Election bannerElection banner
Published:Updated:

Gold Rate: ஒரே மாதத்தில் 2,192 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை... இன்னும் ஏறுமா?

Gold
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

தற்போது (23.04.2021) ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,502-க்கு வர்த்தகமாகிறது. கடந்த ஆண்டின் உட்சபட்ச விலையுடன் ஒப்பிடும் போது ரூ.1,152 குறைவுதான் என்றாலும்...

கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு போன்ற விஷயங்கள் முதலீட்டாளர்களைக் கதிகலங்கச் செய்தன. தற்போது அதே மாதிரியான நிலை உருவாவதை, வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நமக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான துறை சார்ந்த நடவடிக்கைகள் வேகமெடுத்திருப்பது, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என மத்திய அரசு சொல்லியிருப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது போன்ற பல காரணங்களால் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி கட்டுக்குள் இருக்கும் என நம்பப்படுகிறது.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash

இருப்பினும், தங்கத்தின் விலைப்போக்கு ஏற்றத்தில் இருப்பது, மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு விதமான கவலையை அதிகரித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும்போது, மற்ற முதலீடுகள் வீழ்ச்சியைச் சந்திக்க, பாதுகாப்பான முதலீடு என முதலீட்டாளர்கள் தேர்வு செய்தது தங்கத்தைத்தான்.

தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ததால், அதற்கான தேவை அதிகரித்து விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. 2020-ம் ஆண்டின் ஆகஸ்ட் 7-ம் தேதி , இதுவரை தங்கள் சந்தித்திராத விலை ஏற்றத்தைக் கண்டு, ஒரு கிராம் தங்கம் விலை 5,654 ரூபாய்க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் (8 கிராம்) 43,328 ரூபாய்க்கு வர்த்தகமானது.

தற்போது (23.04.2021) ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,502 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. கடந்த ஆண்டின் உச்சபட்ச விலையுடன் ஒப்பிடும்போது ரூ.1,152 குறைவுதான் என்றாலும், நடப்பு ஆண்டின் மார்ச் 12-ம் தேதியின் குறைந்தபட்ச விலையான 4,180 ரூபாயுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூ.322 அதிகரித்திருக்கிறது.

ஒரு பவுன் தங்கத்துக்கு ரூ.2,576 அதிகமாகியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.2,192 அதிகரித்திருக்கிறது. அதாவது, கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி ஒரு பவுன் ரூ.33,824-க்கு வர்த்தகமானது. இன்று ரூ.36,016-க்கு வர்த்தகமாகிறது. அப்படி பார்க்கும்போது, தங்கத்தின் விலையில் ஏற்றத்தின் போக்கு ஆரம்பித்திருப்பதாகவே தெரிகிறது.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி
`சர்வதேச சந்தையில் 17% வரை அதிகரித்த தங்கத்தின் விலை!’ - கிடுகிடு உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கத்தின் விலையில் இதே நிலை தொடருமா அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பதை தெரிந்துகொள்ள சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் பேசினோம்.

``கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. ஆபரணத் தங்கம் (8 கிராம்) ரூ.43,328 என்கிற உச்சபட்ச விலையைப் பதிவு செய்தது. அதன்பிறகு நிலைமை சீராக, படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து ரூ.4,180 வரை வந்தது. தற்போது மீண்டும் ஏறத் துவங்கியிருக்கிறது. படிப்படியான இந்த ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக, முதலீட்டாளர்களுக்கும் இதில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தேவை அதிகரிக்கும் போது, நிச்சயமாக மீண்டும் தங்கம் அதன் உட்சபட்ச விலையை அடையும். ஜூலை மாதத்திற்குள் மீண்டும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார் தெளிவாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு