Published:Updated:

நிதி மேலாண்மை வழிமுறைகள்... உங்களுக்கு எவையெல்லாம் பொருந்தும்..?

நிதி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை வழிமுறைகள்... உங்களுக்கு எவையெல்லாம் பொருந்தும்..?

நிதி மேலாண்மை

Published:Updated:
நிதி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நிதி மேலாண்மை

பர்சனல் ஃபைனான்ஸ் அதாவது, தனிநபர் நிதி மேலாண்மை – இந்த வார்த்தைகளை சமீப காலங்களில் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால், அவற்றின் உண்மையான உள்பொருளை நாம் உணர்வ தில்லை. கம்பெனிகளுக்கு கார்ப்பரேட் ஃபைனான்ஸ் இருப்பதுபோல, வியாபாரத்துக்கு பிசினஸ் ஃபைனான்ஸ் இருப்பதுபோல, தனி மனிதர்கள் சம்பந்தப்பட்டது பர்சனல் ஃபைனான்ஸ் என்று நாம் எண்ணுவது ஓரளவு மட்டுமே சரி.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை வேறுபடுவது போல, நிதித் தேவையும் பயன்பாடும் வேறுபடும். வயது, வளர்ந்த சூழல், கிடைக்கும் வருவாய் போன்றவற்றைப் பொறுத்தும் தனிநபர் நிதி மேலாண்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்குப் பொருந்தும் நிதிக் கோட்பாடுகள் / முதலீடுகள் இன்னொருவருக்குப் பொருந்தாமல் போகலாம். அதனால் தான் நிதி ஆலோசகர்கள் ‘கஸ்டமர் புரொஃபைல்’ தயாரிப்பதை முதன்மையான வேலையாகக் கருதுகிறார்கள்.

பொதுவான, சில நிதி மேலாண்மை / முதலீட்டுக் கோட் பாடுகளையும், அவை யாருக்குப் பொருந்தும், யாருக்குப் பொருந்தாது என்பதையும் பார்ப்போம்.

எமர்ஜென்சி ஃபண்ட்...

குறைந்தபட்சம் ஆறு மாத சம்பளம் எமர்ஜென்சி ஃபண்டாக வங்கியிலோ, லிக்விட் ஃபண்டிலோ வைத்திருக்க வேண்டும் என்பதே நிதி நிபுணர்கள் அனைவரும் ஒரே குரலில் வற்புறுத்தும் விஷயம். இது உண்மையும்கூட. கோவிட் காலத்தில் இதன் தேவை அதிகம் உணரப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டு பணத்தையும் உடல்நலத்தையும் இழந்தவர்கள் மட்டுமன்றி, வேலை இழந்தவர்கள், சம்பளக் குறைப்பைச் சந்தித்தவர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் எமர்ஜென்சி ஃபண்ட் இல்லாததன் ஆபத்தை உணர்ந்தனர். அதனால் சமீப காலத்தில் முதலீட்டில் இறங்கும் இளைஞர்கள் முதலில் எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவதில் மும்முரம் காட்டுகின்றனர்.

ஆனால், இது அனைவருக்கும் தேவையான ஒன்றல்ல. எளிதில் பணமாக்கப்பட வேண்டும் என்பதால், பொதுவாக லிக்விட் ஃபண்ட் அல்லது வங்கி சேவிங்ஸ் அக்கவுன்டில் இந்தப் பணம் சேமிக்கப்படுகிறது. இந்தச் சேமிப்புகளில் தரப்படும் வட்டி விகிதம் மிகவும் குறைவு. முதல்முறையாக தொழிலில் அல்லது வேலையில் காலடி எடுத்து வைக்கும் இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்புலமாக, அவசரத் தேவைக்கு உதவும் பெற்றோர் இருக்கலாம். அப்படியான வசதி உள்ளவர்கள் எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவதை விடுத்து அதிக ரிட்டர்ன் தரக்கூடிய பிற முதலீடுகளில் தங்கள் சேமிப்பைத் தொடங்குவது நல்லது.

கல்விக் கடன் (13.50%), கிரெடிட் கார்டு கடன் (35% – 38%) போன்ற அதிக வட்டிக் கடன் சுமை உள்ளோர் வெறும் 3% - 5% வருமானம் தரும் எமர்ஜென்சி ஃபண்டில் பணம் சேர்ப்பதை விட கடனைக் கட்டுவதற்கே முன்னுரிமை தர வேண்டும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் வைத் திருப்பவர்களுக்கும் எமர்ஜென்சி ஃபண்டின் தேவை சற்றுக் குறையும்.

நிதி மேலாண்மை வழிமுறைகள்...
உங்களுக்கு எவையெல்லாம் பொருந்தும்..?

டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு முதலீடு அல்ல; அடிப்படையான ஆயுள் காப்பீடு. மிகக் குறைவான பிரீமியத்தில் அதிக அளவு காப்பீடு தரக்கூடியது. பொது வாக, 35 – 45 வயதுகளில் மனைவி, குழந்தைகள் என்று குடும்பத் தலைவரைச் சார்ந்திருப்போரும் அதிகம்; குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற பொறுப்பு களும் அதிகம். குடும்பத் தலைவரின் உயிருக்கு ஆபத்து நேரும்பட்சத்தில், இவை அனைத்துமே ஆட்டம் காணும். ஆகவே, குடும்பத் தலைவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து, மனைவியை நாமினியாக நியமிப்பதென்பது ஒரு மிகச் சரியான திட்டம்.

வேலைக்குச் சேர்ந்த இருபது களிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து தன்னைச் சார்ந்திருக் கும் வயதான பெற்றோரை நாமினியாக நியமிப்பது இன்னும் சிறப்பு. தன் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியைப் பிள்ளை களின் கல்விக்காகச் செலவிடும் பெற்றோரின் கடைசிக் காலத்தில் நாம் இல்லாது போக நேரிட்டாலும், அவர்களுக்கு வசதிக் குறைவு ஏற்படாமல் இருக்க, இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவும். இளம் வயதிலேயே இதை எடுப்பதால், பிரீமியமும் குறைவாகவே இருக்கும். ஆகவே, நமக்குத் தேவை ஒன்றல்ல; இரண்டு டேர்ம் இன்ஷூரன்ஸ்கள் – இருவேறு நாமினிகளுடன்.

ஆனால், மாணவர்கள், வெளியில் வேலை செய்து சம்பாதிக்காதவர்கள், மணமாகாதவர்கள், மனைவியும் வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ளவர்கள், சொந்தக் காலில் நிற்கும் அளவு வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் பெற்றோர், பணி ஓய்வு பெற்றோர், தங்கள் கடைசிக் காலம் வரை வசதியாக வாழத் தேவையான பணத்தை சேமித்தவர்கள் ஆகியோருக்கு லைஃப் / டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையில்லை.

லிக்விட் ஃபண்ட்

தலைசிறந்த மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் வழங்கும் இந்த ஃபண்ட், வங்கி முதலீட்டைப் போலவே பாதுகாப்பானது; எளிதில் பணமாக்கக் கூடியது; வங்கி வட்டியைவிட அதிக வருமானம் தரும் வாய்ப்பு உடையது; இந்த டிஜிட்டல் டெக்னாலஜி யுகத்தில் மின்னல் வேகத்தில் செயல்படுத்த முடிவது. இதுபோன்ற காரணங்களால் வங்கி முதலீடுகளுக்கு மாற்றாக இன்று முன்னிறுத்தப்படுவது இந்த லிக்விட் ஃபண்டுகளே.

ஆனால், லிக்விட் ஃபண்ட் வருமானத்துக்கு உத்தர வாதம் இல்லை; சில சமயம், நாம் போட்ட முதல் குறையக்கூட செய்யலாம். அதிக வருமான வரம்பில் இருப்பவர்கள் தங்கள் வரம்புக்கேற்ற வரியை ஷார்ட் டேர்ம் லாபத்துக்கும் செலுத்த வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாதவர்களும், டெக்னாலஜியை உபயோகிக்க இயலாதோரும் இதில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாரம்பர்யம் மிக்க வங்கிச் சேவைகள் உள்ளன. இந்த வங்கிக் கிளைகள் நமக்கு மிகப் பெரிய சப்போர்ட் சிஸ்டத்தை வழங்குகின்றன. ஃபோமோ (FOMO - Fear Of Missing Out) போன்ற மனநிலைகளால் நமக்குப் பொருத்த மில்லாத முதலீடுகளில் ஈடுபடுவது தவறு.

பொதுக் கோட்பாடுகள்

அப்படியானால் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கோட்பாடுகள் ஏதுமில்லையா என்று கேட்டால், இதோ அவர்களுக்கான பதில்... உதாரணமாக, 1. வரவு செலவைத் திட்டமிடுதல், 2. வருமானத்தில் குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது சேமித்தல், 3. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தல், 4. நல்ல கடன்களை மட்டுமே வாங்குதல், 5. கிரெடிட் கார்டுகளைக் கவனமாகக் கையாளுதல், 6. வருமான வரியைச் சேமித்தல், 7. பொன்சி திட்டங்களில் பணத்தை இழக்காதிருத்தல், 8. முதலீடு களைப் பரவலாக்குதல், 9. வயதிற்கேற்ற முதலீடுகளில் ஈடுபடுதல்.

இது போன்ற பொதுக் கோட்பாடுகள் தவிர, மற்ற ஒவ்வொரு நிதி மேலாண்மை/முதலீட்டுக் கோட்பாட்டையும் அலசி ஆராய்ந்து நமது சூழ்நிலைக்கும், வயதுக்கும் பொருந்தக்கூடிய கோட் பாடுகளை மட்டும் மேற்கொள்வது அவசியம். ஏனெனில் ‘தனிநபர்’ நிதி மேலாண்மை என்பது உங்கள் வசதிக் கேற்றவாறு உங்களுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் கோட்பாடுகளே உங்களுக்கு நன்மை பயக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism