நடப்பு
Published:Updated:

இளம் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் தவறுகள்!

ஃபைனான்ஷியல் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் பிளானிங்

புதிதாகத் திருமணமானவர்கள் கவனத்துக்கு... - P E R S O N A L F I N A N C E

அண்மையில் திருமணம் செய்துகொண்ட திவ்யா வுக்கும், திருமுருகனுக்கும் இடையே சண்டை சச்சரவுகள் வருவது செலவு செய்கிற விஷயத்தில்தான். இருவருமே வேலைக்குச் செல்வதால், ‘நான்தானே சம்பாதிக்கிறேன்; என் இஷ்டம்போல செலவு செய்ய எனக்கு உரிமை யில்லையா?’ என்று திருமுருகன் கேட்பதும், ‘நானும்தானே சம்பாதிக் கிறேன்; என் இஷ்டத்துக்கு நான் செலவு செய்யக் கூடாதா?’ என திவ்யா கேட்பதும் இந்தச் சண்டை சச்சரவுக்கு அடிப்படை.

ஃபைனான்ஷியல் பிளானிங்
ஃபைனான்ஷியல் பிளானிங்

இவர்களைப் போலத்தான், புதிதாக மணமான பல தம்பதிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். நிதி சார்ந்த விஷயங் களில் அவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் சிலரிடம் பேசினோம்.

முதலில், பிரைம் இன்வெஸ்டர் டாட் இன் நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யாபாலா, “இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர் களுக்கு ‘நான்’ என்ற ஈகோ, அனைத்து விஷயங்களிலும் அதிகமாகவே இருக்கிறது. முக்கியமாக, பொருளா தார ரீதியான முடிவுகளை எடுப்பதில் அது நிறையவே வெளிப்படுகிறது. அதனால் முதலில் ‘நான்’ என்கிற ஈகோவை ஒழித்துக்கட்டி விட்டால், கணவன் - மனைவி செய்யும் எல்லா காரியங்களும் இருவரும் கலந்து பேசி செய்வதாகவே இருக்கும்” என்றவர், புதிதாக மணமான தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகளைப் பட்டியலிட்டார்.

வித்யாபாலா
வித்யாபாலா

தவறு 1: நிதி மேலாண்மையைக் குறை கூறுவது...

கணவர் செய்யும் செலவை மனைவியோ, மனைவி செய்யும் செலவைக் கணவனோ எதுவும் சொல்லக் கூடாது என்று இரு தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். இது முற்றிலும் தவறான போக்கு. கணவன், மனைவி ஆகிய இருவரும் வேறுவேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்திருப்பதால், பணத்தைப் பொறுத்தவரை, இருவருடைய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கண்டிப்பாக வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால் ஆரம்பத்தில் ஒரு சில தவறுகள் நிகழ்வதும், கருத்து வேறுபாடுகள் வருவதும் இயல்புதான். அதை ஒருவருக்கொருவர் எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டுமே தவிர, மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொள்ளக் கூடாது. மிக முக்கியமாக, பணம் சார்ந்த விஷயங்களில் அடிக்கடி துருவித் துருவி கேள்வி கேட்பது கூடவே கூடாது.

நிதி சார்ந்த புரிந்துகொள்ளல்களை வளர்த்துக்கொள்ள இருவருக்கும் இடையே ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியம். அப்போதுதான் ஒரே மாதிரியாக யோசித்து, நிதி சார்ந்த சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

இளம் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் தவறுகள்!

தவறு 2: சம்பளத்தை மறைப்பது...

திருமணமான புதிதில் சம்பளத்தின் அளவை மறைப்பதை, பெண்களை விட ஆண்கள் அதிகம் செய்கிறார்கள். இது குடும்பத்தில் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளும் என்பதைத் தாண்டி, இது மனைவிக்குக் கணவன் செய்யும் மிகப்பெரிய பொருளாதார துரோகமாகும். அலுவலகத்தில் இன்சன்ட்டிவ் தருவதை மறைப்பது, இன்க்ரீமென்ட் பற்றிய தகவல்களைச் சொல்லாமல் இருப்பது போன்ற பொய் நடவடிக்கைகள் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கும். இது காலப்போக்கில் நிதி சார்ந்த சிக்கலைத் துரிதமாக குடும்பத்துக்குள் உருவாக்கிவிடும்.

அதனால் உண்மையான சம்பளத் தைத் திருமணமான புதிதில் கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லிவிடுவது நல்லது. முடிந்தால் அலுவலக சம்பளப் படிவத்தை இருவரும் பரிமாறிக்கொள்ளலாம். வரவு - செலவு விஷயத்தில் கணவன் - மனைவி ஒருமித்த கருத்துடன் இருக்கும்போதுதான், அதைக் கொண்டு தெளிவான நிதித் திட்டத்தைத் தீட்ட முடியும்.

தவறு 3: பொருளாதார முடிவுகளை மறைப்பது...

இன்றைய நிலையில், கணவனோ, மனைவியோ அடுத்தவருக்குத் தெரியாமல், குடும்ப நலனைப் பாதிக்கக் கூடிய பெரிய பொருளாதார முடிவுகளை எளிதில் எடுத்துவிடுகிறார்கள். உதாரணத் துக்கு, தெரிந்தவர்கள் மற்றும் உறவினர் களுக்குக் கடன் கொடுப்பது. கணவரிடம் சொல்லாமல் மனைவியும், மனைவியுடம் சொல்லாமல் கணவனும் பெரிய தொகையை யாருக்கேனும் கடனாக வழங்குவது தவறான விஷயம். திருமணத்துக்கு முன்பிருந்த பழக்க வழக்கத்தால், கணவன் மனைவி இருவரும் கலந்தாலோசிக்காமல் கடனைக் தந்துவிடுகிறார்கள். இது குடும்பத்தில் பெரும் குழப்பதை உருவாக்கிவிடுகிறது.

தவறு 4: கடன் வாங்கி ஆடம்பரச் செலவு செய்வது...

தன் மனைவிக்கு விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுத்து, அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கணவனும், குடும்ப சகிதமாக வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு சென்று வர வேண்டும் என்று மனைவியும் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், இதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த தெளிவு இருவருக்கும் இருக்க வேண்டியது அவசியம். நமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு நம்மிடம் பணம் இருக்கிறது எனில், பிரச்னையே இல்லை. ஆனால், வேறு தேவைகளுக்காக வைத்திருக்கும் பணத்தை எடுத்து, ஆடம்பர ஆசைகளுக்காகச் செலவு செய்வது புத்திசாலித்தனமல்ல. உதாரணமாக, ஆடம்பரச் செலவுகளுக்கு அவசரகால நிதியைப் பயன்படுத்துவது ஏற்புடையதாக இருக்காது. ஆனால், இன்றைய இளம் தம்பதியர்கள் கடன் வாங்கியாவது வெளிநாடுகளுக்குப் போக நினைப்பது, பிற்காலத்தில் நிதி சார்ந்த நெருக்கடியை உருவாக்க வாய்ப்புண்டு.

தவறு 5: தெரியாமல் கடன் வாங்குவது...

குறைவாகச் சம்பாதிக்கும் கணவனோ மனைவியோ, அதை மறைக்க அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, ஆடம்பரச் செலவு செய்வது கூடாது. திடீர் ஆபரேஷ னுக்குக் கடன் வாங்கலாம். ஆனால், கடன் வாங்கி பர்த்டே பார்ட்டியைக் கொண்டாடத் தேவையில்லை.

ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தைத் தொலைத்து விட்டு, அதை மறைக்க ரகசியமாக ஒரு கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன் வாங்கி, மேலும் மேலும் கடனில் மூழ்குவது திருமணமான புதிதில் சில கணவன்மார்கள் செய்யும் தவறு. இந்த மாதிரியான பொருளாதார பழக்கவழக்கங்கள் திருமணத் துக்குப்பின் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தன் துணையிடம் பொய்களை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகாமல், உண்மையைச் சொல்லி, மேலும் மேலும் கடன் வலையில் சிக்காமல் இருப்பது நல்லது’’ என்றார் தெளிவாக.

இளம் தம்பதிகள் செய்யக் கூடாத தவறுகள் சிலவற்றைச் சொன்னார் ஃபார்ச்சூன் பிளானர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பி.பத்மநாபன்...

பி.பத்மநாபன்
பி.பத்மநாபன்

தவறு 6: பிரச்னைக்குரிய பொய்கள்!

“தம்பதிகளுக்குள் நிதி சார்ந்த விஷயங்களில் பொய் சொல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் திருமணமான புதிதில்தான் ஒருவருக்கொருவர் அதிகமாகப் பொய் சொல்கிறார்கள். உதாரணமாக, கணவன் அல்லது மனைவி தன் தாய், தந்தையருக்கு வாடிக்கையாகப் பணம் அனுப்பும் தொகைந்த் துணையிடம் சரியாகச் சொல்லாமல் இருப்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகிவிட்டது. அதேபோல, பெற்றோர் அல்லது பெற்றோர் வழி உறவினருக்கு வாடிக்கையாகவோ, அவசரக் காலத்திலோ உதவி செய்துவிட்டு அதைத் துணைவரிடமிருந்து மறைக்க முயலவும் செய்கிறார்கள். தனக்கு அதிகமாக சம்பளம் வருவதைக் கூறினால் கணவர்/மனைவி தாம்தூமென்று செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார் என்று நினைத்தும் பலரும் பொய் சொல்கிறார்கள்.

நிதி சார்ந்த விஷயத்தில் அளவுக்கு அதிகமான பிரச்னைகளைக் கொண்டு வருவது பொய்கள்தான். கணவன் - மனைவி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுதானே திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்படி இருக்க, நிதி சார்ந்த நடவடிக்கைகளில் பொய் சொல்வது எப்படிச் சரியாகும்?

தவறு 7: ஒருவரே முடிவெடுப்பது!

திருமணத்துக்கு முன்புவரை சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துப் பழகிய பெண்கள், திருமணமானதும் கணவனிடம் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இது தவறு. பெண்கள் தாமாக முன்வந்து சம்பளத்தைக் கொடுத்தாலும், இந்த நடவடிக்கையை ஒருபோதும் கணவன் ஊக்கப்படுத்தவே கூடாது. இதற்குப் பதிலாக சம்பாதிக்கும் பணத்தைத் தனித்தனி வங்கிக் கணக்குகளில் வைத்துக்கொள்ளாமல், ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் ஆரம்பித்து, தேவையான செலவுகளுக்கான பணத்தை அதிலிருந்து எடுக்கலாம். இதன்மூலம் வரவு - செலவுக் கணக்கை இருவருமே புரிந்துகொள்ள முடியும்.

தம்பதியர் இருவரும் பொருளாதார வேலைகளைப் பங்கு போட்டுச் செய்யும் போதுதான் நிதித் தவறுகள் குறையும். ஒருவர் பட்ஜெட் போட்டு செலவுகளைக் கட்டுப் படுத்தினால், மற்றவர் எப்படிச் சேமிக்கலாம், எங்கெங்கு முதலீடு செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்யலாம். இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், யாருக்கு எந்த வேலையில் அதிக ஈடுபாடும் திறமையும் உள்ளதோ, அவர் அந்த வேலையைச் செய்யலாம். ஆனால், முடிவுகள் அனைத்தும் சேர்ந்தே எடுக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யும்போது கருத்து வேறுபாடு வரவே செய்யும். அதற்குப் பயந்து, ரகசியமாகச் செயல்பட ஆரம்பித்தால், பிற்பாடு குடும்பத்தில் குழப்பம் உருவாகி வருத்தமே மிஞ்சும்.

தவறு 8: கடன் வாங்கி சர்ப்ரைஸ் கொடுப்பது...

ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பெரிய பொருளாதார முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தன் அண்ணனிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி நிலம் வாங்கலாம் எனச் சொன்னவர், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி, 10 லட்சம் ரூபாய் கடனில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக நினைத்ததைவிட அளவு அதிகமான நிலத்தை வாங்குவது சர்ப்ரைஸ் அல்ல, மிகப் பெரிய ஷாக். ஏனெனில், இந்தக் கடன் அவர்கள் வைத்திருக்கும் பல இலக்குகளை (பிள்ளைகள் படிப்பு, திருமணம் போன்றவை) நிலை குலையச் செய்துவிடும்.

தவறு 9: கடன் கமிட்மென்ட்...

திருமணம் ஆனதும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என இன்றைய தம்பதியினர் நினைக்கிறார்கள். ஆனால், திருமணமான ஓரிரு வருடங்களில் இந்த யோசனையை கையிலெடுப்பது சரியான விஷயம் அல்ல. ஏனெனில், வேலை மாற்றம் என்பது அடிக்கடி நடக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அப்படி இருக்க பல லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்வது சரியா என்று யோசிக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இன்றைக்குப் பல வீடுகள் குத்தகை முறையில் கிடைக்கின்றன. போகிற இடத்தில் தேவைக்கேற்ற மாதிரியான வீடுகளை பார்த்துக் கொள்வது நல்ல முடிவாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை சரியாக முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு, பிற்காலத்தில் செட்டில் ஆகிற ஊரில் வீடு வாங்குவது சரியான முடிவாக இருக்கும்.

தவறு 10: முதலீடு குறித்து ஒரே கருத்துடன் இருப்பது...

“பணத்தைப் பெருக்கு வதற்கு சரியான முதலீடு எது என்பது குறித்த புரிந்துகொள்ளல் கணவன் - மனையிடம் வேறுவேறு மாதிரியாக இருக்கக் கூடாது. உதாரணமாக, அத்தனை பணத்தை செலவழித்து, தங்கம் வாங்க வேண்டும் என மனைவியும், பங்குச் சந்தை யில்தான் அத்தனை பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும் எனக் கணவனும் வாதிட ஆரம்பித்தால், எதுவுமே நடக்காமல் போய்விட வாய்ப்புண்டு. எதிர்காலத் தேவையை நிறை வேற்றுகிற மாதிரி ஒவ்வொரு முதலீட்டிலும் எவ்வளவு தொகை யைப் போட வேண்டும் என்று கலந்தாலோசித்து அதன்படி நடப்பதே குடும்பத்தின் நிம்மதிக்கும் நிறைவான பொருளா தாரத்துக்கும் வழிவகுக்கும்’’ என்று முடித்தார் பத்மநாபன்.

புதிதாகத் திருமணமான தம்பதிகள் இந்த 10 தவறுகளையும் தவிர்த்து செயல்படலாமே!