குறையும் கடன் வளர்ச்சி, அதிகரிக்கும் டெபாசிட்... பின்னணி என்ன..? முக்கியமான காரணங்கள் என்ன?

E C O N O M Y
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிக்கை யின்படி 09.04.2021 அன்று இந்திய வங்கிகள் வழங்கிய வணிக ரீதியிலான கடன் தொகை அளவு (ரூ.108 லட்சம் கோடி), கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 5.1% அதிகரித்துள்ளது. அதே சமயம், வங்கிகள் பெற்றுள்ள மொத்த டெபாசிட் தொகை (ரூ.152 லட்சம் கோடி) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.9% அதிகரித்துள்ளது.
புதிய தொழில் முதலீடுகள் மற்றும் தனிநபர் நுகர்வுக்கான கடன்கள், ஏற்கெனவே வாங்கிய கடன் தொழில் விரிவாக்கத்துக்காக அதிகரிக்கப் படுவது, ஏற்கெனவே வாங்கிய கடனை உரிய நேரத்தில் திரும்பத் தர முடியாதவர்களின் கடன்களின் மறுசீரமைப்பு மற்றும் வாராக் கடன்களின் அதிகரிப்பு ஆகியவை வங்கிகளின் மொத்தக் கடன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. கடந்த சில ஆண்டு களாகவே, வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைவாகவே இருந்த போதிலும்கூட, இந்தியாவில் கடன் தொகை வளர்ச்சி குறைவாகவே இருப்பதன் பின்னணி என்ன..?
முதலீட்டுக்கு தயங்கும் நிறுவனங்கள்...
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்திலும்கூட, இந்தியப் பொருளாதாரம் சுமாரான வளர்ச்சியே கண்டுவந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வாராக் கடன் சிக்கல், அதிரடியான வரிவிதிப்பு (GST) கொள்கை மாற்றங் கள் போன்ற உள்நாட்டுக் காரணங் களும், சீன - அமெரிக்க வர்த்தகப் போர், அமெரிக்காவின் தன்னிச்சை யான வர்த்தகக் கட்டுப்பாடுகள், வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் எழுச்சி போன்ற பன்னாட்டுக் காரணங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொடர்ச்சியான குறைந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணங்களாக அமைந்துவிட்டன. குறிப்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், முதலீடுகளின் பங்கு குறைந்துவருவது மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளது.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங் களின் தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசு, வருவாய் வரிக் குறைப்பு, உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் (PLI) போன்ற பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், புதிய முதலீடுகளைப் பெருமளவில் மேற்கொள்ள இந்திய பெரு நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. தவிர, அதிகரிக்கும் வேலைவாய்ப் பின்மை மற்றும் பெருகிவரும் வருவாய் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் உள்நாட்டுத் தேவை எதிர்பார்த்த அளவு உயரவில்லை. மேலும், பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு வணிகச் சந்தையில் கடும் போட்டியை உருவாக்கி இருப்பதால், நம்மூர் தொழில் நிறுவனங் களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரவில்லை. எனவே, புதிய தொழில்துறை முதலீடுகளும் அவற்றுக்கு அடிப்படையான புதிய வங்கிக் கடன்களும் அதிகரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

நசிந்துபோன சிறு, குறு தொழில்கள்...
பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாக்கம் ஆகியவை இந்தியாவின் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களைப் பெரிதளவில் ஏற்கெனவே பாதித்திருந்தது. கொரோனா பொது முடக்கத்தின்போது, 78% சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக லோக்கல் சர்க்கிள் என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வே சொல்கிறது.
மத்திய அரசின் அவசரகால கடன் உதவித் திட்டத்தின்கீழ் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் சென்ற வருடத்தில் கடன் வாங்கின. அதனால் சென்ற வருட வங்கிக் கடன் அளவு இயல்பைவிட சற்றுக் கூடுதலாக அமைந்துவிட்டது. இந்த வருடம் இதுவரை எந்தவொரு சிறப்பு கடன் உதவித் திட்டமும் அறிவிக் கப்படாத நிலையில், சிறு குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் அளவும் அதிகரிக்கவில்லை.
வருமானம் குறைந்த நடுத்தர வர்க்கம்...
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற வாழ்வாதாரச் சிக்கல்களால் தட்டுத் தடுமாறிவந்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் மீது பேரிடியாக வந்து விழுந்தது கொரோனாப் பெருந்தொற்று. இந்தியப் பெருந்தொழில் அதிபர் கள் உலகப் பணக்காரர்களின் வரிசையில் முதன்மை பெற்ற அதே தருணத்தில், கோடிக்கணக் கான நடுத்தர வர்க்கத்தினர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
கொரோனா பொது முடக்கத் தின்போது, பல லட்சம் தொழிலாளிகள் வேலைவாய்ப்பை இழந்தததாக சி.எம்.ஐ.இ நிறுவனம் தெரிவித்திருந்தது. ஏற்கெனவே வாங்கிய கடன்களையே முழுமை யாகத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலையில், புதிய கடன் களுக்காக வங்கிகளை மீண்டும் அணுக முடியாத சூழ்நிலையும் சாமான்யர்களின் கடன் மனப் போக்கை மாற்றியமைத்துள்ளது. தற்போதும்கூட, முதலீடு மற்றும் நுகர்வு முடிவுகளைத் தள்ளிப் போடும் நிலையில்தான் பெருவாரியான மக்கள் உள்ளனர். வருங்காலம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாகவும், ரியல் எஸ்டேட், தங்கம், பங்கு சந்தை போன்ற முதலீடுகளில் உள்ள அபாயங்கள் குறித்த அதிகப்படியான அச்சங்கள் காரணமாகவும், நடுத்தர வர்க்கத்தினர் வங்கி டெபாசிட்டுகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடன் ரிஸ்க் அதிகரிப்பு...
வருங்காலம் குறித்த நிச்சயமின்மையின் விளைவாக பயனாளிகள் தரப்பிலிருந்து கடன் வாங்குவதற்கு தயக்கம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் வங்கிகள் தரப்பிலிருந்து கடன் வழங்குவதில் உள்ள அபாயங்கள் குறித்த அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரண மாக எதிர்பார்த்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதார மீட்சி இருக்காது என்ற கவலை அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில், அதிகப்படியான வாராக்கடன் உருவாக்கம் குறித்த அச்சம் வங்கிகள் மத்தியில் உள்ளதாலும், கடன் அளவு பெருமளவில் அதிகரிக்கவில்லை.
மிரட்டும் கொரோனா சுனாமி...
இந்தியாவை தற்போது மிகக் கடுமையாகத் தாக்கியுள்ள கொரோனாவின் இரண்டாவது அலை சாதாரண மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையுமே கேள்விக் குறியாகியுள்ளது. இந்தியா முழுமைக்குமான பொதுமுடக்கம் இந்த முறை இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்துடன் வங்கிகளின் கடன் அளவையும் கடுமையாகப் பாதிக்கும். ‘V’ வடிவ பொருளாதார மீட்சி வரும் என்ற பலரது எதிர்பார்ப்பை கொரோனா இரண்டாவது அலை கேள்விக்குறியாக்கி யுள்ளது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்கக்கூடிய துரிதமான பொருளாதார மீட்சி நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, வரும் காலத்தில் கடன் வளர்ச்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!
ஜி.டி.பி வளர்ச்சி குறையும்!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக, நம் நாட்டின் ஜி.டி.பி குறையும் எனவும் இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 9.6 சதவிகிதமாக இருக்கும் என ஐ.ஹெச்.எஸ் மார்க்கிட் நிறுவனம் கணித்துள்ளது. பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ், ஜெஃப்ரீஸ், நொமுரா, கேர் ரேட்டிங்ஸ், இக்ரா ஆகிய ரேட்டிங் நிறுவனங்களும் நம் நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி முன்பு கணித்திருந்ததைவிட 1 - 2% குறைத்துள்ளது. ஆனால், ஏ.டி.பி நிறுவனம் நமது ஜி.டி.பி வளர்ச்சியானது 11 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. எஸ் அண்ட் பி நிறுவனமும், நமது ஜி.டி.பி வளர்ச்சி கொஞ்சம் குறையவே செய்யும் என்று சொல்லியிருக்கிறது!