Published:Updated:

பஞ்சாப் வங்கி மோசடி: `மெஹுல் சோக்ஸியைக் காணவில்லை!' - வழக்கறிஞரின் அதிர்ச்சி தகவல்

மெஹுல் சோக்ஸி
மெஹுல் சோக்ஸி

இந்த மோசடியிலிருந்து தப்பித்து தலைமறைவாக சுற்றிக்கொண்டிருந்த இருவரில், நிரவ் மோடியை மட்டும் கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீஸ் கைது செய்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடியை கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மெஹுல் சோக்ஸி காணவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி வங்கித்துறையை அதிர வைத்திருக்கிறது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரின் உறவினர் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெஹுல் சோக்ஸியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், வங்கிச் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை சாதுரியமாகப் பயன்படுத்தி (Operational Risk Fraud) சுமார் ரூ.14,000 கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்கள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர். இந்த மோசடியிலிருந்து தப்பித்து தலைமறைவாக சுற்றிக்கொண்டிருந்த இருவரில், நிரவ் மோடியை மட்டும் கடந்த மார்ச் மாதம் லண்டன் போலீஸ் கைது செய்தது. அதன்பிறகு இங்கிலாந்திலுள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைத்தது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசின் அமலாக்கத்துறை பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தது.

 நிரவ் மோடி
நிரவ் மோடி

இதற்கான வழக்கு விசாரணை, இங்கிலாந்து `வெஸ்ட்மினிஸ்டர்' நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த ஜனவரியில் நிரவ் மோடிக்கு எதிரான சாட்சிகள் விசாரணை நடந்த பிறகு பிப்ரவரி 25-ல் வெளியான தீர்ப்பில் ``இந்திய சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்தத் தடையும் இல்லை. அதுமட்டுமல்லாமல், நாடுகடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் எனவும் இந்திய அரசு உறுதியளித்துள்ளது’’ எனக் கூறப்பட்டது.

ஆனால், மெஹுல் சோக்ஸி தலைமறைவாகவே சுற்றிக்கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர், ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வந்த நிலையில், குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்ஸியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதற்கிடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக மெஹுல் சோக்ஸிக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமலேயே இருந்தார்.

இந்நிலையில், மெஹுல் சோக்ஸியைக் காணவில்லை என அவரின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் இன்று (25.05.2021) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கறிஞர் கூறுகையில், ``மெஹுல் சோக்ஸியைக் காணவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளனர். இதுபற்றி ஆலோசிக்க என்னை அழைத்துள்ளனர். ஆன்டிகுவா போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் பேங்க்
பஞ்சாப் நேஷனல் பேங்க்

இந்த மோசடியின் காரணமாக, இதுவரை மொத்தம் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சி.பி.ஐ முடக்கியுள்ளது. நிரவ் மோடியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்டுகள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம், தங்க மற்றும் வைர நகைகள் எனப் பல தரப்பட்ட சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு