Published:Updated:

வலைவீசும் ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள்... சீனியர் சிட்டிசன்களே, உஷார், உஷார்!

சீனியர் சிட்டிசன்
பிரீமியம் ஸ்டோரி
சீனியர் சிட்டிசன்

கவர் ஸ்டோரி

வலைவீசும் ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள்... சீனியர் சிட்டிசன்களே, உஷார், உஷார்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
சீனியர் சிட்டிசன்
பிரீமியம் ஸ்டோரி
சீனியர் சிட்டிசன்

கொரோனா காலத்தில் ஒன்பது வயது சிறுவன் முதல் 90 வயது முதியவர்கள் வரை ஆன்லைன் டிரேடிங்கில் இறங்கி அதகளப்படுத்தியதில் அவர்கள் அதிக லாபம் அடைந்தார்களோ என்னவோ, பங்குச் சந்தை புரோக்கர்கள் கொள்ளை லாபத்தைச் சம்பாதித்தார்கள். அதிலும் அன்-ஆர்கனைஸ்டு செக்டார் (சிறு புரோக்கர்கள்) கையில் இருந்து ஆர்கனைஸ்டு செக்டார் (வங்கிகள் சார்ந்த /சாராத பெரும் புரோக்கர்கள்) கைக்கு டிரேடிங் மற்றும் டீமேட் அக்கவுன்ட்டுகள் மாறியதில், பங்குச் சந்தை வர்த்தகம் றெக்கைகட்டிப் பறந்தது. இதனால் இளம் வயதினரில் சிலர் நல்ல லாபம் அடைந்திருக்கலாம். ஆனால், மூத்த குடிமக்கள்..?

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

புதிய டெக்னாலஜி வரவால் டெரி வேட்டீவ்ஸ் டிரேடிங்கும், மார்ஜின் வர்த்தக மும் செழித்து வளர்ந்தன. இந்தக் கட்டுக் கடங்காத வளர்ச்சியின் கூடவே மோசடிகளும் ஏமாற்றுகளும் பாற்கடலில் அமுதத்துடன் தோன்றிய விஷம்போல் எழுந்துள்ளன. மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படும் வங்கிகள் சார்ந்த புரோக்கிங் கம்பெனிகள்கூட தங்கள் லாபத்தை அதிகரிக்க வாடிக்கையாளர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தும் செயல்களில் ‘நேர்மை, நியாயம்’ என்கிற எந்த உணர்வும் இன்றி ஏமாற்றத் தொடங்கிவிட்டன. இதைப் பற்றியெல்லாம் கண்காணிக்க வேண்டிய எக்ஸ்சேஞ்சுகள் கண்டுகொள்ளாமலே இருந்துவருகின்றன (எக்ஸ்சேஞ்சில் நடக்கும் குளறுபடி களே எக்கச்சக்கமாக இருக்க, புரோக்கர்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் பித்தலாட்டங் களையும் அவர்கள் எங்கே கண்டுகொள்ளப் போகிறார்கள்!). எக்ஸ்சேஞ்சுகளுக்கு மேலே உள்ள கண்காணிப்பு அமைப்புகளும் ‘எங்களுக்குப் புகார் எதுவும் வரலையே!’ என்று கண்டும் காணாமல் இருப்பதால், சிறு முதலீட்டாளர்கள், முக்கியமாக, மூத்த குடிமக்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். பின்வரும் இரண்டு சம்பவங் களையும் படித்தால், மூத்த குடிமக்கள் எவ்வளவு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

வலைவீசும் ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள்... சீனியர் சிட்டிசன்களே, உஷார், உஷார்!

குறிவைக்கப்படும் சீனியர் சிட்டிசன்கள் - 1

1980-களில் ஹர்ஷத் மேத்தா ஊழலை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டிய சுசேதா தலால், 80 வயது முதியவர்கள் இருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதங் கத்துடன் பதிவு செய்துள்ளார். இவர்களில் பெஸ்டோன்ஜி என்பவர் பல பங்குகளை வாங்கி வைத்திருந்தார். அவர் வாங்கியதில் சில நல்ல பங்குகளாகவும், சில குப்பைப் பங்குகளாகவும் (Junk shares) இருந்தன. இவற்றை எல்லாம் ‘டீமேட்’ வடிவில் மாற்றாமல் பழைய முறையில் பேப்பர் வடிவிலேயே வைத்திருந்திருக்கிறார்.

இவரது போர்ட்ஃபோலியோவை சரிசெய்து தருவதாகக் கூறிய ஒரு பெரும் புரோக்கிங் நிறுவன ஊழியர், பெஸ்டோன்ஜி பெயரில் ஒரு டிரேடிங் அக்கவுன்ட்டை ஆரம்பித்தார். பெஸ்டோன்ஜியின் போர்ட்ஃபோலியோவை சரிசெய்வதற்குப் பதிலாக, டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் ஈடுபட்டால் பணம் அள்ளலாம் என்று சொல்லி அவரை அதில் ஈடுபடுத்த, வருடத்துக்கு ரூ.5 லட்சம் வர்த்தகம் செய்து வந்த முதியவர், இரண்டே மாதங்களில் ரூ.1.32 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளார். அதாவது, அவர் கணக்கில் புரோக்கிங் நிறுவன ஊழியர் புகுந்து விளையாடியிருக்கிறார். இதனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு லட்சக் கணக்கில் கமிஷனும், சர்வீஸ் சார்ஜும் கிடைத்தது. ஆனால், பெஸ்டோன்ஜிக்கு...

அந்த வருடம் முழுக்க மொத்தம் ரூ.6.5 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்ததில், பல லட்சங்கள் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத் தொகையை வசூலிக்க பெஸ்டோன்ஜியின் அக்கவுன்டை அந்த புரோக்கிங் நிறுவனம் ஃப்ரீஸ் செய்ததால், அவர் காவல்துறையிலும், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலும் புகார் செய்தார்.

இதை அறிந்த அந்த நிறுவனம் தவறாக வழிகாட்டிய தன் ஊழியரைத் தண்டிக்காமல், பெஸ்டோன்ஜியின் உறவினர் களின் அக்கவுன்டுகளை எல்லாம் முடக்கியது. இதனால் பெஸ் டோன்ஜியின் உறவினர்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க, அவர் வேறு வழியின்றி தன் புகாரை வாபஸ் பெற்று, தன் வாழ்நாள் சேமிப்பை இழந்திருக்கிறார்.

குறிவைக்கப்படும் சீனியர் சிட்டிசன்கள் - 2

சாந்தா லிமாயேவுக்கு இழைக்கப்பட்டது அநீதியின் உச்சம். ஆறேழு வருடங்களாக பங்குச் சந்தை டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் அனுபவம் உள்ள அவர், நிறுவன ஊழியரின் தவறான வழிகாட்டுதலால், மார்ஜின் டிரேடிங்கில் இறக்கிவிடப்பட்டுள்ளார். ரூ.2 கோடி மதிப்புள்ள அவர் அக்கவுன்டுக்கு ரூ.8 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்ய மார்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஊழியரின் தவறான வழிகாட்டுதலால், ஒரே வருடத்தில் (2020-21) ரூ.340 கோடி அளவுக்கு 2,000 மார்ஜின் வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் மட்டுமே ரூ.2 கோடி.

இதை சரிக்கட்ட பல முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளன. 82 வயது சாந்தாவுக்கு 15.25% வட்டியில் கடன் வழங்கப்பட்டது. சாந்தாவின் மகன் மற்றும் மருமகள் அமெரிக்காவில் இருந்து கையாளும் டீமேட் அக்கவுன்டில் இருந்து அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனிகள் பரிசாகக் கொடுத்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, அதில் இருந்து வந்த பணம் சாந்தாவின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, நிறுவனத்தின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதை சாந்தாவின் மகன் அறியாமல் இருப்பதற்காக, அவரது போன் நம்பர் மாற்றப்பட்டுள்ளது. இதில் நடந்த தவறுகளுக்கு முழுக்க சாந்தா தான் பொறுப்பு என புரோக்கிங் நிறுவனத்தால் நியமிக்கப் பட்டுள்ள கைதேர்ந்த வக்கீல்கள் வாதித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இருக்கும் சாந்தாவின் மகன் மற்றும் மருமகளுக்கு இந்தியாவில் உள்ள நடைமுறைகள் புரியவில்லை; அங்கிருந்தபடி வழக்கை எடுத்து நடத்தத் திராணியும் இல்லை.

இவர்களுக்குப் பலவகையிலும் ஏற்பட்ட மொத்த நஷ்டம் ரூ.8.75 கோடி. இதில் ஒரு பெரிய பாகம் கமிஷனாகவும், சர்வீஸ் சார்ஜாகவும் நிறுவனத்துக்குச் சென்றுள்ளது கவனிக்கத்தக்கது.

வலைவீசும் ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள்... சீனியர் சிட்டிசன்களே, உஷார், உஷார்!

படுகுழுயில் விழாமல் தப்பித்த அப்பாவி நண்பர்...

ஏதோ கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் சில பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தானே இந்தத் தலைவலி; நமக்கு இல்லை என்றோ, இதெல்லாம் மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்தான் நடந்திருக்கிறது; நம் சென்னையில் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சென்னையிலும் இதுபோன்ற ஆபத்துகள் நம்மையும் நெருங்கி வருகின்றன.

ஒரு மிகப் பிரபலமான வங்கிசார் புரோக்கிங் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களாக அக்கவுன்ட் வைத்திருக்கும் சென்னை அப்பாவி நண்பர் ஒருவருரை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறது ஒரு புரோக்கிங் நிறுவனம். அந்த புரோக்கிங் நிறுவனத்தின் ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்ற போர்வையில் நண்பரை அணுகியவர், பங்கு டிப்ஸ்களைத் தந்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். சில பல நாள் பழக்கத்துக்குப் பிறகு, அந்த அப்பாவி நண்பர் சார்பாக டிரேட் செய்வதற்கு ஒருமுறை மட்டுமாவது அனுமதி வழங்கினால், அலுவலகத்தில் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று மன்றாட, அப்பாவி நண்பரும் அனுமதித்திருக்கிறார். நண்பரின் அக்கவுன்டில் தேவையான பணம் இருந்தாலும், நண்பருக்குத் தெரியாம லேயே மார்ஜின் டிரேடிங் முறையில் வர்த்தகம் செய்துள்ளார் புரோக்கிங் நிறுவன ஊழியர். சரியான நேரத்தில் நண்பர் விழித்துக்கொண்டு, வங்கியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால், படுகுழியில் விழாமல் தப்பித்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தவறு செய்ய அந்த ஊழியரைத் தண்டிக்கவே இல்லை.

ஹீரோ எப்போது வருவாரோ...

பெரிய நிறுவனங்களின் கதை இப்படி எனில், சில மாதங்கள் டிரேட் செய்த அனுபவத்தில் செபியின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் சிறு போர்ட் ஃபோலியோ மேனேஜ்மென்ட் கம்பெனிகளும் முதலீட்டாளர் களுக்கு நன்மை செய்வதைவிட தீமையே செய்கின்றன. பேராசையைத் தூண்டிவிட்டு, கொள்ளையடிக்க நினைக்கும் இந்த ‘ஒயிட்காலர் மோசடிப் பேர்வழி’களிடம் இருந்து மக்களைக் காக்கும் ஹீரோ எப்போது வருவாரோ... எந்த மாதிரியான தடுப்பு நடவடிக் கைகளை எடுப்பாரோ என்பது தான் பெரும் ஏக்கமாக உள்ளது.

மூத்த குடிமக்கள், யாரிடமும் புகார் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இப்படி ஏமாற்றப்படுகிறார்கள். வாழ் நாள் முழுக்க கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொள்ளை யடிக்க மோசடிப் பேர்வழிகளுக்கு எப்படித்தான் மனம் வருகிறது?

மூத்த குடிமக்கள் குறிவைத்து ஏமாற்றப்படுவதைத் தடுக்க எக்ஸ்சேஞ்சுகளும் செபியும் தீர்மானமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால், இது மாதிரியான குற்றங்கள் அதிகரித்து, மூத்த குடிமக்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என்பது நிச்சயம்!

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

சீனியர் சிட்டிசன்கள் ஏமாறாமல் தப்பிக்கும் வழிகள்..!

ஏமாற்றும் புரோக்கிங் நிறுவனங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

‘‘சில புரோக்கிங் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்போது தவறான வழிகாட்டுதல்கள் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது அதிகமாகவே நடக்கிறது. இதற்கு அதிகம் பலியாகிறவர்கள் மூத்த குடிமக்களாக இருக்கிறார்கள்.

அதற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் விஷயம், பேராசை. குறுகிய காலத்தில் அதிகமாகப் பணம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களே முதலில் ஏமாறுகிறார்கள். மூத்த குடிமக்கள் பலருக்கு இன்றைய நவீன தொழில்நுட்பம் குறித்தோ, அதன் அபாயங்கள் குறித்தோ தெரிவதில்லை. தங்களுக்கு இது பற்றித் தெரியாது என்பதாலேயே தங்களை அணுகும் மூன்றாம் நபரிடம் நம்பி அந்தப் பொறுப்புகளைத் தந்துவிடுகிறார்கள். மூத்த குடிமக்களிடம் அதிகமான நேரமும் பணமும் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேர்த்தப் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டினால் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் கேட்கிறவர்களிடம் பணத்தையும் அதை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் தந்துவிடுவார்கள்.

ஏமாற்றுபவர்கள் நம்முடைய ஆசையை முதலில் தூண்டுவார்கள். இதில் இவ்வளவு கிடைக்கும், அதில் அவ்வளவு கிடைக்கும். இவரைப் பாருங்கள், இவர் இவ்வளவு சம்பாதித்திருக்கிறார். அதை வைத்து வீடு, கார் வாங்கிவிட்டார் என்றெல்லாம் கதைவிடுவார்கள். அவர்கள் நம் எப்படி ஆசை காட்டினாலும், நாம் அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏமாற்றும் புரோக்கிங் நிறுவனங்களிடமிருந்து மூத்த குடிமக்கள் மட்டுமல்ல, எல்லா விதமான முதலீட்டாளர்களுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் பேராசையை விட்டொழிக்க வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும் அளவுக்கதிகமாக எல்லாம் லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்களின் நலனுக்காகவே சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்தாலே கணிசமான வட்டி வருமானம் கிடைக்கும். அதிக வருமானம் பார்க்க ஆசைப்பட்டு முன்பின் தெரியாத நபர்களை நம்பி, ரிஸ்க் அதிகமுள்ள பங்குச் சந்தைகளில் இருக்கிற பணத்தை எல்லாம் போட்டுவிட்டு பின்னர் புலம்பக் கூடாது. பங்குச் சந்தை குறித்து எந்த அடிப்படையும் தெரியாமல் அதில் பணத்தைப் போட்டு இழந்துவிட்டு பிற்பாடு பங்குச் சந்தை மோசடிதான் எனப் புலம்பக் கூடாது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்; இத்தனை சதவிகித வருமானம் நிச்சயமாகக் கிடைக்கும் என்று யாரேனும் சொன்னால், அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருங்கள். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, இவ்வளவு வருமானம் நிச்சயமாகக் கிடைக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியாது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.10,000 வருமானம் என்று ஏமாற்றும் பொன்ஸி திட்டங்களுக்கும் இதுபோல சொல்கிறவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பங்குச் சந்தையில் ரிஸ்க் இருக்கிறது. அதில் ஏற்றமும் இருக்கும், இறக்கமும் இருக்கும். இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் என்று எதுவுமில்லை. இதுதான் பங்குச் சந்தையின் உண்மையான நிலை. இதற்கு மாறாக, யாரேனும் உறுதி அளித்தால் கவனமாக இருங்கள்.

முக்கியமாக, தரகு நிறுவனங்களின் அணுகுமுறையைக் கவனியுங்கள். உங்களுக்காகவே எல்லா வற்றையும் செய்வது போலவும், உங்களுக்காக மட்டுமே அவர்கள் வீடு தேடி வந்து சந்திப்பதாகவும் சொல்வார்கள். இப்படிச் சொல்கிறவர்களிடம், ஜாக்கிரதையாக இருங்கள். ஆரம்பத்தில் இப்படிப் பேசுபவர்கள், உங்களுடைய பணம் நஷ்டம் ஆகும்போது உங்கள் மேலேயே பழியைப் போடுவார்கள். உங்கள் பண விவகாரங்களில் தேவையில்லாமல் பேசுபவர்களை மட்டும் நம்பவே நம்பாதீர்கள்.

