Published:Updated:

வேலை... டெக்னாலஜி... முதலீடு... 2022-ம் ஆண்டு எப்படியிருக்கும்?

கணிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
கணிப்பு

கணிப்பு

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தொடக்கத்தில் கடந்துவந்த 12 மாதங் களின் நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்ப்பதும், புதிய ஆண்டு எப்படியிருக்கும் எனக் கணிப்பதும் ஒரு சம்பிரதாயமாகவே ஆகியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு புத்தாண்டுக்கான கணிப்பையும் போக்கையும் எழுதி தனி நூலாகவே வெளியிட்டு வருகிறது `தி எகானமிஸ்ட்’ என்கிற பிரபல வார இதழ்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

பெருந்தொற்றை சமாளித்து ஓரளவுக்கு எழுந்து நிற்கத் தொடங்கிய ஆண்டு 2021 எனில், இனிவரும் 2022-ம் ஆண்டில் புதிய யதார்த்தத்துக்கு நாம் நம்மை சரிசெய்து கொள்வது அவசியமாகும். 2022-ம் ஆண்டில் கவனிக்கக்கூடிய சில முக்கியமான விஷயங் களும், போக்குகளும் என்ன என்பதை இனி சுருக்கமாகப் பார்க்கலாம்.

முடிவுக்கு வருமா பெருந்தொற்று (Pandemic to Endemic): புதிதாகக் கண்டறியப்பட விருக்கிற `ஆன்டி – வைரஸ்’ மாத்திரைகளும், மேம்படுத்தப்பட்ட எதிர்ப்புசக்திக்கான சிகிச்சைகளும், அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளும் சந்தைக்கு வரக்கூடும். வளர்ந்த நாடுகளில் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்தத் தொற்றானது உயிரைக் காவு வாங்கும் நோயாக இருக்காது. ஆனால், சில நாடுகளில் இது ஓர் அச்சுறுத்தலாகவே இருந்துவரும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவில்லை எனில், கோவிட்-19 மற்ற தொற்றுநோய்களைப் போல, ஏழைகளை அதிகம் பாதிக்கக்கூடியத் தொற்றாக ஆகக்கூடும்.

பணவீக்கம் குறித்த கவலைகள்: விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளும் எரிசக்தி தேவையின் அதிகரிப்பும் பொருள் களின் விலையை அதிகரிக்க காரணமாக இருக்கின்றன. மத்திய வங்கியைச் சேர்ந்தவர்கள் இது தற்காலிகமான நிலை என்றாலும், யாரும் அதை நம்பத் தயாராக இல்லை. குறிப்பாக, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து (பிரெக்ஸிட்) வெளிவந்துவிட்டதால் தொழிலாளர்கள் பற்றாக்குறையும், இயற்கை வாயுவை அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலையும் ஏற்பட்டிருப்பதால், `தேக்கநிலை’ என்கிற நிலையை (ரிஸ்க்) எதிர்கொள்ளக்கூடும்.

வேலை செய்யும் சூழலுக்கான எதிர்காலம்: இனிவரும் காலத்தில் வேலை செய்வதென்பது ஒரு கலப்பாக (Hybrid) இருக்கும் என்பதை அனைவரும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் நிலை வந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள் வாரத்தில் அதிகமான நாள்கள் வீட்டிலிருந்தும், ஓரிரு நாள்கள் அலுவலகத் துக்குச் சென்றும் வேலைபார்க்கக்கூடும். ஆனால், ‘எத்தனை நாள்கள்... அப்படிச் செய்வது சரியா... யாரெல்லாம் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிப்பார்கள்..?’ என்பது பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

சமீபத்திய ஆய்வின்படி, முன்பு போல அலுவலகம் சென்று வேலை பார்ப்பதை அதிகமான பெண்கள் விரும்பவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது. இதனால் அவர்களின் பணி உயர்வு பாதிக்கப்படுமா, அலுவலகம் வராமல் வேலை செய்யும் பணியாளர்களைக் கண்காணிப்பது பற்றியும், வரி விதிகள் பற்றியும் விவாதம் நடக்கும்.

வேலை... டெக்னாலஜி... முதலீடு...
2022-ம் ஆண்டு எப்படியிருக்கும்?

புதிய தொழில்நுட்பம்: அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் கட்டுப்பாட்டாளர்கள் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. ஆனால், அவற்றின் வளர்ச்சியையோ, லாபத்தையோ அந்த நடவடிக்கைகள் இதுவரை அதிகமாகப் பாதிக்கவில்லை.

இப்போது சீனா இதில் முன்னணியில் இருக்கிறது. அங்கு இயங்கி வரும் பல நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் விளையாட்டு, ஷாப்பிங் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் புவிசார் உத்திகளுக்குப் பயன்படும் வகையில் செயல்பட வேண்டுமென சீன அதிபர் ஜி ஜின்பிங் விரும்புகிறார். இது சீனாவின் புத்தாக்கத்தை அதிகரிக்குமா, இல்லை, தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைப் பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கிரிப்டோவின் வளர்ச்சி: வழக்கத்தை உடைத்தெறியும் தொழில்நுட்பங்கள் போல, கிரிப்டோகரன்சிகளும் பிரபலமாகி வருகின்றன. பல நாடுகளில் கட்டுப்பாட்டாளர்கள் இது சம்பந்தமாகக் கடினமான சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். மத்திய வங்கிகளும் தங்களுடைய சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து சிந்தித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ ப்ளாக்செயின் குழு, பாரம்பர்யமான தொழில்நுட்பம் மற்றும் மத்திய வங்கிகள் மூன்று முனைகளுக்கிடையே மோதல் வரலாம்.

காலநிலை நெருக்கடி: காட்டுத் தீ, வெப்ப அலை, வெள்ளம் ஆகியவை அதிகமாகவும், அடிக்கடியும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான `ஓர் அவசரம்’ கொள்கை வகுப்பாளர்களிடம் அவ்வளவாகக் காணப்படவில்லை. கார்பன் வெளியேற்றம் குறைய வேண்டுமெனில், அதற்கு மேற்கத்திய நாடுகளும் சீனாவும் ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செயல்பட வேண்டும்.

அது போல, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த `சோலார் ஜியோ இன்ஜினீயரிங்’ குழுவின் கண்டுபிடிப்பையும் அவதானிக்க வேண்டும். சூரிய ஒளியைக் குறைக்கும் விதமாக மிகவும் உயரத்தில் பலூன் மூலம் தூசியை வெளியிடுவது சம்பந்தமான ஆய்வை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பயணத்தில் பிரச்னை: பயணம் செய்வது ஓரளவுக்கு அதிகரிக்க ஆரம்பித்திருந்தாலும், பெருந்தொற்றுப் பரவலை அறவே அழித்தொழிக்க வேண்டு மென்பதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகின்றன. தொழில் சம்பந்தமாகப் பயணம் செய்வது பாதியாகக் குறைந்து விட்டது. இது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், இதனால் பாதிக்கப்படுபவர்கள் சுற்றுலாப் பயணிகள்தாம். ஏனெனில், பிசினஸ் சம்பந்தமான பயணம் குறைந்துவிட்டதால், அதை ஈடு செய்யும் வகையில் விமான சேவைக் கட்டணங்கள் உயர்த் தப்பட்டிருக்கின்றன. இதை எப்படி இந்தத் துறை எதிர் கொள்ளப்போகிறது என்பது இந்த ஆண்டு தெரியவரும்.

விண்வெளிக்குச் சுற்றுலா: 2022-ம் ஆண்டு அதிகமான மக்கள் விண்வெளிக்குச் சுற்றுலா செல்லக்கூடும். அதற்கான போட்டி சில நிறுவனங்களுக் கிடையே ஆரம்பித்துவிட்டது. திரைப்பட இயக்குநர்களும் விண்வெளிக்குச் சென்று திரைப்படம் எடுக்கக்கூடும். நாசா `ஆஸ்ட்ராய்ட்’ என அறியப்படும் `சிறுகோள்கள்’ குறித்த ஆய்வுகளை முன்னெடுத் துச் செல்லக்கூடும்.

எல்லோரும் விரும்புவது போல, 2022-ம் ஆண்டு இந்த பெருந் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.