Published:Updated:

பண மதிப்பு நீக்கம்: 5 ஆண்டுகள் நிறைவு; மோடி சொன்ன இந்த 4 நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றனவா?

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. மோடி இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணமாகக் கூறிய நான்கு நோக்கங்களும் நிறைவேறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் வளர்ச்சியைப் பெருமளவு பாதித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் இன்று வரை குற்றம்சாட்டி வருகின்றன.

நவம்பர் 8, 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உடனடியாகச் செல்லாது என அறிவித்தார்.

இந்த நடவடிக்கையின் முதல் நோக்கமாக, ``பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை இனி மாற்ற இயலாது. இதன் காரணமாக கறுப்புப் பணம் கணிசமாகக் குறையும்" என்று அறிவித்தார். மேலும், நாட்டில் உள்ள கள்ள நோட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படும். இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும் என்றும், நாட்டில் ஊழல் பெருமளவில் குறையும் என்றும் தெரிவித்தார்.

Rupees
Rupees
Photo by rupixen.com on Unsplash

4 நோக்கங்கள்..!

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. பிரதமர் மோடி இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணமாகக் கூறிய நான்கு நோக்கங்களும் நிறைவேறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் வளர்ச்சியைப் பெருமளவு பாதித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் இன்று வரை குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இந்த நடவடிக்கை நல்ல மாற்றங்களை இந்திய பொருளாதாரத்தில் கொண்டு வந்துள்ளதாகத் தற்போதுவரை தெரிவித்து வருகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 5 ஆண்டுகளில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ள போட்டபோது புழக்கத்தில் 15.44 லட்சம் கோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்த 98.96% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக 2018-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் பெருமளவு பணம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம் கறுப்புப் பணம் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்பதை அறிய முடிகிறது. அதனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. 2016-ம் ஆண்டு 5.43 கோடி இந்தியர்கள் வருமான வரி செலுத்தி வந்தனர். அடுத்த 2017-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 20% வரை உயர்ந்து 6.74 கோடி இந்தியர்கள் வருமான வரி செலுத்தினர். இதன் மூலம் மத்திய அரசு கூறுவதில் உள்ள உண்மையை உணர முடிகிறது. என்றாலும் அதன் பிறகு, வந்த ஆண்டுகளில் வருமான வரி கணக்கு செலுத்துபவர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாகவே இருந்து வருகிறது. சென்ற ஆண்டு எண்ணிக்கையின்படி ஆறு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வருமான வரி செலுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் 10% வரை வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று வைத்துக்கொள்ளலாம். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது வாடிக்கையாகும். அதனால் இந்த உயர்வு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மட்டும்தான் ஏற்பட்டது என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. என்றாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு இதில் நிச்சயம் பங்கு உள்ளது என்று அறிய முடிகிறது.

Rupee
Rupee
Photo by Ravi Roshan from Pexels
Vikatan

மேலும் டிஜிட்டல் பேமென்ட் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது காரணமாக முறையான வியாபாரம் அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்து வருகிறது. யு.பி.ஐ சேவைகள் மூலம் சென்ற மாத நிலவரப்படி 420 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த அளவானது 2016-ம் ஆண்டை ஒப்பிட்டால் பல மடங்கு அதிகமாகும். இன்று சிறு பெட்டிக் கடைகளிலும் ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கூட யு.பி.ஐ சேவை மூலம் நடைபெறுகிறது. இதன் காரணமாக முறையான வியாபாரம் அதிகரித்து அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கிறது. ஆனால் இன்றளவும் டிஜிட்டல் சேவையின் அளவு மொத்த பரிவர்த்தனை அளவுகளில் 10% குறைவாகவே உள்ளது. கறுப்புப் பணம் வைத்துள்ள நபர்களை டிஜிட்டல் சேவை எந்த அளவிலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மையாகும். பெரும் செல்வந்தர்கள் தற்போதும் கையிருப்பில் உள்ள பணத்தை வைத்து எதையும் வாங்க முடியும் என்ற நிலை இருப்பதே இதற்குக் காரணமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைக்கப் பெறாத நிலையே தற்போதும் உள்ளது. சில கடைகளில் டிஜிட்டல் சேவைகள் வழங்கினாலும் அதற்குக் கட்டணமாக 2% வரை வாடிக்கையாளரிடம் இருந்து வசூல் செய்து விடுகின்றனர். ஆட்டோமொபைல், ஹார்டுவேர் போன்ற பல கடைகளில் நாம் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் பரிவர்த்தனை செய்ய முற்பட்டால் இந்தக் கட்டணத்தைக் கொடுத்தால்தான் பொருள்களை வாங்க முடியும் என்ற நிலை உள்ளது. வியாபாரிகளிடம் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் இந்த கட்டணத்தை வசூல் செய்வதன் காரணமாக இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூல் செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பாதகமாக உள்ளது. என்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதன் மூலம் வரும் காலங்களில் முறையான வியாபாரம் அதிகரிக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியும்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
AP Photo/Evan Vucci
₹64,000 கோடியில் மோடி தொடங்கி வைத்த மருத்துவ உள்கட்டமைப்புத் திட்டம்; எதற்காக?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக செல்லாத நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த ஆண்டுகளில் புதிதாக கள்ள நோட்டுகள் தோன்றுவது தற்போது வரை தொடரத்தான் செய்கிறது. மேலும் ஊழல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு போன்றவை பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை

இதன் காரணமாகத் தற்போது வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா தோல்வியா என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் ஒவ்வொரு இந்தியனும் மறக்க முடியாத தினமாக நவம்பர் 8, 2016 இருக்கிறது. அந்தத் தினத்தையொட்டிய பல்வேறு நினைவுகள் ஒவ்வொரு இந்தியன் இடமும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு