Published:Updated:

கொரோனா காலம்... குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டிய விஷயம்! குடும்ப நலனுக்காக இதைச் செய்யுங்கள்!

F I N A N C I A L M A N A G M E N T

பிரீமியம் ஸ்டோரி

சில மாதங்களுக்கு முன்பு, கிருஷ்ணன் என்பவர் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துபோக, அவருடைய குடும்பம் தற்போது செய்வதறியாமல் தவிக்கிறது. தன் கணவரை இழந்த துக்கத்துடன், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கிக்கொண்டார் கிருஷ்ணனின் மனைவி கிரிஜா.

தன் கணவர் என்னிடம் பணம் சார்ந்த விஷயங்களை எப்போதுமே பகிர்ந்துகொண்டதில்லை என்று சொல்லும் அவருக்கு, கிருஷ்ணன் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக் கிறார், தொழில் சார்ந்த விஷயங்கள், முதலீடு செய்திருக்கும் நிதி சார்ந்த விவரங்கள், இன்ஷூரன்ஸ் சார்ந்த விஷயங்கள் என எதுவுமே தெரியாது.

செய்வதறியாமல் உட்கார்ந்திருந்த கிரிஜாவிடம், அப்பா எழுதி வைத்திருக்கும் டைரி என ஏதோ ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்து தன் மூத்த மகன் பிரகாஷ் நீட்ட, அதை வாங்கிப் படித்த பிறகுதான் கிரிஜாவிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது. ஏனெனில் அந்த டைரியில், யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறேன் என்கிற விவரம் முதல், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து மற்றும் முதலீடு சார்ந்த விவரங்கள், கிருஷ்ணன் அவர் பெயரில் எடுத்து வைத்திருந்த முதலீட்டையும் தன் இரண்டு மகன்கள் பெயரிலும் எடுத்து வைத்திருந்த இன்ஷூரன்ஸ் விவரங்களைக் குறித்து வைத்திருந்தார்.

அவர் எழுதி வைத்த டைரி ஒருவேளை, அவர்களின் கைக்குக் கிடைக்காமல் போயிருந்தால் அல்லது அந்த டைரியை கிருஷ்ணன் எழுதாமலேயே விட்டிருந்தால்... கிரிஜாவின் வாழக்கையே நரகமாயிருக்கும்.

கொரோனா காலம்... குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டிய விஷயம்! குடும்ப நலனுக்காக இதைச் செய்யுங்கள்!

இன்றைய நிலையில், கிரிஜாவைப் போல, எதிர்பாராத மரணத்தைச் சந்தித்த பல குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் குடும்பங்களைப்போல, உங்களுடைய குடும்பமும் தத்தளிக்கக் கூடாது எனில், இப்போதே நிதி சார்ந்த விஷயங் களை உங்களுடைய குடும்ப உறுப்பினர் களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். ‘இதெல்லாம் நமக்கு நடக்காது’ என்ற அசட்டு நம்பிக்கை யாருக்கும் வேண்டாம். இன்றைய நிலையில் யாரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என்பதே உண்மை.

குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பணம் சார்ந்த விஷயங்கள் என்னென்ன, நிதி சார்ந்த குறிப்புகளை எப்படி, எங்கே குறித்து வைப்பது, பிள்ளைகளுக்குப் பொருளா தார ரீதியில் குடும்பப் பொறுப்புகளைக் கையாளக் கற்றுக் கொடுப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுடன் நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வித்யாபாலா
வித்யாபாலா

“குடும்ப உறுப்பினர்களிடம் பணம் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள கொரோனாவால் உண்டாகும் மரணம் மட்டுமே காரணம் இல்லை. விபத்தால் உண்டாகும் மரணம் அல்லது திடீரென ஏற்படும் உடல்நலக் குறைவால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். இதுமாதிரியான சமயங் களில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் சார்ந்த நடவடிக்கைகளைத் தெரியப்படுத்தியிருந்தால், அவர்களால் பொருளாதார ரீதியான விஷயங்களைச் சிரமமின்றிக் கையாள முடியும்.

நாம் மேற்கொள்ளும் நிதி சார்ந்த நடவடிக்கைகளை பிறரிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளும்போதுதான் பிரச்னைகள் உருவாகுமே தவிர, குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்வதால், எந்தவொரு பிரச்னைக்கும் வர வாய்ப்பில்லை. அதனால் மற்ற விஷயங்களைக் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதுபோல, பணம் சார்ந்த விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுங்கள். அப்படிப் பேச வேண்டியது நிகழ்காலத்தின் கட்டாயமாகவும் மாறியிருக்கிறது என்பதைத் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

‘‘பணம் சார்ந்த விஷயங்களைப் பேசினாலும், அது என் மனைவிக்குப் புரிவதில்லை, பிள்ளைகளிடம் பண விஷயங் களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என ஏதேதோ காரணங் களைச் சொல்லி, குடும்ப உறுப்பினர்களுடனான உரை யாடல்களைத் தட்டிக் கழிக் கிறோம். அப்படியே பேசுவதற்கு நேரம் இருந்தாலும், வீட்டின் குடும்பத் தலைவர், குடும்பப் பொருளாதார விஷயங்களைக் கவனித்துக்கொள்வார் என்று மனைவியும், பணப் பிரச்னைகளை அப்பா பார்த்துக்கொள்வார் என்று பிள்ளைகளும் கண்டு கொள்ளாமல் விடுவது நம் பெரும்பாலான குடும்பங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படியிருக்கும்போது குடும்பத் தலைவருக்குத் திடீரென அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால், மொத்தக் குடும்பமும் பொருளா தார ரீதியான பாதிப்பைச் சந்திக்க நேரிடும். அவர் மேற்கொண்டிருந்த பண நிர்வாகத்தில் எண்ணற்ற குழப்பங்களைக் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க நேரிடும். பணம் சார்ந்து உறவினர்கள் அல்லது மூன்றாம் நபரால் குடும்ப உறுப்பினர்கள் ஏமாற்றப்படலாம். அதனால் மற்ற விஷயங்களைப் பேசுவதுபோல, பணம் சார்ந்த விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுங்கள்.

கடன் பற்றிப் பேசுங்கள்...

குடும்ப உறுப்பினர்களுடன் அவசியம் பேச வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது, கடன். நம் நாட்டின் மொத்தக் கடன் எவ்வளவு எனத் தெரிந்து வைத்திருப்பதைவிட, நம் குடும்பத்தின் மீதான கடன் எவ்வளவு என்பதைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். எதற்காகக் கடன் வாங்கினோம், யாரிடமிருந்து, எவ்வளவு கடன் வாங்கினோம், எந்தக் கடனை முதலில் அடைப்பது எனக் கடன் சார்ந்த உரையாடல்கள் குடும்ப உறுப்பினர்களுக்குள் அவ்வப்போது இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வீடு கட்ட வாங்கிய கடன், கிரெடிட் கார்டு கடன், கார் கடன், நண்பர்கள் மற்றும் உறவினர் களிடமிருந்து வாங்கிய கடன் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக டைரியில் எழுதி வைத்துக் கொண்டால் கூடுதல் சிறப்பு. கடனை வாங்குவதைப் பகிர்ந்து கொள்வதுபோல, பிறருக்குக் கடன் கொடுத்த விவரங்களையும் பகிர்ந்துகொள்வதில் கவனம் அவசியம்.

இன்ஷூரன்ஸ் பற்றித் தெரியப் படுத்துங்கள்...

இன்றைய நிலையில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் நன்மைகள் பற்றித் தெரியாத வர்கள் இருக்க முடியாது. மக்களுக்கு முன்பைவிட, கொரோனா காலகட்டத்தில் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித் திருக்கிறது. குடும்பத் தலைவர்், தன் பெயரில், தன் மனைவி மற்றும் பிள்ளை களுக்காக எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விவரங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதுடன், அந்த ஆவணங்களையும் மனைவி மற்றும் பிள்ளைகள் எளிதில் எடுத்துப் பார்க்கும் இடத்தில் வைப்பது, ஆபத்துக் காலங்களில் பயன்படும்.

உதாரணத்துக்கு, என் நண்பருக்கு ஏற்பட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். அவருடைய பெயர் கிரி. ரூ.3 லட்சத்துக்குத் தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருந்தார். ஆனால், அதை தன் மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ சொல்லவில்லை. திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தால், அவருக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மூன்று நாள் தொடர் மயக்கத்திலிருந்து கண் விழித்தவரிடம், அவரின் மனைவியும் பிள்ளைகளும் அறுவை சிகிச்சைக்கான பணத்துக்குப் பட்ட கஷ்டம் பற்றிச் சொன்னார்கள். அதன் பிறகுதான், அவர் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் விவரத்தைக் குடும்ப உறுப் பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதை முன்னரே பகிர்ந்திருந்தால், பணத்தைப் புரட்ட இவ்வளவு சிரமப்படத் தேவை இருந்திருக்காது.

சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்கள்...

அஞ்சலகச் சேமிப்பு, வங்கிச் சேமிப்பு, தங்கம் சார்ந்த முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் என எதுவாக இருந்தாலும் அதை முறையாக, தெளிவாக ஆவணப் படுத்தி வையுங்கள். அந்த விவரங்களையும் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொல்லி வைப்பது அவசியம். அத்துடன், அவற்றை அவசர காலத்தில் எப்படிக் கையாள்வது என்பதையும் சொல்லி வைக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு விவரங்களைக் குறித்து வைப்பதுபோல, ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களையும், பின்நம்பர் உட்பட அனைத்தையும் ஒரு டைரியில் குறித்து வைப்பது நல்லது, பாதுகாப்பானதும்கூட. இவற்றை மெயிலில் அல்லது ஸ்மார்ட்போனில் குறித்து வைக்க வேண்டாம். இணையப் பயன்பாடு அதிகம் இருக்கும் டிவைஸ்கள் எளிதில் ஹேக் செய்யப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் பணம் சார்ந்த விஷயங்களை ஆவணப்படுத்தும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அதனால், மனைவிக்கோ, உங்களுடைய பிள்ளைகளுக்கோ தெரிகிற மாதிரி டைரியில் எழுதி அதை ரகசியமாக வீட்டுக்குள் வைப்பதுதான் நல்லது.

சொத்து குறித்த விவரங்கள்...

யாருக்கும் தெரியாமல் சொத்து சேர்த்து வைப்பதே சரி என்றும், அதுதான் கெளரவம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். நம் சேமிப்பு, முதலீடு குறித்த விஷயங்கள் வெளியில் இருப்பவர்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். அதனால் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும் கணவர் மனைவியிடம் அல்லது மனைவி கணவரிடம் பகிர்ந்துகொள்வது அவசியம்.

இன்றைய நிலையில், வீட்டு நடப்பை விட்டுவிட்டு, நாட்டு நடப்புகளைத்தான் மக்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒரு குடும்பம் பொருளாதார ரீதியான சிக்கலைச் சந்திக்கும்போது திணற வேண்டியிருக்கிறது. கணவனும் மனைவியும், பொருளா தார ரீதியாகக் கலந்து பேசி, அதில் தெளிவடைவது அவசியம். அப்போதுதான் எதிர்கால வாழ்க்கை யைப் பொருளாதார ரீதியில் சரியாகவும் தெளிவாகவும் அணுக முடியும்” என்றார் தெளிவாக.

ஆக, இந்தக் கட்டுரையில் இதுவரை நாம் பார்த்த விஷயங்களை இதுநாள் வரை செய்யாமலே இருந்திருக்கலாம். ஆனால், இனியும் அப்படிச் செய்யாமல் இருப்பது தவறு என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் நிதிநிலை அனைத்து விவரங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிருங்கள்!

உடனே செய்ய வேண்டியது என்ன?

கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் மருத்துவச் செலவுகளும் அதிகரித்திருக்கின்றன. அதனால் அவசரத்துக்கு எடுத்து பயன்படுத்தும் வகையில், ரொக்கமாக சில ஆயிரங்களை கையில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட பணத்தை வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டு, அவசரகாலப் பயன்பாட்டுக்கு அதை முதலில் எடுத்துப் பயன்படுத்த குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவையுங்கள். கைகளில் பணமில்லை, அனைத்தையும் முதலீடு செய்து வைத்திருக்கிறேன் என்பவர்கள், அவசரத் தேவைக்கு உண்டான நிதி அளவுக்கு, விற்க வேண்டிய முதலீடுகளை விற்று, அந்தப் பணத்தைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரியான பேன்டமிக் சூழ்நிலையை நாம் பார்த்திருக்காதபோது, இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

அதே போல, அஞ்சலகம், வங்கிச் சேமிப்புகளுக்கு, இன்ஷூரன்ஸ்களுக்கு, முதலீடுகளுக்கு இதுவரை நாமினி குறிப்பிடாதவர்கள், உடனே அதைச் சரிபார்த்து யாரை நாமினியாக நியமிக்க வேண்டுமோ, அதைச் செய்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு