Published:Updated:

‘‘கஷ்டப்பட்டு சம்பாதிச்சாதான் பணத்தோட அருமை புரியும்..!’’

கானா பாலா

ஆயிரம் முதல் லட்சம் வரை... அனுபவம் பகிரும் பிரபலங்கள்

‘‘கஷ்டப்பட்டு சம்பாதிச்சாதான் பணத்தோட அருமை புரியும்..!’’

ஆயிரம் முதல் லட்சம் வரை... அனுபவம் பகிரும் பிரபலங்கள்

Published:Updated:
கானா பாலா

காசு… பணம்… துட்டு… மணி… மணி’ என்ற பாடலின் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான கானா பாடகரான கானா பாலாவின் அனுபவம் இனி...

‘‘ஆயிரம் ரூபாய் இருக்கவங்க லட்சம் ரூபாய் வேணும்னு ஆசைப்படுவாங்க. லட்சம் ரூபாய் இருக்கவங்க கோடி ரூபாய் வேணும்னு ஆசைப்படுவாங்க. அது இயல்பான விஷயம் தான். ஆனா, எங்க குடும்பம் அப்படியானது இல்லை. வீட்டு வாடகை, கரன்ட் பில், 5-ம் தேதிக்குள்ள மளிகை சாமான்கள் வாங்குறதுக் கான பணம், சொந்தபந்தங்களுக்கு நல்லது கெட்டது செய்யுறதுக்குத் தேவையான பணம் இருந்தா போதும்னு நினைக்கிற ஏழ்மையான குடும்பம்.

கானா பாலா
கானா பாலா

என் கூட பொறந்தது மொத்தம் ஏழு பேர். எனக்கு 10 வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு. அம்மாதான் எங்களையெல்லாம் வளர்த்து, படிக்க வச்சு ஆளாக்கினாங்க. அதனால, நாங்கள்லாம் ரொம்ப கஷ்டப்பட் டோம்னு சொல்ல மாட்டேன். எல்லா கஷ்டங் களையும் எங்க அம்மாதான் தாங்கிக்கிட்டாங்க. அவங்க உழைப்புலதான் நாங்க வளர்ந்தோம். எனக்கு முன்னாடி எங்க குடும்பத்துல யாரும் பாடகர் கிடையாது. நான்தான் முதல் ஆள். பாட்டுல எந்த அளவுக்கு ஈடுபாடு இருந்துச்சோ அந்த அளவுக்கு படிப்புலயும் ஈடுபாடு இருந்தது எம்.எஸ்ஸி பாட்டனி, எம்.எல் படிச்சேன்.

என்னுடைய முதல் சம்பாத்தியம் என்னன்னு கேட்டா, மரணங்களுக்கு பாடுறது மூலமா கிடைச்ச சின்னச் சின்ன தொகைதான். நான் படிக்கிற காலத்துலயே மரணங்களுக்கு பாடுறதுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதுல பெருசா பணம் கிடைக்காது. கையில கிடைக்கிறதைக் கொடுப்பாங்க. அதை நான் மனமுவந்து வாங்கிப்பேன். ஏன்னா பணத்துக்காக நான் மரணங்களுக்குப் பாடுறதுக்குப் போகலை. இறந்தவங்க திரும்பி வரப்போறதில்லை. அவங்களுக்காகக் கடைசியா பாடுறோம்ங்கிற ஆத்ம திருப்திக்காக போவேன். இதுவரை எனக்கு தெரிஞ்ச வரையில 5,000-க்கும் மேற்பட்ட மரண வீடுகள்ல பாடியிருப்பேன். மரணம்தான் நமக்கு வாழ்க்கையைப் புரியவைக்கும். தொடர்ந்து மரண நிகழ்வுகளுக்குப் பாடிப் பாடி அதுலயே மூழ்கிட்டேன். வாழ்க்கையின் எதார்த்தம் புரிஞ்சுட்டதால, பெருசா பொருளீட்டணும்னு எனக்கு என்னைக்குமே ஆசை வந்தது கிடையாது.

மரண நிகழ்வுகளுக்கு அடுத்து என்னுடைய சம்பாத்தியம்னு பார்த்தா, அது வக்கீல் தொழில்லதான். 1998-ல் எம்.எல் முடிச்சுட்டு வக்கீலாகிட்டேன். வக்கீல் தொழில்ல சம்பாதிக்கணும்னா நமக்குன்னு பெரிய சர்க்கிள் இருக்கணும். இல்லைன்னா, வக்கீலா பொழப்பு நடத்த முடியாது. வக்கீல் தொழிலுக்கு எனக்கு முகவரி கொடுத்ததும் கானா பாட்டு தான். எப்படீன்னு கேக்குறீங்களா? நான் நல்லா பாடுறதால காலேஜ்ல எனக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். காலேஜ்ல நான் பிரபலமா சுத்தி வருவேன். அதனால காலேஜ் எலெக்‌ஷன்ல துணைத் தலைவர் ஆகிட்டேன். அதன் மூலம்தான் நிறைய தொடர்புகள் கிடைச்சது. எனக்குன்னு பெரிய சர்க்கிள் உருவாச்சு. பின்னாடி நான் சட்டம் படிச்சு வக்கீல் ஆனதும் அவங்க மூலமாத்தான் எனக்கு சின்னச் சின்ன வழக்குகள் நிறைய வர ஆரம்பிச்சது. ஒரு நாளைக்கு சராசரியா 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை கிடைக்கும். நான் முழுநேர வக்கீலான பிறகும்கூட நான் மரணங்களுக்குப் பாடுறதை நிறுத்தலை. ஈவ்னிங் டைம்ல போய் பாடுவேன்.

மரணங்களுக்கு அடுத்ததா கச்சேரிகள்லயும் பாட ஆரம்பிச்சேன். கச்சேரிகளுக்குப் போகும்போது பாடல் மூலமா எனக்கு கிடைச்சுக் கிட்டிருந்த வருமானம் கொஞ்சம் கூட ஆரம்பிச்சது. கச்சேரிக்கு தகுந்தாற்போல சில ஆயிரங்கள் வரை கிடைக்கும். இதற்கிடையில என்னுடைய பாடல்களை சிடி போட்டு அடக்க விலைக்கே விற்பனை பண்ணேன். அதுல லாபம் சம்பாதிக்க நினைக்கலை. நம்முடைய பாடல்கள் எல்லோருக்கும் போய் சேர்ந்தா போதும்னு இருந்தது. காரணம், எனக்கு என் திறமை மேல நம்பிக்கை இருந்துச்சு. என்றைக் காவது ஒருநாள் பெரிய ஆளா வேன்னு உறுதியா நம்பினேன்.

இந்தச் சூழல்லதான், சினிமாவுல பாடுறதுக்கான வாய்ப்பு வந்தது. இசையமைப் பாளர் தேவா மூலமா திரைத் துறையில என்ட்ரி ஆனேன். அடுத்து, பா.இரஞ்சித்தின் `அட்டகத்தி’யில பாடினேன். அப்போ பணத்தையெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. கிடைக்கிற வாய்ப்புகளை சரியா பயன்படுத்தினா போதும்னு நினைச்சேன். அடுத்து `சூது கவ்வும்’ படத்துல பாட்டெழுதி பாடுறதுக்கு சந்தோஷ் நாராயணன் கூப்பிட்டார். அந்தப் படத்துல வெளியான காசு பணம் துட்டு மணி மணி பாடல் பயங்கர ஹிட். அதுக்குப் பிறகுதான் எனக்கு காசு, பணம், துட்டு நிறைய கிடைக்க ஆரம்பிச்சது. நிறையன்னு சொன்னதும் பெரிசா நினைக்காதீங்க... அவ்வளவு வாங்க நாம என்ன ஹீரோவா?

ஒரு பாட்டு எழுதினா, அது பெரிய பேனரா இருந்தா 1.5 லட்சம் ரூபா வரை கொடுப்பாங்க. பாடுறதுக்கு ஒரு லட்சம் ரூபா வரை கொடுப்பாங்க. இந்தத் தொகையெல்லாம் அவங்களே முடிவு பண்றது தான். என் பாட்டுக்கு மக்கள்கிட்ட இருக்கிற ரீச்சை பார்த்துட்டு இவ்வளவு கொடுக்கலாம்னு ஃபிக்ஸ் பண்ணிருவாங்க. எனக்கு இவ்வளவு ரூபாய் வேணும்னு நான் இதுவரைக்கும் கேட்டதே கிடையாது. சின்ன பட்ஜெட் படம்னா அவங்க சூழலுக்கு ஏற்ப வாங்கிப்பேன். சினிமாவுல வந்துதான் லட்சங்களில் சம்பாதிக்க ஆரம்பிச்சேன்னு சொன்னாலும் அதிகமா சம்பாதிக்கிறேன்னு சொல்ல மாட்டேன்.

கானா பாலா
கானா பாலா

`காசு பணம் துட்டு மணி மணி’ பாட்டுதான் எனக்கு பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சு. ஆனா, அந்தப் பாட்டுக்கான வரிகள் உடனே ஓகே ஆகல. `கம்பி வெச்ச நோட்டுக்கு கரன்சின்னு பேரு... அதை நம்பி மோசம் போனவங்க எத்தனையோ பேரு...’ங்கிற மாதிரி இலக்கியமா நிறைய வரிகளை எழுதிக் கொடுத்தேன். உங்ககிட்ட வேற எதிர்பார்க் குறேன்னு சந்தோஷ் நாராயணன் ரிஜக்ட் பண்ணிகிட்டே இருந்தார். ஒருகட்டத்துல, ‘என்னால முடியல வேணாம்னே’ சொல்லிட்டேன். ஆனா, அவரு விடல. உங்களால முடியும் பண்ணுங்கன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் எழுதினதுதான் காசு பணம் துட்டு மணி மணி. எனக்கு தெரிஞ்ச பழமொழிகளை பாட்டா மாத்தியிருப்பேன். அது பயங்கரமா ஹிட் அடிச்சுருச்சு.

என் பண அனுபவத்துல அடுத்தகட்டம்னு பார்த்தா, அது இசை நிகழ்ச்சிகள் சினிமாவுல சம்பாதிக்கிறதைவிட இசை நிகழ்ச்சிகள்ல அதிக வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. சினிமா எனக்கான விசிட்டிங் கார்டுதான். அதன்மூலம் கிடைச்ச அடையாளம் மலேசியா, சிங்கப்பூர்னு வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் மேடையில ஏற்றியிருக்கு. ஒரு நிகழ்ச்சிக்கு 3 லட்சம், 4 லட்சம்னு கொடுப்பாங்க. ஆனா ஒண்ணு, எவ்வளவு சம்பாதிச்சாலும் அதை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன். இப்போகூட என் பாக்கெட்ல பத்து ரூபாகூட இல்லை.

நிறைய பணம் வந்ததும் காஸ்ட்லியான பொருள் களைப் பயன்படுத்தணும், சொகுசா வாழணும்ங்கிற எண்ணமெல்லாம் எனக்கு வந்ததே இல்லை. எளிமையா வாழுறதுதான் என்றைக்கும் நிலை யானதுங்கிறது என்னோட நிலைப்பாடு. சொந்த பந்தங்கள், உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு என்னால முடிஞ்சதை செலவழிச்சுருவேன். அடுத்த மாசத்துக்கு எவ்வளவு தேவையோ அதுமட்டும்தான் என்னோட சேமிப்புல இருக்கும்.

எனக்கு இப்ப 51 வயசு ஆகுது. 70 வயசு வரைக்கும் நேர்மையா சம்பாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இருக்கு. ரெண்டு குழந்தைங்க... பொண்ணு அபிமன்யா 8-வது படிக்கிறாள், பையன் அபிமன்யு 5-வது படிக்கிறான். ரெண்டுபேருமே நல்லா திறமையா இருக்காங்க. அவங்க வளர்ந்து கஷ்டப் பட்டு சம்பாதிக்கணும். அதுதானே வாழ்க்கை. அப்பத்தானே அவங்களுக்கு பணத்தோட அருமை தெரியும். அதனால பசங்களுக்கு சொத்து சேர்க்கிற எண்ணம் எனக்கு இல்லை” என்பவர் குரலில் அழுத்தமான நம்பிக்கை மிளிர்கிறது.

பணம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கிறது. கானா பாலாவின் எண்ணம் இப்படி இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism