Published:Updated:

வீடு கட்ட ரூ.4 கோடி தந்த நவீன கர்ணன் ஐ.டி.எஃப்.சி வைத்தியநாதன்!

வைத்தியநாதன்
பிரீமியம் ஸ்டோரி
வைத்தியநாதன்

நிதி உதவி

வீடு கட்ட ரூ.4 கோடி தந்த நவீன கர்ணன் ஐ.டி.எஃப்.சி வைத்தியநாதன்!

நிதி உதவி

Published:Updated:
வைத்தியநாதன்
பிரீமியம் ஸ்டோரி
வைத்தியநாதன்

பணம் படைத்தவர்கள் தங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் சரியாகத் தருவதே பெரிய விஷயமாக இருக்கும் இந்தக் காலத்தில், தன்னிடம் பணிபுரிந்துவரும் பணியாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.3.95 கோடியை நன்கொடையாகக் கொடுத்து உதவியிருக்கிறார் ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் வைத்தியநாதன். கலியுக கர்ணனாக விளங்கும் இந்த வைத்தியநாதனின் செயலைப் பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தவர் வைத்தியநாதன். அவருடைய தந்தைக்கு மத்திய அரசுப் பணி என்பதால், வட இந்தியாவின் பல நகரங்களில் படித்து வளர்ந்தார். மத்திய தரக் குடும்பம் என்பதால், சிறுவயது முதலே பணப் பற்றாக்குறையால் தவித்தார் வைத்தியநாதன். என்றாலும், நம்பிக்கை தளராமல் நன்கு படித்தார்.

வைத்தியநாதன்
வைத்தியநாதன்

படித்து முடித்தபின் முதலில் சிட்டி பேங்கில் வேலைக்குச் சேர்ந்த வைத்தியநாதன், பிற்பாடு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்குப் பணிக்கு மாறினார். திறமையான பணியின் காரணமாக அந்த வங்கியின் உயர்நிலைக்கு முன்னேறினார் வைத்தியநாதன். பிறகு, அதிலிருந்து வேறொரு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தரவில்லை.

அடுத்து ஃபர்ஸ்ட் பேங்க் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றியைத் தந்தது இந்த நிறுவனம். இந்த ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தை ஐ.டி.எஃப்.சி நிறுவனம் வாங்கியது. தற்போது ஐ.டிஎஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் வைத்தியநாதன். ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தைத் தொடங்கியவர் என்கிற முறையில் இவருக்கு பல கோடி பங்குகள் கிடைத்தன. இந்தப் பங்குகளில் ஒரு பகுதியைத் தனக்கு உதவியவர்களுக்கு நன்கொடையாக தந்து உதவி வருகிறார் வைத்தியநாதன்.

வைத்தியநாதன் தன்னுடைய இளம் வயதில் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்க விண்ணப்பித்தார். இன்டர்வியூக்கான அழைப்பும் அவருக்கு வந்தது. ஆனால், ராஞ்சிக்குச் செல்ல அவரிடம் பணம் இல்லை. இதைக் கேள்விப் பட்ட அவருடைய ஆசிரியர் அவருக்கு ரூ.500 தந்து உதவினார்.

இந்த உதவியை மறக்காமல் மனதில் வைத்திருந்த வைத்தியநாதன், ரூ.500 தந்து உதவிய அந்த ஆசிரியருக்கு வட்டியும் முதலுமாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கின் ஒரு லட்சம் பங்குகளை 2020-ல் அளித்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தனக்கு உதவியாக இருந்த மூன்று பேருக்கு ரூ.2.43 கோடி மதிப்புள்ள 4.5 லட்சம் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கின் பங்குகளை வழங்கினார். தவிர, தன் உறவினர் களுக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள 4.3 லட்சம் பங்குகளைத் தந்து உதவினார்.

தற்போது தன்னுடைய பயிற்சி யாளர், டிரைவர், வீட்டு உதவி யாளர் என மொத்தம் ஐந்து பேர் வீடு கட்ட ரூ.4 கோடி தந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அன்று வைத்தியநாதன் தன் பயிற்சியாளர் ரமேஷ் ராஜுவுக்கு 3 லட்சம் பங்குகளையும், வீட்டு உதவியாளர் பிரஞ்சல் நர்வேகர் மற்றும் டிரைவர் அழகர்சாமி, சி முனாபர் ஆகியோருக்கு தலா 2 லட்சம் பங்குகளையும், அலுவலக உதவி ஊழியர்கள் தீபக் பதரே மற்றும் சந்தோஷ் ஜோகலே ஆகியோருக்கு தலா 1 லட்சம் பங்குகளையும் பரிசாக வழங்கினார்.

மேலும், ருக்மணி சமூக நல அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவாக 2 லட்சம் பங்குகளை அளித்துள்ளார் என வங்கித் தரப்பிலிருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது.

2019 மார்ச்சில் வைத்திய நாதனிடம் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கின் 5.68 கோடி பங்குகள் இருந்தன. ஆனால், கடந்த டிசம்பர் 31-ம் தேதியின்படி இவரிடம் 2.44 கோடி பங்குகள் மட்டுமே உள்ளன. இன்றைய தேதியில் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்கின் ஒரு பங்கு விலை 40.35 ரூபாயாக உள்ளது.

தனக்கு உதவியாக இருந்தவர்களை மறக்காமல் கைம்மாறு செய்யும் வைத்தியநாதனை ஒரு வித்தியாசமான தொழிலதிபர் என்பதுடன் நவீன கர்ணன் என்றே சொல்லலாம்.