Published:Updated:

`விவசாயத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு' - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்பு

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் தொடர்பான மூன்றாம் கட்ட அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, மார்ச் 25-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படும் என பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். லாக்டெளன் 4.0 முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில நாள்களாக இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இன்று, மூன்றாம்கட்ட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், “ மூன்றாம்கட்ட அறிவிப்புகள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்றவை தொடர்புடையது. இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அனைத்து துன்பங்களையும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சகித்துக்கொண்டுள்ளனர். விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம்பெற உள்ளன. குளிர்பதனக் கிடங்கு, விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம்பெறும். 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாக இருக்கும். மீதமுள்ள 3 அறிவிப்புகள், மேலாண்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பானதாக இருக்கும்.

பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது. லாக்டெளன் காலத்தில், இந்தியாவில் பால் தேவை 20- 25 சதவிகிதம் குறைந்துள்ளது. தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில், ஊரடங்கின்போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்திசெய்யப்பட்டது. கூடுதலாக உற்பத்திசெய்யப்பட்ட பால், சுமார் 4,100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 2 சதவிகிதம் வட்டி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக 5,000 கோடி பணப்புழக்கம் ஏற்படும். இதனால் 2 கோடி விவசாயிகள் பலனடைவார்கள். கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்புகள்
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்புகள்

விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும். இதன்மூலம், சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவியாக இருக்கும். 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும். தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு, உத்தரப்பிரதேசத்தின் மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.

பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் (Pradhan Mantri Matsya Sampada Yojana) மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல். இதன்மூலம் இந்தியாவின் ஏற்றுமதியில் 1 லட்சம் கோடி பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தரத்தில் மீன்பிடி கப்பல்கள், துறைமுகங்கள், மீனவர்களுக்கும், படகுகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள். இந்த புதிய திட்டங்களின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும். கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்புகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9,000 கோடியில் திட்டங்கள்.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்புகள்
நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்புகள்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் 13,343 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், கால்நடைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்படும். கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.

மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க ரூ 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூலிகை சாகுபடியில் ஈடுபடும் உள்ளூர் விவசாயிகளுக்கு, ரூ. 5000 கோடி வருமானம் கிடைக்கும். கங்கை நதியின் இருபுறமும் 800 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் வளர்க்கப்படும். தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் உள்ள 2லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தில் உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். விநியோக சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு விவசாயப் பொருள்களை அனுப்பினால், 50 சதவிகிதம் போக்குவரத்து மானியம். அதுபோல் பொருள்களைச் சேகரிக்கவும் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு