கட்டுரைகள்
Published:Updated:

எது உண்மையான நிதிச் சுதந்திரம்?

நிதிச் சுதந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிச் சுதந்திரம்

ஒருவர் அவருடைய நேரத்தை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அவர் விரும்பிய விஷயத்திற்குச் செலவிடுவதை நிதிச் சுதந்திரம் எனச் சொல்லலாம்.

நம்மில் பலர் நிம்மதியான நிதி வாழ்க்கை வேண்டும் என நினைக்கிறோம். அதற்கு மிக முக்கியமாக, நிதிச் சுதந்திரம் (Financial Freedom) அடைய வேண்டும். பணத்தின் மூலம்தான் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும். அதற்காக ஒரு பெரும் நிதியைச் சேர்த்து வைப்பது அவசியம். அந்தத் தொகை என்பது தற்போதைய மாதச் செலவுகளை சுலபமாக சமாளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வையும் சமாளிக்கக்கூடியதாக இருப்பது அவசியம். அந்தத் தொகை, தற்போதைய ஆண்டுச் செலவைப் போல் சுமார் 25 - 30 மடங்குக்கு மேல் இருக்க வேண்டும்.

ஆர்.வெங்கடேஷ்
ஆர்.வெங்கடேஷ்

உதாரணத்துக்கு, கணவன் மனைவி இருவரின் மாதச் செலவு ரூ. 50,000 என வைத்துக்கொள்வோம். எனில், ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் அவர்களது செலவு. இதன் 25 மடங்கு ரூ. 1.5 கோடி. இந்தத் தொகுப்பு நிதி மூலம் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறது என்றால் அதில் பாதி மட்டும் எடுத்துச் செலவு செய்தால், அந்தத் தொகை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வரும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அடுத்து வரும் ஆண்டுகளில் சற்று கூடுதல் தொகையை எடுத்துச் செலவிட்டாலும் இந்தத் தொகுப்பு நிதி மூலம் அதிக வருமானம் கிடைத்துவருவதால் நீண்ட காலத்திற்கு இந்தத் தொகை வரும்.

எது உண்மையான நிதிச் சுதந்திரம்?

நிதிச் சுதந்திரம் பற்றி வாரன் பஃபட்..!

உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபட் நிதிச் சுதந்திரம் பற்றிக் கூறும்போது, “ஒருவர் அவருடைய நேரத்தை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அவர் விரும்பிய விஷயத்திற்குச் செலவிடுவதை நிதிச் சுதந்திரம் எனச் சொல்லலாம். அதாவது, உழைத்தால்தான் செலவு செய்ய முடியும் என்கிற நிலையைத் தாண்டி, நேரம் என்பது ஒருவர் வசம் தேவைக்கு இருக்க வேண்டும். அடுத்து, அவருக்கான அனைத்துச் செலவுகளையும் அவரின் சொந்தப் பணத்திலிருந்து செய்வதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருளை வாங்கப் போகிறார் என்றால் அதனுடைய விலை என்ன என்பதைப் பார்க்காமல் அவர் வாங்கினால் அவர்தான் உண்மையில் நிதிச் சுதந்திரம் அடைந்தவர்” என்கிறார். இப்படி ஒருவர் நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட அவருக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் மூலமான வட்டி, நிறுவனப் பங்குகள் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் டிவிடெண்ட் வருமானம், சொத்தின் மூலம் வாடகை வருமானம், முதலீடு மூலம் வட்டி வருமானம், யூடியூப் மற்றும் புத்தக விற்பனை மூலம் வருமானம் எனப் பல்வேறு வழிகளில் வருமானம் வந்துகொண்டிருக்க வேண்டும் என்றும் வாரன் பஃபட் கூறுகிறார்.

எது உண்மையான நிதிச் சுதந்திரம்?

செல்வந்தர்கள் எல்லாரும் நிதிச் சுதந்திரம் பெற்றவர்களா?

உதாரணத்துக்கு, ஒரு செல்வந்தர் மாநகரத்தின் மத்தியில் 2,000 சதுர அடியில், பல கோடி மதிப்பில் உள்ள தன் பெரிய வீட்டில் வாழ்ந்துவருகிறார். ஆனால், அவரிடம் ரொக்கப் பணம், வங்கிச் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணம் எல்லாம் சேர்ந்து ரூ. 10 லட்சம்தான் இருக்கிறது. அவருக்கு வேறு வருமான ஆதாரமும் இல்லை. அவரின் இரு மகன்கள், அப்பாவின் செலவுக்கு மாதம் தலா ரூ. 5,000 கொடுத்துவருகிறார்கள். இந்த நிலையில், அந்தச் செல்வந்தர் நிதிச் சுதந்திரம் அடைந்தவர் என்று சொல்ல முடியாது. அதே செல்வந்தர், பெரிய வீட்டை விற்று, அந்தத் தொகையை முதலீடு செய்து, அதிலிருந்து வரும் தொகையைக் கொண்டு தன் தேவைக்குப் பற்றாக்குறை இல்லாமல் செலவிட்டுவருகிறார் என்றால்... அவரை நிதிச் சுதந்திரம் பெற்றவர் எனச் சொல்லலாம்.

நிதிச் சுதந்திரம் அடைய சரியாகத் திட்டமிடுவீர்கள்தானே?