Published:Updated:

10 நாள்களில் ஒரு பவுனுக்கு ₹1,360 வீழ்ச்சி; தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

தங்கம் வாங்க இது சரியான நேரமா?
தங்கம் வாங்க இது சரியான நேரமா?

தங்கத்தின் அதிகபட்ச விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ.981 குறைந்தும், ஒரு பவுனுக்கு ரூ.7,848 குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் வேகமாக அதிகரித்தது என்றால், மறுபக்கம் தங்கம் விலை அதைவிட வேகமாக உயர்ந்தது.

தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வரலாறு காணாத உச்சபட்ச விலையை அடைந்தது. அதன்பிறகு, கொரோனாவின் பாதிப்புகள் மெல்ல மெல்லக் குறைய, அனைத்து நாடுகளின் பங்குச் சந்தை வர்த்தகம் தன் பழைய நிலைக்குத் திரும்ப, ஏறிய அதே வேகத்தில் இறங்கவும் செய்தது தங்கத்தின் விலை. ஒரு கிராம் தங்கம் (22 காரட்) அன்று ரூ.5,416-க்கு வர்த்தகமானது. தற்போது ரூ.4,435-க்கு (21.06.2021) வர்த்தகமாகிறது.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash
கட்டாயமாகும் ஹால்மார்க் முத்திரை... தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

தங்கத்தின் அதிகபட்ச விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ.981 குறைந்தும், ஒரு பவுனுக்கு ரூ.7,848 குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த 10 நாள்களில் ரூ.1,360 வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.36,840-க்கு வர்த்தகமானது.

இந்நிலையில், தங்கத்தின் விலை குறைய காரணம் என்ன, வரும் நாள்களில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்துகொள்ள நிதி ஆலோசகர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம். ``அமெரிக்கா ஃபெடரல் வங்கி, 2024-ம் ஆண்டுக்குள் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த கால அளவை 2023-ம் ஆண்டுக்குள் என மாற்றி அமைக்கலாம் என்கிற யோசனை அவர்களுக்கு வந்திருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியானபிறகு, அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு விதமான அச்சநிலை உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக பங்குச் சந்தையிலிருக்கும் முதலீடுகளை அவர்கள் கடந்த வாரம் வெளியில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட சரிவை கடந்த வாரங்களில் நாம் பார்த்தோம்.

தங்கம்
தங்கம்

அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி இருப்பதால்தான் வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான முடிவை அரசு கையில் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலர் ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து 88-90 டாலரிலேயே வர்த்தகமாகிவந்த டாலர் இன்டெக்ஸ், தற்போது 92 டாலராக அதிகரித்துள்ளது.

அதனால், முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க டாலர் மீதான முதலீடுகளை அதிகப்படுத்தியும், தங்கத்தில் முதலீடுகளைக் குறைத்தும் வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

குறுகிய காலத்தில் நடக்கும் மாற்றமாகத்தான் முதலீட்டாளர்கள் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இந்நிலை நிரந்தரமானது கிடையாது. தங்கத்தின் விலை சரிவது தடுக்கப்பட்டு, நீண்டகால அடிப்படையில் விலை ஏற்றம் ஆரம்பிக்கும். இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

அதே போல, தற்போதைய தங்கத்தின் விலை வீழ்ச்சியானது, நுகர்வோர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும். திருமணத் தேவைகளுக்காகத் தங்கத்தை சேமிப்பவர்கள் அல்லது உடனடித் தேவை இருப்பவர்கள் திட்டமிட்டு தங்க நகைகளை வாங்கி வைக்கலாம். இதனால் நுகர்வோர்களுக்கு பெரிய தொகை மிச்சமாகும்" என்றார்.

தங்கம் விலை இன்னும் இறங்குமா என்று காத்திருப்பதைவிட, இப்போது கொஞ்சம் குறைந்திருக்கும் விலையில் கொஞ்சம் தங்கத்தையாவது வாங்கிவிடுவது நல்லது. அடுத்துவரும் நாள்களில் தங்கம் விலை உயர்ந்துவிட்டால், வாங்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிடுவோம் என்பது நிச்சயம்!

அடுத்த கட்டுரைக்கு