Published:Updated:

கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்!

ஃபைனான்ஷியல் டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் டிப்ஸ்...

பின்பற்ற வேண்டிய ஃபைனான்ஷியல் டிப்ஸ் - C O V E R S T O R Y

கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்!

பின்பற்ற வேண்டிய ஃபைனான்ஷியல் டிப்ஸ் - C O V E R S T O R Y

Published:Updated:
ஃபைனான்ஷியல் டிப்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் டிப்ஸ்...

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளைக் கடந்து, தற்போது மூன்றாவது அலை வந்துவிடுமோ, எப்போது வருமோ என்ற பயத்தில் இருக்கிறோம் நாம். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்ததுபோல அல்லாமல், இரண்டாவது அலைக்கும் மூன்றாவது அலைக்கும் சிறு இடைவெளிதான் இருக்க வாய்ப்புள்ளது என்றும், வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலை நம்மைத் தாக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.

2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த் தொற்று ஆரம்பமானதும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுணங்கத் தொடங்கியது. நாடு முழுக்க வரலாறு காணாத வேலை யிழப்பு ஏற்பட்டது. பல துறைகளின் ஊழியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டது. சிறுதொழில் செய்பவர்கள் ஊரடங்கின் காரணமாக முடங்கிப்போனார்கள். நமது பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னோக்கிப் போனது.

இத்தனை பிரச்னைகளையும் நம்மவர்கள் பெரிய சிக்கல் இல்லாமல் சந்தித்ததுக்குக் காரணம், கொரோனாவின் முதல் அலைக்கு முந்தைய காலத்தில் ஏற்கெனவே செய்து வைத்திருந்த சேமிப்புதான். கையில் கொஞ்சம் பணம் இருந்ததால், முதல் அலையை எப்படியோ சமாளித்து, கடந்தார்கள். இனி வராது கொரோனா என அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவந்த வேளையில், கொரோனா இரண்டாம் அலை உருவாகி, மீண்டும் ஊரடங்கு வந்ததால், பலரும் என்ன செய்து சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துப்போனார்கள். கையில் மிச்சம் மீதி இருந்த பணத்தையும் செலவு செய்தும், கடன் வாங்கியும் நிலைமையைச் சமாளித்தார்கள். நல்லவேளையாக, கொரோனா இரண்டாம் அலை பல மாதங்களுக்கு நீடிக்காமல் கொஞ்சம் சீக்கிரமாகவே முடிவுக்கு வந்துவிட்டது.

கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்!

ஆனால், இப்போது மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற பேச்சு எழுந்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்குமோ என்கிற பயம் எழுந்துள்ளது. இந்த பயத்துடன், இந்த மூன்றாம் அலை ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகளை எப்படிக் கடந்துவரப் போகிறோம், அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் தவிப்பவர்கள் பலர். மூன்றாம் அலை என ஒன்று வந்தால், பொருளாதார ரீதியில் அதை எதிர்கொள்ள நாம் எப்படித் தயாராக வேண்டும் என சில நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். அவர்கள் நமக்கு விரிவான வழிக்காட்டலைத் தந்தார்கள்.

 டி.முத்துகிருஷ்ணன்
டி.முத்துகிருஷ்ணன்

முதலில் வைஸ் வெல்த் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிதி ஆலோசகர் டி.முத்துகிருஷ்ணனிடம் பேசினோம்.

“கொரோனாவின் மூன்றாவது அலை வருமா, வராதா என்பது யாருக்கும் தெரியாது. தற்போது வெளியாகும் செய்திகள் அனைத்தும் கணிப்புகள்தான். ஆனால், அது வந்தால், நிதிரீதியான விஷயங்களைச் சமாளிப்பது எப்படி என்கிற திட்டமிடலுடன் இருப்பது அவசியம்.

வருமானத்தை உருவாக்குங்கள்...

கொரோனாவுக்குமுன்பாக, ஒருவர் நிதி ஆலோசனை கேட்டுவரும்போது, நிதிப் பற்றாக்குறையைப் போக்க இரண்டாவது வருமானத்தை உருவாக்குவது எப்படி, உருவாக்கி அதிகரிப்பது எப்படி என்கிற யோசனைகளைச் சொல்வோம். ஆனால், இன்று முதல் வருமானத்துக்கே வழியில்லாமல் நடுத்தர வர்கத்தினர் திண்டாடு கிறார்கள். அதே சமயம், வேலையில்லாததால் வருமானம் இல்லை என்று சொல்லி வீட்டில் சும்மா உட்காராமல், தற்காலிக மாக வியாபாரத்தில் குதித்து நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கும் பலரையும் பார்க்கலாம். வீட்டில் இல்லத்தரசியாக மட்டுமே இதுவரை இருந்தவர்கள், குடும்பத்தின் நிதித் தேவைக்காக, வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். இதற்கு ஆன்லைன், ஆஃப் லைன் வழிமுறைகள் பெரிதும் உதவியாக உள்ளன.

எனவே, வேலை இழந்தவர்கள், தொழிலில் நஷ்டத் தைச் சந்தித்தவர்கள் வீட்டுக்குள் முடங்கி விடாமல், மாதம் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு தற்காலிகமான வேலைகளைச் செய்ய ஆரம்பியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானம், தற்போதைய நிதிச் சிக்கல்களில் இருந்து கொஞ்சம் காப்பாற்றும்.

கடன் வாங்கி சமாளியுங்கள்...

கொரோனா ஏற்படுத்திய நிதி நெருக்கடியின் காரணமாக, அவசரகால நிதிச் சேமிப்பையும் எடுத்துச் செலவு செய்து விட்டோம் என்பவர்கள், அடுத்த கட்டமாக வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்து, அதைக் கொண்டு இனி வரும் காலத்தில் அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்கலாம். வீட்டுக் கடன் டாப்அப் லோன் களையும் அத்தியாவசியமான செலவுகளுக்காக பரிசீலிக்கலாம். ஏனெனில், இந்த இரண்டு கடன் களுக்குமான வட்டி விகிதம் மிகக் குறைவு. இதர கட்டணங் களும் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

அதே சமயம், அவசரகால நிதி என்பது, ஒரு இயந்திரத்தில் இருக்கும் ரயில் இன்ஜின் போன்றது. இன்ஜின் இல்லாமல் ரயில் எப்படி நகராதோ, அது மாதிரி, அவசகால நிதி சேமிப்பு இல்லாமல் ஒரு குடும்பம் இயங்காது. ஆகையால், தற்போ திருக்கும் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, சிறுகச் சிறுக அவசரகால நிதிச் சேமிப்பை மீண்டும் ஏற்படுத்துங்கள். ஒவ்வொருவரும் 6 - 12 மாத செலவுகளுக்கான தொகையை அவசரகால சேமிப்பில் சேர்த்து வைக்க வேண்டியது கட்டாயம். அதாவது, ஒரு குடும்பத்துக்கான மாதச் செலவு ரூ.10,000 எனில், குறைந்தது ரூ.60,000 - ரூ.1,20,000 வரை தனியாக ஒரு வங்கிக் கணக்கிலோ, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளிலோ போட்டு வைக்கவும். இவ்வளவு பெரிய தொகையை உடனே சேர்க்க முடியாது என்கிறவர்கள், மூன்று மாதத்துக்கான தொகையையாவது சேர்ப்பது அவசியம்” என்றார்.

சி.பாலாஜி பாபு
சி.பாலாஜி பாபு

மருத்துவச் செலவைத் தவிர்க்க இன்ஷூரன்ஸ் பாலிசி...

இன்ஷூரன்ஸ் சார்ந்த விஷயங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, நான்கு பேர் இருக்கக்கூடிய குடும்பம் எவ்வளவு லட்சம் ரூபாய்க்கு மெடிக்கல் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.பாலாஜி பாபுவிடம் கேட்டோம்.

“கொரோனா நோய்த் தொற்று நமக்குப் பல தீமைகளைத் தந்திருந்தாலும், இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்தி இருப்பது நல்ல விஷயம். கொரோனாவுக்குப் பின்பு, இன்று மக்களே மெடிக்கல் பாலிசிகளைக் கேட்டு வாங்குகிறார்கள்.

கொரோனாவின் மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. அதனால் இதுவரை மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இல்லாதவர்களும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், குழந்தை களுக்கான மருத்துவச் செலவுகள், பெரியவர்களுக்காகும் மருத்துவச் செலவுகளைவிட அதிகம். ஏற்கெனவே கொரோனாவால் மருத்துவச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில், குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகளும் முன்பு இருந்ததைவிட அதிகமாகத்தான் இருக்கும். அதனால், குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் நடுத்தர வருமானப் பிரிவினர் ரூ.10 லட்சத்துக்குக் குறையாமல் மெடிக்ளெய்ம் பாலிசியை வைத்திருப்பது அவசியம். உயர்தர வருமான பிரிவினர் ரூ.25 லட்சத்துக்கும் குறையாமல் மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருக்க வேண்டும்’’ என்றார் அவர். முன்பு மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்காதவர்கள் தற்போது அதிகம் பிரிமீயம் கட்டி, மெடிக்ளெய்ம் பாலிசியை எடுக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு மெடிக்ளெய்ம் பாலிசி நிராகரிக்கப் படும் நிலையும் உருவாகியிருக்கிறது. எனவே, மூன்றாவது அலை வருகிறதோ இல்லையோ, இப்போதே மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துவிடுவது நல்லது” என்றார்.

வித்யா பாலா
வித்யா பாலா

கடன் மற்றும் முதலீட்டுக்கான வழிமுறைகள்...

வீட்டுக் கடன் உட்பட ஏற்கெனவே வாங்கிய கடன்களைத் தடைப் படாமல் திரும்பக் கட்டுவதற்கான திட்டங்கள், ஏற்கெனவே செய்திருக் கும் முதலீடு தடைப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார் நிதி ஆலோசகரும் ப்ரைம்இன்வெஸ்டர் நிறுவனத்தின் இணை நிறுவனருமான வித்யா பாலா.

வாடகைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி...

நிதி நெருக்கடியான இன்றைய சூழலில், மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வாடகைப் பிரச்னைதான் பெரும் பிரச்னை. சம்பாதிப்பதில் அதிகபட்சம் 30% தொகையை அவர்கள் வாடகையாக தருகிறார்கள். இதுவே அவர்களின் செலவுச் சுமையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

அதனால், அவர்கள் கையிலிருக்கும் சேமிப்பு, தங்க நகைகள் போன்ற வற்றைப் பயன்படுத்தி கிடைக்கும் பணத்தைக் கொண்டு, லீசுக்கு வீடு எடுப்பது நல்லது. இதனால் மிச்சமாகும் பணத்தைச் சேர்த்து, சொந்த வீடு என்ற கனவை நனவாக்கிக்கொள்ள திட்டம் போடலாம்.

கடன்களை அதிகப்படுத்த வேண்டாம்!

முதல் மற்றும் இரண்டாவது அலை ஏற்படுத்திய நிதி பாதிப்பு களைச் சமாளிக்க பலரும் கடன் வாங்கியிருக்கிறார்கள். மூன்றாவது அலையிலும் புதிதாகக் கடன் வாங்கி சுமைகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஆனால், கட்டாயமாகக் கடன் வாங்கித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும் எனில், வேலை செய்யும் அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதுவும் மருத்துவச் செலவுகளுக்காக மட்டும்தான்.

எளிதாகக் கடன் கிடைக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டு கடன், அதிக வட்டிக்கு தனிநபர்களிடம் கடன் வாங்காமல், வீட்டில் இருக்கும் தங்க நகையை வங்கியில் அடமானம் வைத்து, குறைந்த வட்டியில் கடன் வாங்க முயலுங்கள்.

முதலீடுகளைப் பயன்படுத்தலாம்...

