Published:Updated:

‘ஐ.எஃப்.எஸ்’ சுருட்டலில் அரசியல் தலைகள்..? காணாமல் ஏஜென்டுகள்... கண்ணீரில் மக்கள்..!

ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

ஃபாலோ அப்!

‘ஐ.எஃப்.எஸ்’ சுருட்டலில் அரசியல் தலைகள்..? காணாமல் ஏஜென்டுகள்... கண்ணீரில் மக்கள்..!

ஃபாலோ அப்!

Published:Updated:
ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

வேலூர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பல லட்சம் பேர் பணம் போட்டு, இழந்து நிற்பது குறித்து ஜூ.வி-யிலும், நாணயம் விகடனிலும் கடந்த சில வாரங்களாகவே எழுதி வருகிறோம். இந்த நிலையில் தினம்தினமும் வெளியாகும் வாட்ஸ்அப் தகவல்கள், யூடியூப் வீடியோக்கள் என பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஐ.எஃப்.எஸ் விவகாரம்.

காணாமல்போன லட்சுமி, ஜனார்த்தனன், மோகன்...

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களான லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், மோகன் பாபு ஆகியோர்கள் கடந்த 26-ம் தேதி முதலே காணவில்லை என்கிறார்கள் லீடர்கள் (ஏஜென்டுகள்) . அவர்களின் செல்போன்கள் ஆஃப்பில் இருக்கின்றன.

லட்சுமிக்கு ஆந்திராவில் நல்ல செல்வாக்கு உண்டு. எனவே, அவர் ஹைதராபாத் தில் இருக்கலாம் என்று சொல்கிறது ஒரு தகவல். இல்லை, அவர் பெங்களூரு வில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அங்கு போன சில ஏஜென்டுகள், இரண்டு நாள் அலைந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பியது தான் மிச்சம். இன்னும் சிலர், இவர்கள் வெளிநாட்டுக்குக் கூட தப்பியிருக்கலாம் என்கிறார்கள்.

‘15 நாளில் நானே நேரில் வந்து சொல்கிறேன்’ என்று சொல்லி ஆடியோ தகவலை வெளியிட்ட லட்சுமி, 15 நாள் கழித்து வருவாரா, வாங்கிய பணத்தைத் தருவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வி.

‘ஐ.எஃப்.எஸ்’ சுருட்டலில் அரசியல் தலைகள்..? காணாமல் ஏஜென்டுகள்... கண்ணீரில் மக்கள்..!

சாவு பயத்தில் ஏஜென்டுகள்...

கடந்த இரு ஆண்டுகளாக சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிறுவனத் தின் ஏஜென்டுகள் இப்போது அச்சத்தின் உச்சத்தில் இருக் கிறார்கள். பணம் போட்ட மக்கள் இப்போதே பணத் தைத் திரும்பத் தரும்படி கேட்டு நெருக்கடி தந்துவரு வதே காரணம். ஐ.எஃப்.எஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்து, அவர்களிடம் இருந்து உறுதி யான ஒரு பதிலை வாங்கித் தந்துவிட்டால், மக்களை அமைதிப்படுத்திவிடலாம் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு வழி இல் லாத நிலையில், சில ஏஜென்டு கள் இரவோடு இரவாக தலை மறைவாகி செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஐ.எஃப்.எஸ்ஸில் பணம் போட்டவர்களுக்கு வழக்க மாக ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியை நெருங்கும் நிலையில், பலருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படாததால், ஏஜென்டுகள் மீது வழக்கு தொடுப்பது, காவல்துறையில் புகார் செய்வது என யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.

தீராத கவலையில் இருக்கும் மக்கள்...

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் அத்தனை பேருமே இப்போது கேட்கும் கேள்வி, ‘‘எங்கள் பணம் திரும்பக் கிடைக்குமா, எப்போது கிடைக்கும்’’ என்பதுதான். இந்த நிறுவனத்தில் பணம் போடும்போது அவர்கள் கவனித்தது, மாதத்துக்கு 7% கிடைக்குமா, 8% கிடைக்குமா என்பதைத்தான். இந்த வருமானம் எப்படிக் கிடைக்கும் என்கிற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

அப்படியே சிலர் கேட்டாலும், பங்குச் சந்தை டிரேடிங் மூலம் தருவோம் என்று பதில் கிடைத்தது. ஆனால், பங்குச் சந்தை டிரேடிங் மூலம் மாதந்தோறும் 7% - 8% வருமானம் பெறுவது யாருக்கும் சாத்தியம் இல்லை. பங்குச் சந்தை முதலீட்டின் மன்னன் என புகழப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கே கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை இறக்கம் காரணமாக பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அப்படி இருக்க, ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மட்டும் எப்படி லாபம் சம்பாதித்திருக்க முடியும் என்று கேட்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.

இந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறதென்றுகூட தெரியாமல் பணம் போட்ட அப்பாவி மக்கள்தான் அதிகம். பெரும்புதூரைச் சேர்ந்த ஒருவர் ரூ.17 கோடி போட்டிருக்கிறாராம். இவ்வளவு பணத்தையும் ரொக்கமாகக் கொடுத்த அவர், காவல் துறையிடம் புகார் செய்யவில்லை. அப்படி செய்யப் போனால், ‘‘இந்தப் பணத்தை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள், இதற்கு வரி கட்டியிருக்கிறீர்களா’’ என்றெல்லாம் கேள்வி வரும் என்று பயந்து, புகார் தராமலே இருக்கிறாராம். ஆற்காட்டைச் சேர்ந்த ஒருவர் வீட்டை அடமானம் வைத்து கிடைத்த பணத்தை இந்த நிறுவனத்தில் போட்டிருக்கிறார். பெரும்புதூரில் இருக்கும் சிப்காட்டில் வேலை பார்க்கும் பல ஆயிரம் ஊழியர்கள், எம்.என்.சி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் எனப் பலரும் ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை பணம் போட்டிருக்கிறார்கள். சிலர், கடன் வாங்கிக்கூட பணம் போட்டிருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்குமா?

உண்மையை ஒப்புக்கொண்ட ஜனார்த்தனன்...

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பாக ஜூனியர் விகடனிலும், நாணயம் விகடனிலும் கட்டுரை வெளியானவுடன், ‘‘நாங்கள் கல்வி நிறுவனத்தைதான் நடத்திவந்தோம். நாங்கள் யாரிடம் இருந்தும் பணம் வாங்கவில்லை’’ என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ஜனார்த்தனன். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோவில், ‘‘பணம் அத்தனையும் தந்து, ‘பே அவுட்’ செய்துவிடுவோம் என்று சொல்லியிருக்கிறார். ஒரு கல்வி நிறுவனம் ஏன் ‘பே அவுட்’ செய்ய வேண்டும், பணமே வாங்கவில்லை என்று சொன்ன பிறகு ‘பே அவுட்’ செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? ஆக, பணம் வாங்கியதை தானாக முன்வந்து ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜனார்த்தனன்.

மேலும், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் வெளிநாட்டு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் பணம் முதலீடு செய்யும் என்று புதுக் கதையை விட்டிருக்கிறார் ஜனார்த்தனன். ஏதோ ஒரு தொழிலை சரியாகச் செய்யும் நிறுவனத்தில்தான் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் முதலீடு செய்யும். ஐ.எஃப்.எஸ் நிறுவனம் என்ன தொழில் செய்கிறது என்பதே யாருக்கும் தெரியாதபோது, அதில் எப்படி முதலீடு செய்யும்? ஒருவேளை, சிவாஜி படத்தில் ரஜினி செய்கிற மாதிரி, இங்கிருந்து ‘ஹவாலா’ மூலம் பல நூறு கோடிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி, அந்தப் பணம் மீண்டும் இந்த நிறுவனத்துக்கு வரப்போகிறதா, அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான பணம்தான் இப்படி ‘ரவுண்ட் ட்ரிப்’ மூலம் வெளிநாட்டுக்குப் போய், மீண்டும் நம் நாட்டுக்கு வருகிறதா என்றெல்லாம் வருமான வரித்துறையைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள்...

ஐ.எஃப்.எஸ் விவகாரம் தொடர்பாக பல லட்சம் பேர் பரபரப்பாகப் பேசிவரும் நிலையில், இந்த நிறுவனத் தைப் பற்றி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருக்கிறது மத்திய, மாநில அரசாங்கங்கள் என்று மனம் புழுங்குகிறார்கள் பணம் போட்ட மக்கள். மத்திய அரசாங்கம் நினைத்தால், இந்த நிறுவனத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கி, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடாமல் தடுக்க முடியும். மாநில அரசாங்கம் நினைத்தால், ஐ.எஃப்.எஸ் நிறுவனத் தின் முக்கியஸ்தர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அவர்களை விசாரித்து, அவர்களிடம் உள்ள பணத்தைக் கைப்பற்றி, மக்களுக்குத் தர முடியும். ஆனால், ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் மத்திய, மாநில அரசாங்கங்கள் வேடிக்கை மட்டும் பார்ப்பது ஏன், இவர் களுக்கு மக்கள் மீது இருக்கும் அக்கறை இவ்வளவுதானா என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள் மக்கள்.

அடுத்த சில நாள்களில் இந்த பிரச்னை இன்னும் பூதாகரமாக வெடிக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்!

ஸ்டாலின் மருமகனும் வம்பில்..?

ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் லேட்டஸ்ட் பேசு பொருள் ஆகியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன். ‘‘ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மூலம் நிறைய பணம் வசூலாவதைப் பார்த்து ஆளுங்கட்சித் தலைமைக்கு மிக நெருக்க மானவர்கள் குறிப்பிட்ட அளவு பணம் கேட்கிறார்கள். அதனால்தான் இப்போது பிரச்னை’’ என்று சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, ‘‘கூடியவிரைவில் சபரீசன் இந்த நிறுவனத்தை ‘டேக் ஓவர்’ செய்யப்போகிறார். அப்படி நடந்துவிட்டால், நிறுவனம் பழையபடி செயல்படத் தொடங்கிவிடும்’’ என்று சொல்லி வருகிறார்கள். இந்த மாதிரி பேச்சுகள் முதல்வரின் கவனத்துக்கு சென்றிருக்கின்றனவா என்று தெரியவில்லை.