நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பணச் சிக்கலைப் போக்கும் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்... அடைய உதவும் 12 வழிகள்!

ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் ஃப்ரீடம்

C O V E R S T O R Y

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், Vbuildwealth.com

நிதிச் சுதந்திரம் (Financial Freedom / Financial independence) பற்றி அண்மைக்காலங்களில் நாம் அதிகம் பேச ஆரம்பித்திருக்கிறோம். பொதுவாக, நிதிச் சுதந்திரம் என்றவுடன், பெரிய கோடீஸ்வரன் ஆகி, பணத்தை தண்ணீராகச் செலவு செய்வது எனப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறான எண்ணம்.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
Vbuildwealth.com
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், Vbuildwealth.com

நிதிச் சுதந்திரம் என்பது...

உண்மையில், நிதிச் சுதந்திரம் என்பது ஒருவர் அவரின் வாழ்க்கைச் செலவுகளைச் செய்ய மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் இருப்பதாகும். மேலும், அவர் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான செலவுகளைச் செய்யப் போதுமான வருமானத்தை / தொகுப்பு நிதியைக் கொண்டிருப்பதாகும்.

இந்த நிதிச் சுதந்திரத்தை அடைய வரவுக்கேற்ற செலவு, வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்), சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை சரியாக மேற்கொள்வது அவசியம். பணக் கவலைகள் இல்லாமல், நிதி நிலையைக் கச்சிதமாகத் திட்டமிட்டு வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வரும்பட்சத்தில், சுலபமாக நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்.

மகிழ்ச்சியைத் தரும் நிதிச் சுதந்திரம்...

நிதிச் சுதந்திரத்துக்கான திட்டம் உங்களிடமிருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். அது நிறைவேற நிதி ஆலோசகர்கள் உதவக்கூடும்.

நிதிச் சுதந்திரத்தில் பணம் என்பது மிக முக்கியமானது. அது குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். அதே நேரத்தில், அது சண்டை சச்சரவு களையும் ஏற்படுத்தக்கூடியது. பணம் என்பது ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. அது நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தேடிக்கொள்ள உதவுகிறது.

நிதிச் சுதந்திரம் என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் வேலை செய்யாமல் / உழைக்காமல், அதற்கான போதுமான தொகுப்பு நிதியைச் சேர்ப்பதாகும். இதன்மூலம் நாம் நமது வாழ்க்கையில் நிதி ரீதியாக சுதந்திரமாகச் செயல்படலாம்.

நிதிச் சுதந்திரத்தில் சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர்க் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வுக்காலம் ஆகியவை அடங்கும். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பார்கள். ஆனால், அதனால் சுதந்திரத்தை வாங்க முடியும். குறிப்பாக, நிதிச் சுதந்திரத்தைப் பெற முடியும்.

நிதிச் சுதந்திரம்
நிதிச் சுதந்திரம்

நிதிச் சுதந்திரத்தை ஒருவர் அடைய அவருக்குக் கீழ்க்காணும் வழிமுறைகள் உதவும்.

1. நிதி நிலையை ஆராயுங்கள்

முதலில் உங்கள் நிதி நிலையை ஆராயுங்கள். நிதி நிலைப் பற்றிய நல்ல தெளிவு இல்லாமல் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியாது. நிதி நிலை என்பது உங்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் வருகிறது, எந்த அளவுக்கு சொத்து இருக்கிறது, உங்கள் செலவுகள் என்னென்ன என்பனவற்றைக் குறிக்கும்.

உங்களுக்குத் தேவையான மாத அடிப்படைச் செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், கடனுக்கான மாதத் தவணை இவற்றுக்குத் தனித் தனியாக நிதியை ஒதுக்கீடு செய்யப் பழகுங்கள்.

2. சம்பளத்தைவிடக் குறைவாகச் செலவழியுங்கள்

உங்கள் செலவுகளைக் கணக்கிடுங்கள். அதை வருமானத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்; பற்றாக்குறை இருந்தால், செலவுகளைக் குறையுங்கள். சம்பளத்தைவிட குறைவாகச் செலவு செய்யப் பழகுங்கள்.

தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் அல்லது அதைத் தவிர்த்தல் என்பது நிதிச் சுதந்திரத்தை அடைய உதவும் முதல்படி ஆகும். உங்கள் வருமானம் மற்றும் வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்ப நிதி இலக்குகளை உருவாக்குங்கள்.

மாட மாளிகை கட்டிதான் நிதிச் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடுத்தர வீடு, அடுக்கு மாடி வீட்டில் குடியிருந்தபடியே கூட நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும். தேவையில்லாத செலவுகளைச் செய்வதில்லை என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அன்றைய கால கட்டத்தில் இல்லத்தில் உறவுகள் நிறைந்திருந்தார்கள்; பொருள்கள் வீட்டில் குறைவாக இருந்தன. இன்றைக்கு பல வீடுகளில் பொருள்கள் அதிக இடத்தை அடைத்திருக்கின்றன; உறவுகள் குறைந்திருக்கிறார்கள்.

பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகுங்கள். இது உங்களை விரைவில் நிதிச் சுதந்திரம் அடைய வைக்கும்.

3. சேமிப்பை அதிகரியுங்கள்

எதிர்கால நலன் கருதி, சேமிப்பை அதிகரியுங்கள்.

சேமிப்பு என்பது பொதுவாக, வங்கிகளில் செய்யப்படும் சேமிப்புக் கணக்கு, தொடர் சேமிப்பு (ஆர்.டி), வைப்புத் தொகை (எஃப்.டி) ஆகியவற்றைக் குறிக்கும். கூடவே செலவுகளைக் குறைத்து அதிகம் சேமியுங்கள். எதில் எல்லாம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க முடியும் என்று பாருங்கள்.

4. வருமானத்தை அதிகரியுங்கள்..!

வருமானத்தை அதிகரிக்கும்போது சேமிப்பும், முதலீடும் தானே அதிகரிக்கும். இதனால் நிதிச் சுதந்திரத்தை விரைவாகவும் சுலபமாகவும் அடைய முடியும்.

அதிகமாகச் சம்பாதிக்கவும் முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர் வீட்டிலிருந்தபடியே சில பல வேலைகளைச் செய்து சம்பாதிக்கலாம். பகுதி நேர வேலைகள் மூலம்கூட வருமானத்தை அதிகரிக்க உதவும். இப்படிச் செய்வதன் மூலம் நிதிச் சுதந்திரத்துக்கான இலக்குத் தொகையை விரைவாக அடைந்துவிட முடியும்.

உங்களின் திறமையை அதிகரிக்கும் போது அலுவலகத்தில் அதிக சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இதற்கென நீங்கள் உங்கள் பணி சார்ந்த கூடுதல் திறமைக்கான கோர்ஸ்களைப் படிக்கலாம். பல படிப்புகளை இணையத்தில் கட்டணம் இல்லாமல் படிக்க முடியும். அப்படி இல்லாதபட்சத்தில் அதிக வருமானத்துக்காகக் கட்டணம் செலுத்தி படிப்பதில் தவறில்லை. கல்விக்காகச் செய்யப்படுவது செலவல்ல. அதுவும் ஒரு நல்ல முதலீடுதான்.

5. முதலீடுகளைப் புரிந்துகொள்ளுங்கள்

முதலில் நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது நுகர் வோராகவே இருக்க விரும்புகிறீர்களா என முடிவு செய்யுங்கள். முதலீட்டாளராக விரும்பினால் உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை நிதிச் சுதந்திரத்தை அடைவதற் காக ஒதுக்கி, அவை தானாக முதலீடு செய்யப்பட வழிசெய்யவும்.

நீங்கள் பணத்தைப் போட இருக்கும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் / ஆதாயம், ஏஜென்ட்டுகள் மற்றும் தரகர்களின் நோக்கம் குறித்து தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் முதலீடு செய்யும் முன் முதலீட்டு விதிமுறைகளை நன்கு அறிந்திருந்தால், நீங்கள் ஏமாற வாய்ப்பில்லை. அப்போதுதான் நிதிச் சுதந்திரத்துக்கான உங்கள் தொகுப்பு நிதிக்கான இலக்கை விரைந்து அடைய முடியும். இல்லையென்றால் அதிக கமிஷன், குறைவான லாபம் என்பதாக உங்கள் இலக்குத் தொகையை அடைய நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும்.

நிதிச் சுதந்திரத்தை அடைய சரியாக எவ்வளவு தொகை தேவை என்பதைக் கணக்கிடுங்கள். இதை உங்கள் தேவை மற்றும் செலவுகளைக் கவனித்து, எதிர்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் எனத் தீர்மானிக்க வேண்டும்.

உங்களுடைய முதலீட்டின் ஆதாய மானது, பணவீக்கத்தைவிடக் குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுகச் சிறுகக் கரைந்துவிடும். இந்தக் கணக்கீட்டில் பணவீக்க விகிதம், வருமான வரியைச் சேர்க்கத் தவறாதீர்கள்.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில் மோசமான சூழல் முதலீடு செய்வதற்கான சரியான நேரமாகும். நிறுவனப் பங்குகள், மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளின் யூனிட்டுகளை மற்றவர்கள் பீதி அடைந்து விற்கும்போது நீங்கள் வாங்கப் பழகுங்கள். சரியும் சந்தையில் செய்யும் முதலீடு பிற்காலத்தில் நல்ல பலனை அளிக்கும்.

உங்களின் முதலீடுகள் மற்றும் பாசிவ் வருமானம் போன்றவை நீங்கள் விரைவிலேயே நிதிச் சுதந்திரம் அடைய உதவும். மேலும், நீங்கள் எந்த ஒரு பயமும் இல்லாமல் நீங்கள் விரும்பும் புதிய தொழிலைக்கூட ஆரம்பிக்க முடியும்.

6. இலக்கு நிர்ணயம் முக்கியம்

நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைய முடிவெடுத்தவுடன், உங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயம் செய்வது முக்கியம்.

எத்தனை ஆண்டுகளுக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்ன தேவை உள்ளது என்பதைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். பலரும் இலக்குத் தொகையை நிர்ணயம் செய்யாமல் ஏனோதானோ என்று சேமித்து வருவதால், நிதிச் சுதந்திரத்தை அடைய முடியாமலே போய்விடுகிறது.

7. ரிஸ்க் எடுக்கும் திறன்

முதலீடு செய்யத் தொடங்கும் முன், உங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மைக்கேற்ப எந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதற்கு நிதி ஆலோசகர்கள் உதவி செய் வார்கள். அவர்கள், ரிஸ்க் குறைவு – வருமானம் குறைவு, ரிஸ்க் அதிகம் – வருமானம் அதிகம் என்கிற திட்டங்களில் கலவையாக முதலீடு செய்ய ஆலோசனை வழங்குவார்கள். மேலும், உங்களுக்கு நிதிச் சுதந்திரம் அடைய இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களையும் பரிந்துரை செய்வார்கள்.

முதலீட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, முதலீட்டில் அவ்வப்போது தேவையான மாற்றங்களைச் செய்வது அவசியம்.

8. எஸ்.ஐ.பி முறை

நிதிச் சுதந்திரத்தை நோக்கி செல்ல சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீட்டை இன்றே தொடங்குங்கள்.

இதன் மூலம் உங்களால் நீண்ட காலத்தில் பெரும் தொகையைத் திரட்ட முடியும். இதற்கு டைவர் சிஃபைட் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நிச்சயம் கைகொடுக்கும்.

9. அஸெட் அலோகேஷன்

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், வயதுக்கு ஏற்ப முதலீட்டைப் பிரித்து அஸெட் அலோகேஷன்படி தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள் என முதலீடு செய்துவந்தால், நிதிச் சுதந்திரத்துக்கான உங்கள் முதலீட்டுக் கலவை (போர்ட் ஃபோலியோ) எப்போதும் சராசரியாக ஆண்டுக்கு 10%-12% வருமானம் தரும்படியாக இருக்கும். மேலும், முதலீட்டை ஒரு சொத்துப் பிரிவின்கீழ் வரும் பல்வேறு திட்டங்களில் டைவர்சிஃபிகேஷன் முறையில் முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதோடு, அதிக வருமானத்தையும் பெற முடியும். இதன் மூலம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சராசரி யாகப் பணவீக்க விகிதத்தைவிட கூடுதலாக வருமானம் வரக்கூடிய ஏற்பாட்டைச் செய்துகொள்ள முடியும்.

10. அவசரகால நிதி, காப்பீடுகள் கட்டாயம்

ஒருவர் தான் இந்த உலகில் இல்லாவிட்டாலும், தன்னை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் நிதி இலக்குகளைப் பாதுகாக்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

உங்களின் நிதிச் சுதந்திரத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்க ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு போதிய தொகைக்கு எடுத்திருப்பது அவசியம்.

11. வருமான வரியை மிச்சப் படுத்துவதும் அவசியம்

வருமான வரிச் சலுகை திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம். நீங்கள் வரிச் சலுகை அளிக்கும் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்வதால் முதலீடு செய்யும் போதும் மற்றும் பின்னர் பணமாக்கும் போதும் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை பெற முடியும்.

12. கடன் இல்லா வாழ்க்கை

உங்களுக்கு ஏதாவது கடன்கள் இருந் தால், அவற்றிலிருந்து வெளியேற முதலில் திட்டமிடுங்கள். கடன்கள், நிதிச் சுதந்தி ரத்தை அடையவிடாது. வீட்டுக் கடன் தவிர்த்த இதர கடன்களை ஒரு போதும் வாங்காதீர்கள். கடன் மூலம் கார், கடன் மூலம் வாசிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற வற்றை வாங்குவதைத் தவிருங்கள். சில வசதிகளைச் சிறிது காலம் தள்ளி வைத்து, கைக்காசு போட்டு அவற்றை வாங்கும் போது நிதிச் சுதந்திரம் என்பது உங்களுக் குக் கூடிய விரைவிலேயே அமையும். ஒருவருக்கு கடன் இல்லை என்றாலே அவருக்கு கவலை இல்லை, மன அழுத்தம் இல்லை என்று சொல்லலாம்.

நீங்கள் நிதிச் சுதந்திரம் பெறுவதற்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இனி அவற்றைக் கடைப்பிடிப்பது உங்கள் கைகளில்!

கூட்டு வட்டியின் மகிமை!

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) தொடர்ந்து முதலீடு செய்துவருவதன் மூலம் கூட்டு வட்டி / வருமானத்தின் மகிமை மூலம் கூடிய விரைவிலேயே அதிக தொகுப்பு நிதியைச் சேர்க்க முடியும்.

இதர முதலீடுகளின் மூலம் உங்களின் கையில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு (Reinvesting) செய்வதால், வருமானத்துக்கு வருமானம் (வட்டிக்கு வட்டி) கிடைத்து உங்களுக்கான தொகுப்பு நிதியின் மதிப்பு வேகமாக உயரும்.

பாசிவ் வருமானம்..!

நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வீடு போன்றவை நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது வருமானம் ஈட்டித் தருபவையாக இருக்கின்றன. இந்த முதலீடுகள் மூலம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பாதித்துத் தரும் இந்த வருமானம், செயலற்ற வருமானம் அதாவது, பாசிவ் இன்கம் எனப்படும். பாசிவ் இன்கம் மூலமே நிதிச் சுதந்திரத்தை எளிதாக அடைய முடியும்!

நிதிச் சுதந்திரம் அடைந்த பிறகு..!

ருவர் நிதிச் சுதந்திரம் அடைந்த பிறகு, பணிக்குச் செல்ல வேண்டாம்; வேலை செய்ய வேண்டும் என்று யாரும் பரிந்துரைக்கவில்லை. தங்களால் மகிழ்ச்சியாகச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம். இந்தத் தொகையை அவசியம் தேவைப்படுபவர்களுக்கு சமுதாய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தலாம். ஏழை, எளியவர்களின் கல்விக்கு உதவி செய்யலாம். உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்ப விவரங்களை மற்றவர்களுக்குக் குறைவான கட்டணம் அல்லது இலவசமாகக் கற்றுக்கொடுக்கலாம். அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி, மன நிம்மதிக்கு ஈடுஇணை எதுவும் கிடையாது.

பிட்ஸ்

உலக அளவில் அக்சென்சர் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விடவும் இந்திய அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விடவும் உயர்ந்துள்ளது டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு!

பிட்ஸ்

கடந்த 2020-ம் ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு மிக அதிக அளவில் இந்தியாவுக்குத் தான் வந்திருக்கிறது. சீனாவில் 4% மட்டுமே வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருக்க, இந்தியாவுக்கு 13% வந்திருக்கிறது!