முதலில் இனிக்க இனிக்க பேசுபவர்கள் பிற்பாடு, ‘‘நாங்கள் சொன்னபடி நீங்கள் முடிவெடுக்கவில்லை. அதனால்தான் நஷ்டம்’’ என்பார்கள். அந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வர மீண்டும் பணத்தைப் போடும்படி சொல்வார்கள். சந்தை குறித்து நல்ல அனுபவம் இருக்கும் நேர்மையான யாரும் இது போல பேசவே மாட்டார்கள். எனவே, தரகு நிறுவனங்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருங்கள். அந்த நிறுவனத்தைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மார்ஜின் டிரேடிங், டெரிவேட்டிவ்ஸ், எஃப் அண்ட் ஓ போன்ற வற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுமாதிரியான சிக்கலான திட்டங்களில் சிக்கித்தான் பெரும்பாலானவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இவற்றில் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டியிருப்பதால் இழப்பும் அதிகம்.

உங்களால் முடிவுகள் எடுக்க முடியாத எதிலும் யாரையும் நம்பி பணத்தைப் போடாதீர்கள். எந்த ஒரு முதலீடாக இருந்தாலும், அதில் கிடைக்கும் லாபத்தைவிட அதிலுள்ள ரிஸ்க் என்னென்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். வயதாகிவிட்டது என்பதை அலட்சியத்துக்குக் காரணமாகச் சொல்லாதீர்கள். என்னால் இந்த ரிஸ்க்கை எடுக்க முடியும். இந்தப் பணம் இழந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் இருந்தால் மட்டுமே அந்த ரிஸ்க்கை எடுங்கள். இல்லை எனில், ஒதுங்கியே இருங்கள்.

புதிதாக பங்குச் சந்தைக்கு வரும் மூத்த குடிமக்களும், சிறு முதலீட்டாளர்களும் பங்குச் சந்தை முதலீடு பற்றிய குறைந்தபட்ச தெளிவுடன் வருவது அவசியம். அதை டிரேடிங் கணக்கு தொடங்கு வதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும். டிரேடிங் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு விவரங்களைப் பூர்த்தி செய்ய அவர்களிடம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நாமினி விவரங்களைத் தெளிவாக, சரியாக நீங்களே பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு எஸ்.எம்.எஸ் அலர்ட், மெயில் போன்றவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். தரகு நிறுவனங்களிடம் ஏதேனும் குறை கேட்பதற்காக இருந்தால், புகார் சொல்வதாக இருந்தால், அனைத்தையும் மெயில் மூலமாகவே செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னாளில் புகார், வழக்கு என்று வரும்போது உதவியாக இருக்கும்.

மொபைல் எஸ்.எம்.எஸ் பார்ப்பது, மெயில் பார்ப்பது, ஓ.டி.பி பார்ப்பது போன்றவற்றுக்கெல்லாம் அடுத்தவர் உதவியை நாடுபவராக இருந்தால், பங்குச் சந்தைகளில் ஈடுபடும் எண்ணத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக வங்கி/அஞ்சலக டெபாசிட் என்று சென்றுவிடுங்கள்!’’ என்றார்.

- ஜெ.சரவணன்

எம்.சதீஷ் குமார்
எம்.சதீஷ் குமார்

60% லாபம்... பொன்ஸி திட்டங்களில் முதலீடு செய்தால், முதலுக்கே மோசம்!

எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாக ஒரு திட்டம். மாதம் ரூ.5,000 எனில், ஆண்டுக்கு ரூ.60,000. இது 60% வருமானம் ஆகும். இதை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இப்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஆண்டுக்கு 6 சதவிகிதம்தான் வருமானம் கொடுக்கிறது. தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் எனில், இதைவிட சற்றுக் கூடுதல் வட்டி கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் சுமார் 6-8%, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் 12-14 சதவிகிதம்தான் வருமானம் கிடைக்கும். நிறுவனப் பங்கு முதலீடு எனில், 15-20% வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்குமேல் வருமானம் தருவதாகச் சொல்லும் திட்டங்கள் மோசடித் திட்டங்களாகவே இருக்கும்!

பொன்ஸி திட்டம்...

மேலே பார்த்தபடி, 60, 80%, 100% என அதிகப்படியான வருமானத்தைத் தருவதாக உறுதி அளிக்கும் திட்டங்களைத்தான் பொன்ஸி திட்டங்கள் என்கிறோம். எனக்குத் தெரிந்த ஒருவர், இது போன்றதொரு திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்; அவருக்கு மாதம்தோறும் ரூ.50,000 அவரின் வங்கிக் கணக்குக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

சதுரங்க வேட்டை படத்தில் வரும் பிரபல டயலாக், ‘‘ஒருவரை ஏமாற்ற வேண்டும் எனில், அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்.’’ இந்த பொன்ஸி திட்டத்தில் ஒருவரை முதலீடு செய்ய வைக்க, அவருக்கு அபரிமிதமான வருமானம் கிடைக்கும் என்று சொல்லி பேராசையைத் தூண்டுவார்கள். ஆண்டுக்கு 60% வருமானம் தருவதாகச் சொல்லும் முதலீட்டுத் திட்டம் நிச்சயம் மோசடித் திட்டமாகத் தான் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை நடத்துபவர்கள், இதில் ரிஸ்க்கே கிடையாது. மாதம்தோறும் உங்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும் என்று உறுதி தருவார்கள். ‘‘எனக்குத் தவறாமல் பணம் வந்துகொண்டிருக்கிறது’’ என்று சொல்ல பலரையும் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுவதைப் பார்த்தால், ‘‘நாமும் பணம் போட்டுப் பார்த்தால் என்ன’’ என்கிற எண்ணம் வந்துவிடும்.

சாத்தியமில்லாத, தெளிவு இல்லாத திட்டம்..!

‘‘உங்களால் எப்படி ஆண்டுக்கு 60% வருமானம் எப்படித் தர முடியும்’’ என்று கேட்டால், நடைமுறைக்கு சாத்தியமில்லாத, நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு திட்டத்தைச் சொல்வார்கள். உதாரணமாக, ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்கிறோம் என்பார்கள். கிரிப்டோவில் பணம் போடுவோம் என்பார்கள். இதிலிருந்து 100% லாபம் கிடைக்கிறது. அதிலிருந்துதான் உங்களுக்கு 60% வருமானம் தருகிறோம் என்பார்கள். இன்னும் சிலர், ஃப்யூச்சர்ஸிலும், ஆப்ஷன்ஸ் டிரேடிங்கிலும் வர்த்தகம் செய்து 200% லாபம் சம்பாதிக்கிறோம். அதில் பாதியை உங்களுக்குத் தருவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை என்பார்கள். ஆனால், கிரிப்டோகரன்சி, ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் மாதம்தோறும் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை என்பது பங்குச் சந்தையை நன்கு புரிந்துகொண்டவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆசை காட்டி மோசம் செய்யும் பொன்ஸி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எல்லாம் நடுத்தர வருமானப் பிரிவினரும், பணி ஓய்வு பெற்று கையில் மொத்தமாகப் பணம் வைத்திருப்பவர்களும்தான். நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த சிலர், பொன்ஸி திட்டங்களை நடத்தும் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கி, கடன் வாங்கி பணம் போடுகிறார்கள். 60% வருமானம் கிடைக்கும்போது 20% வட்டிக்கு ஏன் கடன் வாங்கக் கூடாது என்று வேறு வாதிடுவார்கள். இன்னும் சிலர், வீடு வாசலை விற்று, அந்தப் பணத்தைப் போடும் கொடுமையும் நடக்கிறது.

பிரச்னைக்கு யாரிடம் முறையிடுவது?

வங்கியில் பணம் டெபாசிட் செய்தபின், ஏதாவது பிரச்னை வந்தால், ரிசர்வ் வங்கி அதை தீர்த்து வைக்கும். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிக்கல் எனில், செபியிடம் நாம் புகார் செய்ய முடியும். ஆனால், பொன்ஸி திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்தால், அது பற்றி யாரிடமும் புகார் செய்ய முடியாது. அப்படியே புகார் செய்தால், நடவடிக்கை எடுப்பதற்குள் மோசடிப் பேர்வழிகள் தப்பிவிடுவார்கள். இதனால் பணம் போட்டவர்கள், அதை இழப்பது தவிர, வேறு வழி இருக்காது. ஏனென்றால் யாரிடமும் புகார் செய்ய முடியாது. எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் 12 சதவிகிதத்துக்குமேல் உறுதியான வருமானம் தருகிறோம் என்று சொன்னால் மிகவும் உஷாராக இருப்பது அவசியம். அதுவும் 50%, 60% வருமானம் எனில், இரட்டிப்பு உஷாராக இருப்பது நல்லது. மக்களிடம் இருந்து வாங்கும் பணத்தைத் திரும்ப அவர்களுக்கே தந்து, ரூ.500 கோடி, ரூ.1,000 கோடி என்று சேர்ந்தவுடன், தலைமறைவாகிவிடுவார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism