Published:Updated:

கொரோனா காலத்தில் குடும்ப பட்ஜெட்டைக் கையாள்வது எப்படி?- ஓர் வழிகாட்டுதல்!

நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு – இதுதான் கோவிட் 19 நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இடம். கொரோனா வைரஸ் அதிகம் பாதித்திருப்பது நம் உடலையா அல்லது மனதையா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

நோய் வந்து விடுமோ என்ற பயத்தைவிட, வாழ்க்கை இனி எப்படிப் போகும் என்ற கவலையை சராசரி மக்களிடம் பார்க்க முடிகிறது. ஏனெனில், மாதச் சம்பளம் வாங்கும் மக்களில் 18% அளவு மக்கள் வேலை இழப்பையும், 38% அளவு மக்கள் ஊதியக் குறைப்பையும் சந்தித்திருக்கின்றனர்.

புதிய ஸ்டார்ட் அப்கள் பலவும் காணாமல் போய்விட்டன; சிறு குறு தொழில்கள் நசிந்து வருவதைத் தடுக்க அரசு பெரு முயற்சி மேற்கொள்கிறது; `கேஷ் ரிச்’ என்று கருதப்படும் பெரிய ஐ.டி கம்பனிகள் கூட சம்பளக் குறைப்பு, பணியாளர்களை சம்பளமில்லா விடுமுறையில் அனுப்புவது, புதிதாக கேம்பஸ் ரெக்ரூட் செய்த மாணவர்களை வேலைக்கு அழைக்காமல் இருப்பது போன்ற முறைகளைக் கையாண்டு தங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் போராடுகின்றன.

எல்லாக் கம்பெனிகளும் தடுமாறுவதாகக் கூற முடியாது. விமானப் போக்குவரத்து, ஹோட்டல் தொழில், வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை போன்ற துறைகளைச் சார்ந்த கம்பெனிகள் பேரிழப்பைச் சந்திக்கும் நிலையில், டெலிகாம், பார்மா, ஆன்லைன் வியாபாரம் போன்றவை முன்னேற்றம் காண்கின்றன. வங்கிகள், அரசுத் துறைகள் போன்றவை தாங்கிப் பிடிப்பதால் மாத வருமானம் பெறும் மக்களில் 44% பேரின் நிதி நிலைமையில் பாதிப்பு அதிகமில்லை என்று எகனாமிக் டைம்ஸ் நடத்திய சர்வே கூறுகிறது.

வேலை இழந்த 18% அளவு மக்கள்:

இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிகக் கொடுமையானது. இந்தப் பாதிப்பு, ஏதோ திறமைக் குறைவால் அல்லது கடின உழைப்பு செய்யாததால் வந்த பாதிப்பு அல்ல. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு! அதுவும் வேலை இழந்தோரில் 10 -14 வருட அனுபவம் கொண்டவர்களே அதிகம். இந்த நிலையில் இவர்கள் செய்யக் கூடியவை:

1. நிலைமை எப்போது சீராகும் என்பதே தெரியாத நிலையில், மிக மிக அவசியத் தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

2. எமர்ஜென்ஸி ஃபண்ட் வைத்திருந்தால் இந்தச் சமயம் அதை உபயோகிக்கலாம்.

3. அரசு அறிவித்திருக்கும் மொரடோரியத்தை உபயோகப்படுத்தி கடன் கட்டுவதை தள்ளிப் போடத்தயங்கக் கூடாது.

4. புது தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ரீஸ்கில் (Reskill) என்னும் முறையில் திறமைகளை வளர்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பளக் குறைப்பை சந்திக்கும் 38% மக்கள்:

இவர்களில் பலர் தங்கள் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தையும் பதிவு செய்கிறார்கள். ஆனால் `டீம் லீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஷர்மா கூறுவதுபோல, இன்க்ரிமென்ட் வராவிட்டாலும், சம்பளக் குறைப்பே ஏற்பட்டாலும், கம்பெனியின் மீது நம்பிக்கை வைத்து, நிலைமையில் முன்னேற்றம் வரும்வரை பொறுமையாக இருப்பதே உசிதம். ஆனால், கண்டிப்பாக வேலை போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால், அது நடக்கும் முன்பாக வேறு வேலை தேடிக்கொள்வதும், அதற்காக தன் திறமைகளை வளர்த்துக்கொள்வதும் அவசியம்.

நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க இவர்கள் செய்யக் கூடியவை என்னென்ன?

1. லக்ஸுரி செலவுகளை தவிர்க்க வேண்டும்.

2. எமர்ஜென்ஸி ஃபண்டை உபயோகிப்பதை தள்ளிப்போட வேண்டும்.

லாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்? #Analysis

3. கிரெடிட் கார்ட், பர்சனல் லோன் கொடுத்த கம்பெனிகளுடன் பேசி, பெனால்டி இன்றி இ.எம்.ஐயை தள்ளிப்போடுவதற்கு முயற்சி செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பியை தற்காலிகமாக நிறுத்தலாம்.

4. வேறு வழிகளில் வருமானத்தைப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

அதிக பாதிப்பில்லாத 44 சதவிகித மக்கள்:

இவர்களுக்கு பணப்புழக்கம் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால், இவர்களும் தங்கள் சேவிங்ஸ் போதுமா, இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவது போன்ற மனக்கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு வகையில் கொரோனா இவர்களுக்கு உதவி செய்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான ஃபைனான்ஷியல் கட்டுரைகள் ஏற்படுத்தாத விழிப்புணர்வை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹோட்டல், சினிமா, வாகனச் செலவு, சுற்றுலாச் செலவு போன்ற லக்ஸுரி செலவுகள் கொரோனா புண்ணியத்தில் குறைந்துவிட்டன. தங்கள் மனக் கவலையைப் போக்க இவர்கள் செய்ய வேண்டியவை:

1. லக்ஸுரி செலவுகள் குறைந்துள்ளதால், இதுவரை எமர்ஜென்ஸி ஃபண்ட் வைத்திராதவர்கள் இப்போது அதற்கு ஏற்பாடு செய்யலாம்.

2. சந்தை சரியும் வாய்ப்பு உள்ளதால் மியூச்சுவல் ஃபண்ட் எஸ் .ஐ.பியை தொடர வேண்டும்.

பணியாளர்கள் (மாதிரி படம்)
பணியாளர்கள் (மாதிரி படம்)

3. யூலிப் / மனி பேக் பாலிசிகளை பரிசீலித்து புதிய டெர்ம் இன்ஷூரன்ஸ்/ ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு மாறலாம். இதன் மூலம் சிறிது பணம் கைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.

4. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்காக அரசு, போலீஸ், மருத்துவர்கள், பொதுமக்கள் என்று எல்லோர் மீதும் நம்பிக்கை இழக்காமல், மனதை பாசிட்டிவாக வைத்துக்கொள்வது நல்லது.

கொரோனாவும் கடந்து போகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு