் அது எந்த நிறுவனத்தால் டெவலப் செய்யப் பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் நீங்கள் அறிந்த நம்பகமான நிறுவனமா என்பதை செக் செய்வது அவசியம். தவிர, அது எந்த நாட்டின் ஆப் என்பதைத் தெரிந்துகொள்ளக் கீழே டெவலப்பர் வெப்சைட் என்று ஒரு லிங்க் இருக்கும். அந்த வெப்சைட் லிங்க்கை காப்பி செய்து https://who.is/ என்ற இணையதளத்தில் செக் செய்ய முடியும். அதிலும் தெரியாதபடி சிலர் பிரைவசி பாலிசி செட் செய்திருப்பார்கள். எனவே, ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஒரு ஆப் எந்த நாட்டில் டெவலப் செய்யப் பட்டதோ, அந்த நாட்டிலிருந்துதான் ஆபரேட் செய்யப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. சீனா, கொரியா போன்ற நாடுகளில் மால்வேர் கள் அடங்கிய வெப்சைட் கிரியேட் செய்து விற்பவர்களும் இருக்கிறார்கள். அங்கிருந்து அந்த வெப்சைட்டுகளை வாங்கிவந்து இங்கிருப்பவர்கள்கூட இயக்கலாம். அல்லது சீனாவில் இருக்கும் டெவலப்பர்களும் இங்கிருக்கும் மீடியேட்டர்களும் இணைந்துகூட இந்த மோசடியை அரங்கேற்றலாம். ஆகையால் நாம்தான் அலெர்ட்டாக இருக்க வேண்டும்’’ என்றார் தெளிவாக.

மோசடிகளின் வடிவங்கள் எப்படி மாறினாலும் மோசடிகள் அரங்கேறு வதற்கான அடிப்படை நம் பேராசைதான்! அதை ஒழித்துக்கட்டிவிட்டால், நாம் ஏமாற மாட்டோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism