2014-ம் ஆண்டு மே மாதம் பணவீக்கம் 8.33 சதவிகிதமாக இருந்தது. அதற்கடுத்த உச்சமாக கடந்த மாதம் 7.79% என்கிற அளவை எட்டி பொதுமக்களைத் துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கு பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு என சில காரணங்கள் முக்கியமானதாகக் கூறப்படுகின்றன.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு தனது வட்டி விகிதத்தை 0.4 புள்ளி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. எரிபொருள், சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் என அனைத்திலும் இதன் தாக்கத்தை தினமும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உணவுப் பொருள்களின் விலையானது அதன் மூலப் பொருள்களின் விலை, விநியோகத்துக்கும் சந்தைப்படுத்தலுக்கும் ஆகும் போக்குவரத்துச் செலவு என பலவற்றைச் சார்ந்து இருக்கிறது. இதன் விளைவாக, பெரும்பாலான நிறுவனங்கள் தாங்கள் சந்தைப்படுத்தும் பொருள்கள் அல்லது சேவைகளின் விலையைக் கூட்ட ஆரம்பித்திருக்கின்றன.
பொதுமக்களின் மன உளவியலை நன்கு அறிந்து வைத்திருக்கும் மெகா எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் தாங்கள் சந்தைப்படுத்தும் அனைத்துப் பொருள்களின் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக சில பொருள்களின் எடையைக் குறைத்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த உத்தி இந்தியாவில் மட்டுமல்லாமல், பல நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் சப்வே, டொமினோ பீட்சா போன்ற நிறுவனங்கள் தங்களது செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக பொருள்களின் எடையை/அளவைக் குறைத்து விற்பனை செய்து வருகின்றன.
ஒரு முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, ``அடுத்த இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் பணவீக்கமானது இன்னும் அதிகமாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் இந்நிறுவனத்தின் ஏதாவது ஒரு பொருளை அன்றாடம் உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் சில குறிப்பிட்ட பொருள்களைப் பொருத்தவரை, விலை அதிகரிப்புக்குப் பதிலாக எடைக் குறைப்பு செய்திருக் கிறார்கள். அதவாது, `inflation’ என்கிற பணவீக்கத்தை சமாளிக்க `shrinkflation’ என்கிற எடைக் குறைப்பு உத்தியை பல நிறுவனங்கள் கையாள ஆரம்பித்திருக்கின்றன.

உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 155 கிராம் எடையுள்ள ஒரு சோப்பின் எடை இப்போது 135 கிராமாக குறைக்கப்பட்டிருக்கிறது என ஒரு விநியோகஸ்தர் கூறியதாக பத்திரிகைச் செய்தி வெளியாகிருக்கிறது.
அது போல நொறுக்குத் தீனி தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தின் சில பொருள்களின் விலையை உயர்த்தாமல் 55 கிராமுக்குப் பதிலாக 42 கிராமாகக் குறைத்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையாலும், பால் பொருள்களின் விலை உயர்வாலும், போக்குவரத்துச் (லாஜிஸ்டிக்) செலவு அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் அந்த சுமையை நுகர்வோர்கள் மீது சுமத்த ஆரம்பித்திருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் ரூ.1, 5, 10 மதிப்புள்ள குறைந்த விலையுள்ள ஆனால், அதிகமாக விற்பனையாகும் பொருள்களுக்கான விலையைக் கூட்டாமல் எடையைக் குறைத்து விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறது. அப்படியிருந்தும் இந்தப் பொருள்களின் நுகர்வு அளவு குறைந்து வருவதாக இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
2020-21-ம் நிதியாண்டில் ஏற்பட்ட மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பை ஓரளவுக்கு சமாளிக்க அப்போதே வெளிநாட்டு எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் இந்த எடைக் குறைப்பை செய்ய ஆரம்பித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்தினால் அந்த நிறுவனம் இந்த உத்தியை இன்னும் அதிகப் பொருள்களுக்கு விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, வேறொரு உத்தியையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக ஏற்கெனவே இருந்துவரும் விலையான ரூ.10-க்கும் ரூ.35-க்கும் இடைப்பட்ட விலையில் அதற்குரிய எடையுடன் கூடிய பொருள்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தத் தொடங்கி இருக்கிறது.
பொதுவாக, குறைவான எடை கொண்ட பொருள்களை வாங்கும் போது நுகர்வோர்கள் விலையில் அக்கறை செலுத்துவதைப் போல பொருளின் எடை எவ்வளவு என்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. உதாரணமாக, சாக்லேட் ரூ.40 என்பதில் இருக்கும் கவனம் அது 35 கிராமா இல்லை 33 கிராமா என்பதில் இருப்பதில்லை. இந்த மன உளவியலை அறிந்து கொண்ட நிறுவனங்கள் பணவீக்கத்தினால் தங்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க எடைக் குறைப்பு என்கிற உத்தியை கையிலெடுக்க ஆரம்பித்து தங்களின் சந்தைப் பங்கைத் தக்க வைத்துக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன.