சிறு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்துகிறீர்களா? நீங்கள் தயாரிக்கும் பொருள்களை மத்திய, மாநில அரசு நிறுவனங் களுக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, இதற்கான வழிமுறைகள் என்ன என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?

கவலையை விடுங்கள், மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் சார்பில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆன்லைன் வர்த்தக இணையதளமான கவர்ன்மென்ட் மார்க்கெட் பிளேஸில் (Government Electronic Marketplace - சுருக்கமாக, GEM) உங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டால் போதும், நீங்கள் அரசு நிறுவனங்களுக்கு எளிதில் பல்வேறு பொருள்களை விற்கலாம். தமிழகம் முழுக்க உள்ள விற்பனையாளர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, `ஜெம்’ மூலம் பல்வேறு பொருள்களை எப்படி விற்பனை செய்கிறார்கள் என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.
ஜெம் என்றால் என்ன?
`கவர்ன்மென்ட் இ-மார்க்கெட் ப்ளேஸ்’ (ஜெம்) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் இ-காமர்ஸ் போர்ட்டல் ஆகும். பல்வேறு அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங் களுக்குத் தேவையான நுகர்வோர் பொருள்கள் மற்றும் சேவைகளை எளிதாக ஆன்லைனில் கொள்முதல் செய்வதற்கு இது உதவுகிறது. இந்த `ஜெம்’ இணையதளம் வடிவமைக்கப்பட்டு 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகின்றன. மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங் களிடமிருந்தும் தங்களுக்குத் தேவையான ஆண்டு கொள்முதலில் 20 சதவிகிதத்தை சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் `ஜெம்’ இணையதளத்தில் வழிவகைகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தின் வாயிலாக நெசவாளர்கள் தங்களுடைய பொருள்களை அரசுத் துறைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
சந்தை வாய்ப்புகளை அணுகுவதில் சவால்களைச் சந்தித்துவரும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் துறையில் ஈடுபட்டு வரும் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், சிறு தொழில் முனைவோர், பழங்குடி மக்கள் ஆகியோர் இதனால் பயனடைந்து வருவதாகச் சொன்னார் `ஜெம்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் முரளிதரன். கடந்த ஆறு ஆண்டுகளில் `ஜெம்’ நிறுவனம் கடந்து வந்த பாதை, எதிர்காலத் திட்டங்கள், `ஜெம்’-மில் எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பாகவும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

`ஜெம்’-க்கு மாறிகிட்டுருக்காங்க...
இந்த நிகழ்ச்சியில் பேசிய செய்தி தகவல் துறை கூடுதல் இயக்குநர் அண்ணாதுரை, ``2016-ல் ஆரம்பித்த `ஜெம்’ இன்று வரை வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவரைக்கும் ஒரு லட்சம் பரிவர்த்தனை செய்து சாதனை செய்திருக்கோம். இன்னும் 4 லட்சம் பரிவரித்தனையில் இருக்கிறது. விற்பனையாளர்கள் நிறைய பேர் ஆர்வமாகத் தங்களை `ஜெம்’-மில் இணைத்துக்கொள்கிறார்கள். தனியார் ஆன்லைன் விற்பனைத்தளங்களுக்குப் போட்டியாக `ஜெம்’ இன்றைக்கு மாறியுள்ளது’’ என்றார்.
ரூ.1,000 கோடிக்கு விற்பனை நடந்திருக்கு...
அடுத்து பேசினார் விஜேயந்திர பாண்டியன் தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையர். ‘‘தமிழகத்தில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான விற்பனையாளர்கள் ‘ஜெம்’-ல் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 2016-லிருந்து இப்போது வரைக்கும் ரூ.1,000 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. `ஜெம்’ மூலமாக தமிழகத்தில் தயாரிக்கிற ஒரு பொருளை இந்தியா முழுக்க எளிதாக கொண்டுபோய் விற்க முடியும். உதாரணமாக, சானிட்டரி நாப்கின் மெஷின் கோயம்புத்தூரில் தயாரித்து இந்தியா முழுக்க விற்கலாம். `ஜெம்’ வந்ததால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. அரசு சார்பாக விற்பனையாளர்கிட்ட எதிர்பார்ப்பதெல்லாம் தரமான தயாரிப்புகள் மட்டுமே.

`ஜெம்’ல பத்தாயிரத்துக்கும் மேல் கேட்டகிரியில பொருள்கள் இருக்கின்றன. பொருள்களை வாங்க வர்றவங்களுக்கு நியாமான விலையில கிடைப்பதால், `ஜெம்’ இப்போது பரவலாக பேசப்படுகிறது. அரசாங்கம் இதில் தனிக்கவனம் செலுத்துவதால விற்பவர்கள், வாங்குபவர்கள் இரண்டு பேரும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வியாபாரம் செய்ய முடிகிறது. சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. அவர்கள் அனைவரும் `ஜெம்’-மில் பதிவு செய்யும்படி சொல்லி வருகிறோம். SC/ST பிரிவினருக்கு மட்டும் பதிவு செய்ய கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எல்லாம் அவர்கள் செய்யும் விற்பனைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
``10 நாள்ல பணம் வந்துடுது...’’
இந்தக் கூட்டத்தில் விற்பனையாளர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். கோவையைச் சேர்ந்த சுதாகர், ``ஜெம்-ல முதல் நாள் தொடங்கி வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம். இன்ஜினியரிங் புராடக்ட்ஸ் அதிகமாக சேல் பண்ணியிருக்கோம். முன்னாடிலாம் ஒரு டெண்டர் கிடைக்க கஷ்டமாக இருக்கும். அலைய விடுவாங்க சில பேரு. இப்போ `ஜெம்’ வந்த பிறகு ஈஸியா விக்க முடியும். டெண்டருக்கு அப்ளை பண்ணி ஒரு வாரம், பத்து நாள்ல டெண்டர் கிடைச்சிருது. பேமென்டும் பத்து நாள்ல வந்துதுடுது. இதனால வியாபாரிங்க எல்லாரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம்’’ என்றார்.

அடுத்து பேசிய ராகுல் ஜெயின், ``ஸ்டேஷனரி பொருள்களை `ஜெம்’ல விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம். 501 விதமான பொருள்களையும் 30,000 ஆர்டர்களும் `ஜெம்’ மூலமா எங்களுக்குக் கிடைச்சிருக்கு’’ என்றார்.
சிறு தொழில்முனைவோர்களே, அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களை இனி நீங்களும் விற்பனை செய்து, பல லட்சங்களை சம்பாதிக்கலாமே! இதற்கு உடனே `ஜெம்’-மில் உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!