Published:Updated:

நிதி நிர்வாகத்தையும் கற்றுத் தர வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நிதி நிர்வாகத்தையும் கற்றுத் தர வேண்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

நாட்டிலிருக்கும் எந்தவொரு தனிநபரோ, தொழில் நிறுவனமோ விடுபட்டு விடாமல், நூறு சதவிகிதம் வங்கிகள் உள்ளிட்ட முறையான வழிமுறைகளில் ‘நிதிச் சேவை’யைப் (Financial Inclusion) பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்கிற இலக்குடன்தான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் செயலாற்றி வருகின்றன. இதில் நாம் தொடர்ந்து முன்னேறுகிறோமா, இல்லையா என்பதைக் காட்டுவதற்காக ஒரு குறியீட்டை உருவாக்கி, அதுதொடர்பான அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது ரிசர்வ் வங்கி.

இப்படி அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, அனைவருக்குமான நிதிச் சேவையில் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம் என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி. 2017-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 43.4 என்கிற புள்ளிகளில் இருந்த நாம், இந்த ஆண்டின் (2021) மார்ச் மாதத்தில் 53.9 புள்ளிகள் என்கிற அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். குறுகிய காலத்தில் நடந்திருக்கும் இந்த முன்னேற்றம், 2025-ம் ஆண்டில் 70 புள்ளிகள் என்கிற அளவுக்கு வளர்ந்திருப்போம் என்னும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அப்போது நம் நாட்டில் 70% மக்கள், முறையான வழிகளில் பணப்பரிவர்த்தனை செய்பவர்களாக மாறியிருப்பர்கள்.

‘ஜன் தன்’ என்கிற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கைத் தொடங்கச் செய்தது, இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம். ‘ஜன் தன்’ திட்டம் மூலம் பல கோடி வங்கிக் கணக்குகள் புதிதாக உருவாக்கப்பட்டதுடன், மத்திய அரசின் மானியங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக உரிய பயனாளிகளுக்குச் சென்றுசேர்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், இத்துடன் பெருமைப்பட்டு நின்றுவிடக் கூடாது. வங்கிக் கணக்கு என்பது, ஓர் ஆரம்பம் மட்டுமே. இந்த வங்கிக் கணக்கை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமெனில், நிதி நிர்வாகம் தொடர்பான கல்வி மிகமிக அவசியம். 20 வயதைத் தாண்டிய அனைவருக்கும் பள்ளி, கல்லூரி முதலே நிதி நிர்வாகக் கல்வி அளிப்பதன் மூலமே, ‘அனைவருக்கும் நிதிச்சேவை’ என்பதில் அர்த்தம் நிறைந்த வளர்ச்சியை நம்மால் காண முடியும்.

நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய தலைமுறைக்கும் நிதிச்சேவை என்பதைப் பரவலாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பதன்மூலம்தான் செலவுகளை சரியாகச் செய்வதற்கு, வட்டியாகப் பெரும் பணத்தைக் கட்டி வீணடிக்காமல் இருப்பதற்கு, மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறாமல் தடுப்பதற்கு, சரியான திட்டங்களில் முதலீடு செய்து, சரியான லாபம் பெறுவதற்குரிய வழிகளை மக்கள் அனைவருக்கும் காட்ட முடியும்.

முக்கியமான இந்த விஷயத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம். இதைச் செய்யாமல், பொருளாதார ரீதியில் நாம் வளர்ந்துவிட்டோம், முன்னேறி விட்டோம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருக்காது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism