பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கணினி தவறுகள்... கையாள்வதில் குறைகள்... வரிசைகட்டும் பணப் புகார்கள்..!

புகார்
பிரீமியம் ஸ்டோரி
News
புகார்

புகார்

வங்கிகள் பற்றி 3,14,000 புகார்கள் பேங்கிங் ஓம்புட்ஸ்மேன் அமைப்புக்குக் கடந்த 2021-ம் வருடத்தில் மட்டும் அனுப்பப்பட்டு உள்ளன என்று ஸ்டாடிஸ்டா.காம் தெரிவிக் கிறது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

இவற்றில் மூன்றில் ஒரு பங்கு புகார்கள் அரசு வங்கிகள் பற்றியவை. (அதில் 49,000 புகார்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம் தொடர்பானவை). 1,26,000 புகார்கள் தனியார் வங்கிகள் பற்றியவை. மீதமுள்ளவை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள், பேமென்ட் பேங்க்ஸ், அயல் நாட்டு வங்கிகள் தொடர்பானவை.

மியூச்சுவல் ஃபண்டுகளும் இதற்கு விதி விலக்கல்ல. 2021-ல் செபியில் மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பாக 42,700 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ் மேன் அமைப்பு இதே காலகட்டத்தில் 40,527 புகார்களை செட்டில் செய்ததாகக் கூறுகிறது. (மொத்தம் எத்தனை புகார்கள் வந்தன என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை).

பொதுவாக, ஓம்புட்ஸ்மேனிடம் செல்வதற்கு முன் ஓராயிரம் முறை பொருளாதார நிறுவனங் களின் கதவுகள் தட்டப்படுகின்றன. அங்கு தங்கள் குறைகள் தீர வழியில்லை என்பதாலேயே ஓம்புட்ஸ்மேனிடம் செல்கிறார்கள் மக்கள். ஏனெனில், ஓம்புட்ஸ்மேனிடம் முறையிடுவது எளிதான விஷயமல்ல. அதற்குப் பலப்பல சான்றுகளையும் ஆவணங்களையும் சமர்ப் பிக்க வேண்டும். ஆனாலும் ஓம்புட்ஸ்மேன் வரை செல்ல மக்களைத் துரத்துவது எது?

கணினி தவறுகளும், கையாளுபவர்களின் கள அறிவுக் குறைபாடுகளும்...

ஒரு சேவை கணினிமயமாக்கப்படும்போது அது சார்ந்த குறைகள் அத்தனையும் களையப் பட்டு, முற்றிலும் தயார் நிலைக்கு வந்துள்ளதா என்பதைப் பலமுறை உறுதி செய்ய வேண்டும். கணினிமயமாக்கல் அதிகரிக்கும் அளவுக்கு, அதைக் கையாளுபவர்களின் திறமை வளர்க்கப் படுவதில்லை. சேவைகளில் தினம் ஒரு அப்டேட் கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கும் நிறுவனங்கள், அந்த சேவைகள் தவறுகள் இன்றி மக்களுக்குச் சென்று சேர்கிறதா, தவறுகள் நேரும்புட்சத்தில் ஊழியர்கள் அதைத் திறம்படக் கையாள களஅறிவு வழங்கப் பட்டுள்ளதா என்று கவனிப்பதில்லை.

கணினி தவறுகள்...  கையாள்வதில் குறைகள்... வரிசைகட்டும் பணப் புகார்கள்..!

முகமற்ற சேவைகள்...

தற்போது கணினி வழங்கும் முகமற்ற சேவைகள் நமது அதிருப்தியை அதிகரிக்கவே செய்கின்றன. கஸ்டமர் சர்வீஸுக்கென்று நான்கு போன் நம்பர்களைக் காட்டும் நிறுவனங்களிலும்கூட ஒரு நிஜமான அதிகாரியிடம் பேசுவதற்கு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்ட வேண்டியுள்ளது. அப்படி அபூர்வமாகக் கிடைத்த அதிகாரியும் நம் புகாரை சரிவரப் புரிந்துகொள்வதில்லை அல்லது அதற்குப் பதிலளிக்கத் தேவையான கள அறிவு அவரிடம் இருப்பதில்லை.

ஆக ஒரு புகார் சரி செய்யப்பட, பலமுறை போன் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் வேறு வேறு அதிகாரிகள் போனை எடுப்பதால், ஒவ்வொருவரிடமும் நம் பிரச்னையை மறுபடி, மறுபடி கூற வேண்டி வருகிறது. ஒரு கட்டத்தில் சலித்துப்போய் பிரச்னைகளுடன் வாழப் பழகிக்கொள்கிறோம். ஆனால், இது போன்ற பிரச்னை கள் தங்கள் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம் என்னும் பட்சத்தில், மக்கள் ஓம்புட்ஸ்மேன் வரை செல்லத் துணிகிறார்கள். அப்படி அவர் களைத் துரத்திய சில பிரச்னை களைப் பார்ப்போம்.

பர்சனல் லோனில் ஹோம் லோன் இன்ஷூரன்ஸ் பிடித்தம்...

கொரோனாவுக்குமுன் நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பிய ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர், வங்கியில் ஹவுஸிங் லோன் வாங்கி, அதில் 50% உபயோகித்து நிலம் வாங்கியுள்ளார். வங்கியின் வற்புறுத்தலால் ஹோம் லோன் இன்ஷூரஸும் எடுத்திருக்கிறார். அதற்குக் கணக்கிடப்பட்ட பிரீமியம் தொகை மிக அதிகம் என்பதால், சிறு சிறு பிரீமியம் களாக வருடம்தோறும் பிடித்தம் செய்திருக்கிறது வங்கி.

வங்கி விதிமுறைகளின்படி, இரண்டு வருடங்களில் அவர் வீடு கட்ட ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் கடனைத் திருப்பித் தர வேண்டும் அல்லது அதிக வட்டி விகிதத்தில் வேறு கடனாக மாற்ற சம்மதிக்க வேண்டும். கொரோனா சூழ்நிலையில் அவரால் வீடு கட்ட இயலவில்லை. பிளாட் லோனாக மாற்றும்படி கேட்டுக் கொண்ட அவரின் வேண்டு கோளை நிராகரித்து, குறைந்த வட்டி விகிதத்தில் இருந்த அவரது வீட்டுக் கடனை, வங்கி அதிக வட்டி விகிதத்தில் பர்சனல் லோனாக மாற்றியது.

ஆனால், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக ஹோம் லோன் இன்ஷூரன்ஸ் பிரீமியமும் அவரது பர்சனல் லோன் அக்கவுன்டில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதை நிறுத்தும்படி அவர் விடுத்த வேண்டுகோளை கம்ப்யூட்டரில் செயல்படுத்த, வங்கி அதிகாரிகளால் இயலவில்லை. வங்கியின் பல மையங்களில் முறையிட்டும் குறை தீராததால், அவருக்கு ஓம்புட்ஸ் மேனிடம் செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

கணினி தவறுகள்...  கையாள்வதில் குறைகள்... வரிசைகட்டும் பணப் புகார்கள்..!

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் எக்ஸ்டென்ஷன்...

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் பற்றி நமக்கு நன்குத் தெரியும். முதலில் இதன் முதலீட்டுக் காலம் 15 வருடங்களாக இருந்தது. மக்களுக்கு இதன் உபயோகம் அதிகம் இருப்பதை உணர்ந்த அரசு, ஒருவர் தன் வாழ்நாள் வரை ஐந்து வருட காலங்களாக சிலமுறை நீட்டித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்தது.

இந்த அக்கவுன்ட்டை ஒரு பிரபல வங்கியில் ஆரம்பித்து 25 வருடங்களாக (15+5+5) குருவி சேர்ப்பதுபோல் சேர்த்து வளர்த்து வந்தார் 70 வயது நண்பர். மூன்றாம் முறையாக 5 வருட காலத்துக்கு ரெனிவல் செய்யச் சென்றவருக்குக் காத்திருந்தது பேரிடி! போன முறை ரெனிவல் செய்த நேர்ந்த தவறால் இப்போது ரெனிவல் செய்ய கம்ப்யூட்டர் அனுமதிக்கவில்லை. கம்ப்யூட்டர் தந்த இந்தத் தலை வலியைத் தீர்க்க இயலாமல், “இருக்கும் அக்கவுன்டை குளோஸ் செய்துவிட்டு புது அக்கவுன்ட் ஒன்று ஆரம்பிக்கலாமே!” என்று வங்கிக்கிளை ‘கனி’வுடன் இ-மெயில் அனுப்பியது.

“இருக்கும் அக்கவுன்ட்டை குளோஸ் செய்யும்பட்சத்தில் வெளியே வரக்கூடிய வாழ்நாள் சேமிப்பை, புது அக்கவுன்டில் மொத்தமாகப் போட அனுமதி இல்லை; அப்படியானால் அதை பத்திரமாக, நல்ல வட்டி விகிதத்தில் எங்கு முதலீடு செய்வது, அப்படி முதலீடு செய்ய முடிந்தாலும் வரக்கூடிய வட்டிக்கு வருடம்தோறும் லட்சக்கணக்கில் வரி செலுத்த வேண்டியிருக்குமே; இதனால் பி.பி.எஃப் ஆரம்பித்ததன் நோக்கமே அடிபட்டுப்போகிறதே” என்றெல்லாம் கவலைப்பட்ட நண்பர், வங்கியின் பல்வேறு மையங்களின் கதவுகளைத் தட்டியிருக்கிறார். வங்கியின் ஊழியர் அல்லது கம்ப்யூட்டர் செய்த தவறுக்கு வயதான காலத்தில், தான் ஏன் பலியாக வேண்டும் என்பதே அவர் கேள்வி. ஆனால், அவர் கேள்விக்கு வங்கியிடமிருந்து விடை கிடைக்காதபட்சத்தில் பேங்கிங் ஓம்புட்ஸ்மேனிடம் செல்வதுதானே அவருக்கு இருக்கும் ஒரே வழி?

பிரச்னைகள் பலவிதம்...

இப்படி கம்ப்யூட்டரில் லைஃப் சர்டிஃபிகேட் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் ஒரு விதமும், ஸ்டேட்மென்டில் வேறு விதமுமாகத் தங்கள் முதலீட்டைக் கண்டு திகைப்பவர்கள், டீமேட் அக்கவுன்ட்டில் போர்ட்ஃபோலியோவில் காணும் ஷேர் களுக்கும், டீமேட் அலொகேஷனில் காணும் ஷேர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டு விழிபிதுங்கி நிற்பவர்கள் என்று பலர் உள்ளனர்.

இது போன்ற பிரச்னைகளுக்கு மூலகாரணம், கணினி மயமாக்கலை அறிமுகம் செய்யும்போது தீர்க்கமாக செயல்படாததும், கம்ப்யூட்டர் தரும் பிரச்னைகளை கீழ்மட்டத்திலேயே தீர்க்க ஊழியர்களுக்கு சரியாகப் பயிற்சி அளிக்காததுமே. இது நிறுவனங்களின் தவறேயன்றி, ஊழியர்களின் தவறு அல்ல; என்றாலும் பொதுமக்களின் கோபம் ஊழியர்கள் மீதே பாய்கிறது.

இது கணினிகளின் காலம். அவை இன்றி ஓரணுவும் அசையாது. ஆகவேதான் மக்களுக்கு தாங்கள் அளிக்கும் சேவையை கணினிமயமாக்க பொருளாதார நிறுவனங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றன. ஆனால், அதே நிறுவனங்கள் கணினிமயமாக்கலில் வரக்கூடிய தவறுகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளனவா, அவற்றில் தவறு நேர்ந்தால் உடனடி நிவாரணம் தர தங்கள் நடுமட்ட மற்றும் கீழ்மட்ட ஊழியர்களைத் தயார்படுத்தி இருக்கிறோமா என்று யோசிக்கத் தவறுகின்றன. இதனால் அவதிப்படுவது பொதுமக்களும் ஊழியர்களுமே.

இந்தக் குறைபாட்டை நிறுவனங்கள் உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்போதுதான் கணினிமயமாக்கலின் முழுப் பயனும் அனைவருக்கும் கிடைக்கும். ஓம்புட்ஸ்மேன் வரை செல்லும் புகார்களும் குறையும். ஆனால், அந்த நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்!