அவசரகால நிதியும் இல்லை, சேமிப்புகளும் கரைந்துவிட்டது, கடன்களும் போதுமான அளவு வாங்கிவிட்டேன் என்பவர்கள், எதிர்கால இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக ஃபிக்ஸட் டெபா சிட்டில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை விற்றும் நிலைமையைச் சமாளிக்கலாம். நீங்கள் எதிர்கால இலக்குக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துப் பயன்படுத்தச் சொல்கிறாரே... என யோசிக்கலாம். நிகழ்காலத் தேவை களுக்கே பணம் இல்லாதபோது, எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்பில் கைவைப்பது தவறில்லை. தவிர, கடன் வாங்கி திரும்பக் கட்டுவதால், நமக்கு இழப்புதான் அதிகமாகும்.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ள தொகையை முடிந்தவரை முழுவது மாக எடுத்து பயன்படுத்தாமல், தேவைக்கு மட்டுமே எடுத்து பயன் படுத்துவது நல்லது. முதலீட்டு ஆவணங்களை அடமானம் வைத்துக் கடன் பெற முடிந்தால், அந்த வழியை யும் தாராளமாகப் பரிசீலிக்கலாம்.

முதலீடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்!

ஏற்கெனவே முதலீடுகளை மேற்கொண்டிருப்பவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அதைத் தொடர முடியாமல் போனால், தற்காலிகமாக அதை நிறுத்தி வைப்பதில் தவறில்லை. உதாரணமாக, ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவந்தால், அவற்றில் ஓரிரு ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய் வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். அந்த தொகையைக் கடனை அடைப்பதற்காகவோ, அத்தியாவசியத் தேவைகளுக்கான செலவுகளுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், குடும்ப வருமானம் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, ஏற்கெனவே செய்து வந்த முதலீடுகளை மீண்டும் தொடர்வது நல்லது. முடிந்தால், கூடுதலாக முதலீடுகளையும் மேற்கொள்ளலாம். இதன் காரணமாக முதலீட்டு இலக்குகள் தள்ளிப்போகாமல், எதிர்பார்த்த நேரத்திலேயே வருமானத்தை ஈட்ட முடியும்” என்றார் தெளிவாக.

கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்கும் வழிகளைச் சொல்லி விட்டோம். தயாராக நீங்கள் ரெடியா?

பி.எஃப் பணம்... இறுதி அஸ்திரம்!

கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட, ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின்கீழ், மூன்று மாத அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75%, இதில் எது குறைவோ, அதை முன்பணமாகத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளும் வசதியை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இதைப் பயன்படுத்தாதவர்கள், கொரோனா மூன்றாவது அலை பாதிப்புகளின்போது எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், பி.எஃப் சேமிப்பிலிருந்து எடுக்கப்படும் பணத்தை, கொரோனா காலத்தில் ஏற்பட்ட கஷ்டத்தைச் சமாளிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால், பி.எஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தாலும், எடுத்த பணத்துக்கு இணையான பணத்தை வி.பி.எஃப் மூலமாக ஒரு சில ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்திவிடுவது நல்லது. அப்போதுதான் அது ஓய்வுக்காலத்துக்கு உதவியாக இருக்கும். பி.எஃப்-லிருந்து பணம் எடுக்கும் யோசனையை இறுதி அஸ்திரமாக மட்டுமே பயன்படுத்தவும்.

அதிக விலையுள்ள ‘ஆன்டிக்’ பொருள்கள்!

”நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் தொன்மையான ‘ஆன்டிக் பொருள்கள்’ ஏதாவது இருக்கும். அதாவது, பாட்டி, தாத்தா காலத்து ரேடியோ, தஞ்சாவூர் ஓவியங்கள், 100 ஆண்டுகளுக்குப் பழைமையான நாணயங்கள், தேக்கு மரக்கட்டில், தேக்கு மரத்தாலான பீரோ என இப்படி ஏதாவது இருந்தால், அதை விற்பனை செய்வதன் மூலம் குறிப்பிட்ட தொகையை நம்மால் பெற முடியும். ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பது போல, பழைய கால பொருள்களில் இருக்கும் தரம் மற்றும் தனித்துவமான டிசைன் காரணமாக மார்க்கெட்டில் அதற்கு என்றைக்கும் மவுசு இருக்கிறது. அதற்கான விலையும் அதிகம். அதேபோல, பொழுது போக்குக்காக செய்து வந்த தபால் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றை விற்று காசாக்குவதன் மூலமும் இந்தப் பேரிடர் காலத்தில் உருவாகும் நிதிச்சிக்கலை சமாளிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism