தங்கம் வாங்குவதற்கென்றே இருக்கும் ஒரு திருவிழா என்றால் அது அட்சய திரிதியைதான். வரும் மே 3-ம் தேதி, அந்த அட்சய திரிதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அட்சய திரிதியை தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த 10 நாள்களாகக் குறைந்துவருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 19-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.40,200-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கி ரூ.40,000-க்கு கீழே வந்தது.
கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.39,704-க்கு விற்பனையானது. 21-ம் தேதி ரூ.39,568 ஆக குறைந்தது. 23-ம் தேதி ரூ.39,560 ஆனது. 25-ம் தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து ரூ.39,296-க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி ரூ.39,096-க்கு விற்கப்பட்டது.
27-ம் தேதி ரூ.39,000-க்குக் கீழே குறைந்து ரூ.38,896-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. 28-ம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.38,696-க்கு விற்பனையானது. மாலையில் ஒரு பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.38,800-க்கு விற்பனையானது. இதன்படி பார்க்கும் போது, கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 குறைந்துள்ளது.

அதே போல, வெள்ளியின் விலையும் படிப்படியாகக் குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000-க்கும் விற்பனையாகிறது. இது கடந்த 19-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்பனையானது.