Published:Updated:

அடமானம் Vs விற்பனை... அவசரத்துக்குத் தங்கத்தை என்ன செய்யலாம்? தங்கமான ரகசியங்கள்...

தங்கம்...
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்...

GOLD

அடமானம் Vs விற்பனை... அவசரத்துக்குத் தங்கத்தை என்ன செய்யலாம்? தங்கமான ரகசியங்கள்...

GOLD

Published:Updated:
தங்கம்...
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்...

மும்பையில் இருக்கும் ஜவேரி பஜார் என்னும் தங்க மையம் தெரிவிக்கும் ஒரு விஷயம் கொஞ்சம் ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இந்தியர்கள் பொதுவாக, தங்கத்தை விற்பதைவிட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகின்றனர் என்பது தான் அந்த விஷயம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

கடந்த வருடம் வந்த கொரோனா முதல் அலை காலத்தில் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டது; அப்போது பலருக்கும் ஏதாவது ஒரு வகையில் வருமானம் பாதிக்கப் பட்டதில் பெரிதும் கைகொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன், அரை சவரன் நகைகள்தான்.

ஆனால், பெரும்பாலானவர்கள் தங்க நகைகளை விற்கவில்லை. எப்பாடுபட்டாவது பணம் புரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டபோதும் தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; தற்போதும் நடைபெற்று வருகிறது. மணப்புரம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற கடன் வழங்கும் ஜாம்பவான்கள் மட்டுமன்றி, தெருக்கோடி சேட்டுக் கடைகளும் லாபம் கொழித்தன. இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும் போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

தங்கம்...
தங்கம்...

கடன் பெறுவதே சரி...

அவசர காலத்தில் தங்க நகையை அடமானம் வைப்பதே சரி என்ற கருத்துள்ளவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறார்கள்:

1. பாரம்பர்யமாக வந்த நகைகள் என்றால் அவற்றின் மீது நமக்கு ஒரு பாசப் பிணைப்பு இருக்கும். அவை நம் கையை விட்டுப் போவதைப் பலரும் விரும்புவதில்லை. அடமானம் வைத்தால் என்றாவது ஒரு நாள் மீட்க வாய்ப்பு வரலாம் அல்லவா?

2. சில அபூர்வ டிசைன்கள் கொண்ட நகைகளைவிற்றுவிட்டால், அவை திரும்பக் கிடைக்குமா என்பது சொல்ல முடியாது. ஆனால், அடமானம் வைக்கும்போது அதை எப்படியாவது திரும்பப் பெற்று விடலாம்.

3. தங்க நகையை விற்பதென்றால் எங்கு வாங்கினோமோ, அங்கு விற்றால்தான் சரியான விலை கிடைக்கும். வேறு இடங்களில் விற்க நேர்ந்தால் விலை குறையும். மேலும், சில கடைகளில் “பணம் தர மாட்டோம்; வேறு நகைகளைத்தான் வாங்க வேண்டும்” என்பார்கள். ஆனால், அடமானக் கடைகள் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதால், அவசரத்துக்குப் பணம் பெறுவது எளிது.

4. கிரெடிட் கார்டு லோன், பர்சனல் லோன் இவற்றைவிட தங்க நகைக் கடன் வட்டி குறைவு என்பதால், நகைக் கடன் வாங்கி மற்ற கடன்களை அடைத்துவிட்டு, நகைக் கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது நம் கடன் சுமையைக் குறைக்கும் வழியாகும்.

5. அடகு வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 65%-70% அளவே கடன் கிடைத்து வந்தது. ஆனால், கொரோனா காலத்தில் வேலையிழந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு, ரிசர்வ் வங்கி தங்க மதிப்பில் 90% அளவு கடன் தரும்படி உத்தரவிட்டுள்ளது. விற்றால் கிடைக்கும் அளவு தொகை கடனாகக் கிடைத்துவிடும்போது, வீணாக நகையை விற்பானேன்?

6. எல்லாவற்றுக்கும் மேலாக, நகைக் கடன் வாங்கும்போது, அதை அடைத்து நகையை மீட்க வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குவதாலும், இதில் பெண்களும் முனைந்து செயல்படுவ தாலும் கடன் எளிதில் அடையும்.

விற்பதே சரி...

தங்க நகையை அடமானம் வைப்பதே சரி எனப் பலரும் பல காரணங்களைச் சொன்னாலும், சுசேதா தலால் போன்ற நிதி நிபுணர்கள் தங்கத்தை விற்பதே சரி என்று அறிவுறுத்துகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன?

1. சென்ற வருடம் தங்கம் உச்ச விலையில் இருந்தபோது விற்றிருந்தால் வட்டி கட்ட வேண்டிய தேவையும் இருந் திருக்காது; தங்கம் விலை குறைந்தபின் வாங்கி லாபமும் பார்த்திருக்கலாம்.

2. வட்டி என்பது ஒரு வேண்டாத சுமை. கிரெடிட் கார்டு லோன், பர்சனல் லோன் இவற்றைவிட நகைக் கடன் வட்டி குறைவு என்பது உண்மை என்றாலும், விற்க வழி இருக்கும்போது அந்த வட்டிச் சுமையை ஏன் தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும்?

3. தங்கத்தின் மதிப்பில் 90% அளவு கடனாகப் பெற்றுவிடுவதால், தங்கம் விலை குறையும்போது, இன்னும் சற்று அதிக நகைகளை அடமானமாகத் தர வேண்டியிருக்கும். இல்லையென்றால் அதற்கு ஈடான பணத்தை உடனடியாகத் திருப்பி செலுத்த வேண்டும்.

4. இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் வங்கியில் வாங்கிய நகைக் கடனுக்கு நம்மால் சரியாக இ.எம்.ஐ கட்ட முடியா விட்டால், நம் கிரெடிட் ஹிஸ்டரி பாதிக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற முக்கியக் கடன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

5. நம்மால் கடனைத் திருப்பி செலுத்த இயலாத நிலை அதிகம் நீடித்தால் நம் நகைகள் ஏலம் விடப்படும். ஏலத்தில் சரியான விலை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதைவிட நம் பொருளை நாமே விற்பது நல்லதல்லவா?

6. ஒருமுறை அடகு வைக்கப் பட்ட நகை மீண்டும் மீண்டும் அடகுக் கடைக்குச் செல்வது வழக்கம். இந்தப் பழக்கத்தில் இருந்து மீளமுடியாமல் வட்டி கட்டியே தேய்ந்துபோன குடும்பங்கள் ஏராளம். இவர்கள் கட்டிய வட்டியைச் சேமித்திருந் தாலே அதுபோன்று இரண்டு மடங்கு தங்கம் வாங்கியிருக்கலாம்.

அடமானம், விற்பது... எது சரி..?

இப்படி இரு தரப்பினரும் கூறும் வாதங்கள் அனைத்தும் சரியானதாகவே தோன்றுகின்றன. மக்கள் தங்கத்தை அடகு வைப் பதற்குக் காரணம், என்றாவது ஒரு நாள் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை க்கு வலுவான அடித்தளமாகப் போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம்.

இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்ப வர்கள் இன்னும் கடன் சுமையை ஏற்றிக்கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு தகுந்த நேரமும் வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம். உங்கள் வசதி எப்படி என்று பாருங்கள்; அதற்கேற்ற முடிவை எடுத்துக்கொள்ளுங்கள்!