Published:Updated:

“நான் செய்த நிதித் தவற்றை நீங்களும் செய்யாதீங்க..!” எச்சரிக்கும் வாசகர்கள்...

I N T E R A C T I O N

பிரீமியம் ஸ்டோரி

தெரியாத்தனமா அந்த வீடு வாங்கினதால, பல லட்சம் ரூபா நஷ்டம்; அந்த கம்பெனியில சீட்டு சேர்ந்ததுல ஏகப்பட்ட நஷ்டம் என்று நாம் நினைத்து, நினைத்து கவலைப் படும் அளவுக்கு பல செலவுகளையும் முதலீடுகளையும் செய்திருப்போம். அப்படிச் செய்துவிட்டு வருந்தும் நிதித் தவறுகளைச் சொல்லுங்கள்; நீங்கள் செய்த தவறு மற்றவர்கள் செய்யாமல் இருக்க உதவும் இல்லையா?” என நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் டிவிட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர் களும் தாங்கள் செய்த நிதித் தவறு களை மறைக்காமலும் அதிலிருந்து கற்ற பாடங்களையும் பகிர்ந்திருந் தார்கள்.

“கமாடிட்டி மார்க்கெட்டில் வெள்ளி, தங்கம் காப்பர் என்று வாங்கி விற்று பணம் கட்ட முடியாமல் அனைத்தையும் இழந்து, தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்று இடத்தை விற்று அதில் போட்டு, மீண்டும் நஷ்டம் அடைந்தது நான் செய்த பெரிய நிதித் தவறு” என்று சொல்லியிருக்கிறார் ரவிசந்திரன். கமாடிட்டிச் சந்தையில் இறங்கிக் கலக்கிடலாம் என அசட்டுத் தெம்பில் இருப்பவர்கள் ரவியின் கமென்ட்டை மனசுல வச்சுக்குங்க!

“நான் செய்த நிதித் தவற்றை நீங்களும் செய்யாதீங்க..!” எச்சரிக்கும் வாசகர்கள்...

“பெரும்பாலான நிதி இழப்புகள் நம்பிக்கைத் துரோகத்தால் வரும். நண்பன், உறவினர் என நம்பி கடன் கொடுத்தது, முறையான பதிவு கையெழுத்து இல்லாமல் ஏமாறுவது குடும்பத்துக்கு உள்ளேயே நடக்கும். வாழ்க்கையைத் தொலைத்து, குடும்பத்துக்காக மாடாய் உழைத்த பலரும் இறுதியில் ஒன்றும் இல்லாமல் போவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். குடும்பத்தினரே முதுகில் குத்தியிருப்பார்கள். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதானே!”னு சொல்லி இருக்காரு சிவ ஆனந்தன். வாழ்க்கை தத்துவம் சார்!

“நான் லட்சம் கணக்குல ஏமாறல.ஒரு புடவையை கடைல 2,000 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன். ஆன்லைன்ல அதே புடவை 500 ரூபாய்னு போட்டிருந்தாங்க. ஆசை யாரை விட்டுச்சு? நம்பி 500 ரூபாய் அனுப்பி ஆர்டர் போட்டேன்.பார்சல் வந்ததும் பிரிச்சி பார்த்தா, வெறும் ஜாக்கெட் பிட்தான் வந்திருந்துச்சு. நான் வாங்குன காஸ்ட்லியான ஜாக்கெட் பிட் அதுதான். அப்புறம் என்னா பண்றது சைலன்டா இருந்துட்டேன்”னு தன்னோட அனுபவத்தைப் பகிர்ந்துருக்காங்க வாணி. ஆத்தி..!

“பொய்யான விளம்பரங்களை நம்பி தவணை முறையில் வீட்டு மனைத் திட்டத்தில் சேர்ந்தது, நண்பர்களை சேர்த்துவிட்டது நான் செய்த நிதித் தவறு”னு சொல்லி இருக்கிறார் ஹனீபா. நீங்க செஞ்ச அதே தப்பை பலரும் செஞ்சிருக்காங்க அப்பு.

“கிரெடிட் கார்டு வாங்குனதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. இனி கிரெடிட் கார்டு வேண்டவே வேண்டாம்”னு சொல்லிருக்காரு ஶ்ரீதரன். பாவம் சார் நீங்க!

“ஒரு லட்சம் செலவு செய்து சைக்கிள் வாங்கியதுதான் நான் செய்த நிதித் தவறு” என்று தன் காஸ்ட்லியான தவற்றைச் சொல்லி இருக்கிறார் ஜெகதீஸ்வரன். ரைட்டு!

“ஷேர் மார்க்கெட் பத்தி புரிஞ்சிக்காம இருந்தது நான் செய்த தவறு. 6, 7 வருஷத்தை வீணாக் கிட்டேன்”னு சொல்லி வருத்தப்பட்டு இருக்காரு தங்கவேல். நாணயம் விகடன் படிங்க. அப்படியே மத்தவங் களுக்கும் அறிமுகப்படுத்துங்க சார்!

“பங்குச் சந்தையில் இருந்துகொண்டு பங்குகளை வாங்காமல் வேடிக்கை பார்ப்பது நான் செய்யும் பெரிய நிதித் தவறு”னு சொல்லிருக்காரு குமரேசன். கரெக்ட்டு ப்ரோ, பருவத்தே பயிர் செய்யணும்!

“E commerce-னு சொல்லி MLM-ல் ஏமாந்தவன் நான்! எல்லா மீட்டிங்கும் டாக்குமென்டும் e-commerce பத்திதான் இருந்தது. கையெழுத்துப் போட்டு பணத்தைக் கட்டியவுடன்தான் தெரிந்தது அது MLM டாக்குமென்டுனு”என்று தன் சோக அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார் காசி. பீ கேர் ஃபுல் மக்கா..!

“என் வாழ்க்கையில் வேலையில் சேர்ந்தவுடன் நாணயம் விகடனைப் படிக்காமல் விட்டதுதான் என்னுடைய முதல் தவறு, ஏனென்றால் என்னுடைய அப்பா, அம்மா மற்றும் மற்ற சொந்தக் காரர்கள் சேமிப்பு மற்றும் முதலீடு பற்றி எனக்கு கற்றுத் தரவில்லை. எதில் முதலீடு செய்ய வேண்டும், எப்படிச் சேமிக்க வேண்டும் என்று அவர்களும் தெரிந்து கொள்ளவில்லை. நான் வேலையில் சேர்ந்த 10 வருடங்களாக முதலீடு என்று நம்பி இன்ஷூரன்ஸில் போட்டு வந்தேன்!”னு சொல்லிருக்காரு ஶ்ரீதர் சாரதி. பாஸ், இனி நீங்க உங்க புள்ளை களுக்கு சொல்லிக் கொடுங்க!

“தயவு செய்து தனியார் நிதி நிறுவனங் களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யாதீர்கள்”னு எச்சரிக்கிறாரு தம்பிராஜ்! உஷார் மக்களே!

“ஆப்ஷன் டிரேட் செய்து ரூ.40 லட்சம் வரை இழந்ததுட்டேன். ஆப்ஷன்ல பொசிஷன் எடுத்ததே என்னோட மொத தவறு. 25 வயசுல கத்துக்க வாய்பில்லாத காலகட்டம். இப்பதான் ஆப்ஷன்னா என்னானு புரிஞ்சிது. இப்ப அதை சூதானமா பண்றேன். இப்ப ரிஸ்க் எடுக்கிற அளவுக்கு ஆப்ஷன் டிரேட் பண்றது இல்ல’’ என்று தன்னோட அனுபவத்தைப் பகிர்ந்திருக்காரு சுரேஷ்!

“வருஷத்துக்கு ஒரு லட்சம் கட்டி இன்ஜினீயரிங் படிச்சது என் வாழ்க்கைல பண்ணுண பெரிய தவறு. ரூ.8,000 சம்பளம் எதுக்கும் பத்தல. சென்னையில் இருந்து ஊருக்கு போய்ட்டு திரும்பி வரும்போது அப்பாகிட்ட காசு கேட்டா, ‘நீ படிச்சதுக்கு 4 மாடு வாங்கி வளர்த்திருக்கலாம்’னு வீட்டுத் திண்ணையில் இருக்குற கிழவிக கிண்டல் பண்ணும். வேலை, வாடகை, வாட்டர் கேன், வண்டி பெட்ரோல், சாப்பாடுன்னு சென்னைல வாழ்க்கை ரொம்ப கேவலமா ஓடுச்சு. காசு சேர்க்காத, கல்யாணம் ஆகாத பொறியாளர். ஒரு கட்டத்தில் கடுப்பாகி ஊருக்கு போய்ட்டேன். இப்ப ரெண்டு மாடு , 4 ஆடு , 10 கோழிக்குஞ்சுனு வண்டி ஓடுது. நாலு வருஷம் வயசு போய் 4 லட்சம் காசும் போயிடுச்சேனு ஃபீல் ஆகுது” என்று குமுறியிருக்கிறார் குமார்.

“என் வருமானத்துக்கு மீறி கடன் வாங்கிட்டேன். அதுதான் நான் செஞ்ச பெரிய தவறு” என்று சொல்லிருக்காரு வினோபா.

“முதல் வேலைக்குப் பிறகு, வங்கியில் அவர்களாகவே கொடுக்கிறார்கள் என்பதற்காக எல்லா கிரெடிட் கார்டையும் வாங்கிக் குவித்து, கடைசியில் கட்ட முடியாமல் திணறியது.சேமிப்புப் பற்றி தொலைநோக்குப் பார்வை இல்லாமல் போனது நான் செஞ்ச தப்பு”னு சொல்லிருக் கிறார் சங்கர். இந்தத் தப்பைத் தானே எல்லாரும் செய்றாங்க..!

“லோன் எடுத்து கார் வாங்கியது தான் நான் செஞ்ச பெரிய தப்பு” என்று கமென்ட் பண்ணிருக்கிறார் கரிகாலன்.

“சேமிக்கத் தெரியாது. இதுவரை சேமிப்பு என்று 1 ரூபாய் இல்லை. இதுதான் நான் செய்யும் தவறு”னு சொல்லிருக்காரு புருஷோத். வருமானத்துல கொறைஞ்சது 10% சேமிக்க ஆரம்பிங்க பாஸ்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு