Published:Updated:

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்... உண்மையை உணர்த்தும் 5 காரணிகள்!

ஃபைனான்ஷியல் ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் ஹெல்த்

ஃபைனான்ஷியல் ஹெல்த்

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்... உண்மையை உணர்த்தும் 5 காரணிகள்!

ஃபைனான்ஷியல் ஹெல்த்

Published:Updated:
ஃபைனான்ஷியல் ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
ஃபைனான்ஷியல் ஹெல்த்

ஒருவர் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான முதல்படி, இப்போது அவரின் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதாகும்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள், 75% இந்தியர்கள் தங்களின் தனிப்பட்ட நிதிநிலை குறித்துத் தெளிவான மற்றும் துல்லியமான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. மிக முக்கியமாக 50% பேர்களிடம் தாங்கள் நிதி இலக்குகளை அடைவோம் என்கிற நம்பிக்கை இல்லை. இதற்குக் காரணம், அவர்கள் சரியாக நிதித் திட்டமிடல் மேற்கொள்ளாததுதான். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களை ஒருவர் மேற்கொள்ளும்பட்சத்தில் அவரின் தனிப்பட்ட நிதிநிலையை (Personal Finance) ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

சதீஷ்குமார் 
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், http://sathishspeaks.com/
சதீஷ்குமார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், http://sathishspeaks.com/

1. உங்கள் சம்பளம் / வருமானத்தில் குறைந்தபட்சம் 10% சேமிக்கிறீர்களா?

‘உங்கள் சம்பளத்தில் முதலில் உங்களுக்கு கொடுத்துக்கொள்ளுங்கள்’ (Pay Yourself First) என்கிற பழமொழி மிகவும் பிரபலமான ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரர்’ என்கிற நூலில் குறிப்பிடப்படும் முக்கிய விஷயமாகும்.

சம்பளம் வந்ததும் அல்லது வருமானம் வந்ததும் வீட்டு வாடகை, மளிகைக்கடைகளுக்கு கொடுக்க வேண்டியவை மற்றும் செலவுகளுக்கு முன் உங்களுக்கென அதிலிருந்து ஒரு பகுதியை சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் ‘பே யுவர்செல்ஃப் ஃபர்ஸ்ட்’ என்பதன் அர்த்தமாகும்.

அந்தப் பழங்கால நூலில், உங்கள் வருமானம்/ சம்பளத்தில் குறைந்தது 10% உங்களுக்கு என எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறது. அந்தத் தொகையை வட்டிக்கு விடுவது மூலம் அது பல மடங்காகப் பெருகும் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தத் தொகையை உங்களின் ஓய்வுக்காலச் செலவுகள் மற்றும் நிதி இலக்குகளை நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

அந்தக் காலத்தில் விலைவாசி உயர்வு என்பது பெரிதாக இல்லை; மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை. எனவே, சம்பளத்தில் 10% எதிர்காலத்துக்காகச் சேமிப்பது போதாது. குறைந்தது 30 சதவிகிதமாவது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்குவது நல்லது.

2. கடன்களை அடைப்பதில் வேகமாக இருக்கிறீர்களா?

முதலில், இன்றைய தேதியில் உங்களுக்கு இருக்கும் மொத்தக் கடன்கள் (கிரெடிட் கார்டு நிலுவை தொடங்கி வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் வணிகக் கடன், முதலியன) எவ்வளவு என்பதைக் கணக்கீடுகள் மற்றும் அவற்றுக்கு நீங்கள் கட்டும் உண்மையான வட்டி விகிதம் என்ன என்பதைக் கவனியுங்கள். இங்கே உண்மையான வட்டி விகிதம் என்பது கடனைத் திரும்பச் செலுத்தும்போது உங்களுக்குக் கிடைக்கும் வருமான வரிச் சலுகைகளை (உதாரணம், வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டி, கல்விக் கடன் வட்டி) கழித்தது போக கட்டும் வட்டியாகும்.

சில நேரங்களில் கல்விக் கடன், கார் கடன் அல்லது வீட்டுக் கடன் போன்றவற்றை வாங்குவது அவசியமாக இருக்கும். ஆனால், அந்தக் கடன்களைத் திரும்ப அடைப்பதில் எப்போதும் வேகமாக இருங்கள்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) அல்லது ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) முறையில் முதலீடு செய்யும்போது செல்வம் சேரும். தொடர்ந்து பல ஆண்டு களாகக் கடனுக்கு இ.எம்.ஐ முறையில் மாதத் தவணை (இ.எம்.ஐ) கட்டிவந்தால், உங்களுக்கு செல்வம் சேராது. இந்த இடத்தில் கூட்டு வளர்ச்சி (Power of compounding) என்கிற அதிசயம் உங்களுக்கு எதிராக வேலை செய்யும். கடன்களை விரைந்து கட்டி முடிக்கும்போது உங்களின் வட்டிச்சுமை குறைந்துவிடும்.

செல்வம் சேர்க்க வேண்டும் எனில், அதிக வட்டியுள்ள கடன்களை விரைந்து கட்டி முடியுங்கள். வரிச் சலுகை கிடைக்கும் கடன்களைச் சரியாகக் கணக்கிட்டு செலுத்தி வாருங்கள். வரிச் சலுகை தேவையில்லை என்கிறபோது அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும்; எனவே, கல்விக் கடனை விரைந்து முடித்துவிடுவது நல்லது.

அதே நேரத்தில், சுமார் 7% வட்டியில் திரும்பக் கட்டும் அசல் மற்றும் வட்டிக்கு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் (80சி பிரிவு அசல் ரூ.1.5 லட்சம், 24 பிரிவு வட்டி ரூ.2 லட்சம்) வரிச் சலுகை அளிக்கும் வீட்டுக் கடனை நிதானமாகக் கட்டி வரலாம். இது சொந்தமாகக் குடியிருக்க வாங்கப்பட்ட வீட்டுக்குத்தான். வாடகைக்கு விடுவதற்காக வாங்கப்படும் இரண்டாவது, மூன்றாவது வீடுகளுக்கு இது லாபகரமாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. காரணம், வீட்டு வாடகை வருமானம் என்பது பொதுவாக, சொத்தின் மதிப்பில் சுமார் 2 - 3 சதவிகித மாகத்தான் இருக்கிறது. இதற்கு பதில், அந்த இ.எம்.ஐ தொகையை டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால் நீண்ட காலத்தில் நல்ல செல்வம் சேர்க்க முடியும்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்... உண்மையை உணர்த்தும் 5 காரணிகள்!

3. செலவைப் பதிவு செய்கிறீர்களா?

உங்கள் செலவுகளுக்கான கணக்கை ஒருநாள் விடாமல் பதிவு செய்து வருகிறீர்களா, அதற்கான பதிவு உங்களிடம் உள்ளதா, உங்களின் எல்லாச் செலவுகளையும் பதிவு செய்வது எப்போதுமே முக்கியம். இந்தச் செலவுப் பதிவு என்பது உங்கள் நிதி வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இன்னும் 20 வருடங்கள் கழித்து நீங்கள் எங்கு இருப்பீர்கள் என்பது, எப்போதும் உங்கள் வருமானத்தின் அளவைப் பொறுத்ததல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வருமானம் / சம்பளத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதை சார்ந்துதான் உங்களின் எதிர்கால வாழ்க்கை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செலவுகளைப் பதிவு செய்யும் போதுதான், தேவையில்லாத செலவுகளைக் குறைத்து அல்லது தவிர்த்து சேமிப்பை அதிகரித்து முதலீட்டைக் கூட்ட முடியும். முதலீட்டைக் கூட்டும்போது தான் உங்களின் வாழ்க்கை வளம் பெறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

4. உங்கள் நிகர மதிப்பு தெரியுமா?

உங்களின் நிகர மதிப்பைக் (Net Worth) கணக்கிடுவது மிக எளிது. சுருக்கமாகச் சொல்வது எனில், உங்கள் சொத்துகளிலிருந்து (Assets) பொறுப்புகளை (Liabilities) கழிக்கும் ஓர் எளிய செயல்முறையாகும். இன்னும் எளிதாகச் சொல்வது எனில், உங்களுக்குச் சொந்த மனதிலிருந்து நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டியவற்றைக் கழித்தால் கிடைப்பதுதான் நிகர மதிப்பு ஆகும்.

உங்கள் நிகர மதிப்பை அறிந்துகொள்வது, மறுபரிசீலனை செய்வது நிதி விஷயத்தில் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும். மேலும், எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும் உதவும். எப்போதும் உங்களின் பொறுப்புகளை / கடன்களை விட உங்களின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் ஏதாவது சிக்கல் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர முடியும்.

5. வருமானத்துக்குள் வாழ்க்கை இருக்கிறதா?

வரவு - செலவு (Budget) கணக்கு பார்த்து செயல் பட்டால் மட்டுமே ஒருவர் அவரின் சம்பளத்துக்குள்/ வருமானத்துக்குள் வாழ முடியும். பட்ஜெட் என்கிற வார்த்தை பலரை கூச்சப்பட வைக்கிறது. காரணம், அவர்கள் கண்டபடி செலவு செய்பவர்களாகவும் செலவுக் கணக்கைத் தொடர்ந்து பதிவு செய்ய முடியாதவர்களாகவும் இருப்பதுதான். கீழே காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் வரவு செலவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

உங்கள் மாதாந்தர வருமானம் / சம்பளத்தைக் கணக்கிடுங்கள். உங்களின் மாத மொத்த செலவுகளைக் கணக்கிடுங்கள். அடுத்து, உங்கள் செலவுகளைப் பல வகைகளாக வகைப்படுத்துங்கள். உதாரணமாக, அவசியத் தேவை, தேவையில்லை என்றாலும் அல்லது சொந்தமாக இல்லை என்றாலும் சமாளிக்க முடிபவை, ஆடம்பரம் எனப் பல வகையாகப் பிரியுங்கள்.

அவசியத் தேவை எனில், உணவு, உடை, வீடு ஆகியவற்றைக் குறிப்பிடலம். ஏழைகளுக்குச் சொந்த கார் தேவையில்லை. அவர்கள் பொதுப் போக்கு வரத்து, ஷேர் ஆட்டோ, ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நடுத்தர மக்களுக்கு சொந்த கார் இல்லை எனில், வாடகை கார் எடுத்து நிலைமையைச் சமாளிக்க முடியும். பல சமயங்களில் சொந்த காரைவிட வாடகை கார் வசதியாக இருக்கும். கார் பார்க்கிங் பிரச்னை இல்லை; பராமரிப்பு பிரச்னை இல்லை; டிரைவர் பிரச்னை இல்லை. கௌரவம் பார்க்கவில்லை எனில், இப்போது வாடகை கார் பட்ஜெட்டுக்குள் இருப்பதால் சொந்த காரைவிட அதுவே சிறந்ததாக இருக்கும்.

ஆடம்பரம் என்பது செலவுக்கு மீறி வீண் செலவு செய்வ தாகும். மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்பதற்காகத் தேவையில்லாமல் பெரிய வீடு கட்டுவது, பெரிய கார் வாங்குவது, அந்தஸ்துக்காக விமானப் பயணம் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். உங்கள் செலவுகளை மதிப்பிடுங்கள். தேவையில்லாத செலவுகளைக் குறைத்துவிட்டாலே பட்ஜெட்டுக்குள் வாழ முடியும். இப்படி வாழும்போது உங்களைக் கடன் சிக்கல் அண்டாது.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த்... உண்மையை உணர்த்தும் 5 காரணிகள்!

முக்கியமான மூன்று விஷயங்கள்...

மேலே கண்டவை எல்லாம் சீராகச் செயல்பட வேண்டும் எனில், அதிமுக்கியமான மூன்று விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்திருக்க வேண்டும். நாம் எப்போதும் சொல்வதுபோல், வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு பிரீமியம் மிகக் குறைவான அதே நேரத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான், ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் போதிய அளவுக்கு மருத்துவக் காப்பீடு (ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம்), குடும்பத்தின் மாதச் செலவை போல 3 முதல் 6 மடங்கு தொகையை அவசர கால நிதித் தொகுப்பை வைத்திருப்பது ஆகியவற்றை மேற் கொண் டிருப்பது அவசியமாகும்.

அவசர நிதித் தொகுப்பைக் கொண்டிருப்பது என்பது எந்த நிதி நெருக்கடியையும் சுலபமாகச் சமாளிக்க உதவும். மர்பியின் விதிமுறையை (Murphy’s Law)எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது, ‘நீங்கள் எதிர்பார்க்காத வகையில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், அது சரியாகும் வரை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான பணத்தை சேமிப்பில் வைத்திருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் எந்தச் சிக்கலிருந்தும் மீண்டு வர முடியும். இதை, கொரோனா ஊடரங்கு, தொழில் முடக்கத்தின் போது பலரும் உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.

நிதி வெற்றிக்கு நல்ல பணப் பழக்கங்களும், செலவு தேர்வு களும் மிக முக்கியம். ஒருவர் தனது தனிப்பட்ட நிதி நிலையை வலிமையாக வைத்திருக்க மேற்கண்ட விஷயங்களைப் பின்பற்றி நடப்பது மிக மிக முக்கியம். இனிமேலாவது இந்தப் பணப் பழக்கங்களை நீங்கள் பின்பற்றுங்கள்!