Published:Updated:

‘‘ஒரு லட்சம் கொடுங்க... அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’ பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

ஜி.எஸ்.டி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி.எல்

மோசடி

‘‘ஒரு லட்சம் கொடுங்க... அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’ பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

மோசடி

Published:Updated:
ஜி.எஸ்.டி.எல்
பிரீமியம் ஸ்டோரி
ஜி.எஸ்.டி.எல்

தமிழ்நாட்டில் ஊர் ஊருக்கு மோசடி முதலீட்டுத் திட்டங்கள் வெகு ஜோராக நடந்துகொண்டு வருகின்றன. வேலூர் ஐ.எஃப்.எஸ், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் ‘பிரைட் வே’ ஆகிய நிறுவனங்களின் மோசடித் திட்டங்கள் குறித்து கடந்த வாரங்களில் கட்டுரைகள் வெளியிட்டு வாசகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தியது நாணயம் விகடன்.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூரைச் சேர்ந்த ‘ஜி.எஸ்.டி.எல்’ (GSDL) என்கிற நிறுவனம், ‘மாதம்தோறும் 16% வருமானம் தருவதாகச் சொல்லி மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துக்கொண்டிருக் கிறது’ என்கிற தகவல் நம் காதுக்கு வரவே, களமிறங்கி விசாரிக்க ஆரம்பித்தோம்.

‘‘ஒரு லட்சம் கொடுங்க... 
அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’
பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

அஞ்சே மாதத்தில் டபுள்...

பெரம்பலூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு செயல் பட்டுவரும் ‘ஜி.எஸ்.டி.எல்’ (ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட்) நிறுவனம். “காட்டுக்கும் போக வேண் டாம்... தொழிலுக்கும் போக வேண்டாம்..! ரூ.1 லட்சம் கொடுத்தால் அஞ்சே மாதத் தில் டபுளாகக் கிடைக்கும்” என்று சொன்னதை நம்பி, தொழுதூரைச் சுற்றியுள்ள வி.களத்தூர், பெரம்பலூர், லப்பைக் குடிகாடு, மங்களூர், சிறுபாக்கம், திட்டக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்களில் பலரும் கையில் இருந்த பணம் மட்டு மல்லாது, கடனை வாங்கி, தங்க நகையை அடகு வைத்து, நிலத்தைக்கூட அடமானம் வைத்து பணம் கட்டி வருகிறார்களாம்.

இந்த நிறுவனத்தில் பணம் போட விரும்புவதாகச் சொல்லிக்கொண்டு அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நுழைந்தோம். அங்குள்ள ஏஜென்ட் ஒருவரிடம் பேச்சு கொடுத்தோம்.

‘‘எங்க கம்பெனியில நீங்க ஒரு லட்சம் போட்டா அஞ்சே மாசத்துல நீங்க போட்ட பணம் டபிள் ஆயிடும். அதாவது, மாசம் 20% வருமானம் கிடைக்கும். இடையில நிறைய வருமானம் கொடுக்க வேணாம்னு மாசா மாசம் 16% தர ஆரம்பிச்சோம். இப்ப அதை 10%-ஆகக் குறைக்கலாமான்னு ஒரு பேச்சு ஓடுகிட்டு இருக்கு. மாசம் 10 பர்சன்ட்ன்னாலும் ஒரே வருஷத்துல டபிள் ஆயிடும்’’ என்று அவர் நமக்குத் தூண்டில் போட்டார்.

‘‘சூப்பர், இந்தளவுக்கு லாபம் உங்களால எப்படி தர முடியுது’’ என்று வெள்ளந்தியாகக் கேட்டோம்.

‘‘ஃபாரெக்ஸ் டிரேடிங்தான். டாலர், யூரோன்னும் எல்லா கரன்சியிலும் நாங்க டிரேடிங் பண்ணி, மாசம் 40% லாபம் சம்பாதிப்போம். அதுல இருந்து 20% பணத் தைத் தர்றதுக்கு எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்ல’’ என்றவர், ‘‘சரி, நீங்க எவ்வளவு பணம் கட்டப் போறீங்க?’’ என்று நம்மைக் கேட்டார்.

‘‘ஸ்கீமைப் பத்தி மொதல்ல தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம். பணம் ரெடியானதும் உங்களைத் தேடி வர்றோம்’’ என்று நாம் இழுக்க, டென்ஷன் ஆனார் அந்த ஏஜென்ட்.

‘‘உங்க ரியாக்‌ஷனைப் பார்த்தா, நீங்க பணம் போடவந்த மாதிரி தெரியல. வேவு பார்க்க வந்த மாதிரில்ல தெரியுது. யார் சொல்லி நீங்க இங்க வந்தீங்க’’ என்று அவர் நம்மைப் பார்த்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, நாம் ஒருவரின் பெயரைச் சொல்ல, அடுத்த நிமிடம் அவருக்கு போன் போனது. அந்த நபரோ, ‘‘நான் யாரையும் அனுப்பலையே’’ என்று சொல்ல, நம்மை ஏற இறங்கப் பார்த்தார் அந்த ஏஜென்ட். ‘‘அவரு மறந்துட்டார் போல. பணத்தோட உங்களை வந்து பார்க்குறோம்’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து ‘எஸ்கேப்’ஆகி வெளியே வந்தோம்.

‘‘ஒரு லட்சம் கொடுங்க... 
அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’
பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

அதிர்ச்சி தந்த தகவல்கள்...

இந்த ஜி.எஸ்.டி.எல் நிறுவனம் குறித்து விசாரிக்க ஆரம்பித்தோம். இந்த நிறுவனம் பற்றி எங்களுக்குத் தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

இந்த நிறுவனத்தின் வெப்சைட்டுக்குள் (http://gsdlnidhiltd.com/contact_us.html) நுழைந்து பார்த்தால், சிறு சேமிப்பு, சிறுதொழில் கடன் போன்றவற்றை செய்வதாகச் சொல்கிறது. இதை எல்லாம் செய்வதற்கு மக்களிடம் இருந்து ஏன் பணம் வாங்க வேண்டும், அப்படியே வாங்கினாலும் மாதம்தோறும் 10% என்கிற அளவுக்கு எப்படி லாபம் தர முடியும், இந்த நிறுவனம் உள்ளபடி என்னதான் செய்கிறது என்று தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தோம்.

இந்த நிறுவனம் மக்களிடம் இருந்து வாங்கும் பணத்தைக் கொண்டு ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல்லப்படுகிறது. துபாயில் இருக்கும் ‘ஆரா’ (Aura) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். ‘‘அதெல்லாம் கிடையாது. இந்த நிறுவனத்துக்கும் துபாயில் இருக்கும் ‘ஆரா’-வுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. பணம் போடுகிறவர்களை ஏமாற்ற இப்படி எதையோ சொல்கிறார்கள்’’ என்கிறார்கள் இன்னும் சிலர்.

டப்பா டிரேடிங்...

இந்த நிறுவனம் ‘டப்பா டிரேடிங்’ செய்து வருவதாகச் சொல்கிறார்கள். அது என்ன டப்பா டிரேடிங்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி எதையும் கட்டாமல் தவிர்க்க பில் இல்லாமல் பொருள் வாங்குகிற மாதிரிதான் செய்வதுதான் இந்த டப்பா டிரேடிங். அரசு அங்கீகாரம் பெற்ற எக்ஸ்சேஞ்சுகளில் ஷேர்களை வாங்க வேண்டும், கமாடிட்டி டிரேடிங் செய்ய வேண்டும், ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்ய வேண்டும் எனில், அரசுக்குரிய அனைத்து வரிகளையும் கட்டித்தான் வாங்க/விற்க முடியும். ஆனால், டப்பா டிரேடிங்கில் வரி, எக்ஸ்சேஞ்சுக்குரிய கட்டணம் எதையும் கட்டாமலே ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்யலாம். அதைத்தான் இந்த நிறுவனம் செய்கிறது’’ என்றார்கள் விவரம் தெரிந்த சிலர்.

‘‘ஆனால், மக்களிடம் இருந்து வாங்கும் பணத்துக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் சரியாகக் கணக்கு காட்டப்படுகிறதே’’ என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம்.

‘‘இது மாதிரியான போலி யான சாஃப்ட்வேர் தருவதற்கு எத்தனையோ நிறுவனங்கள் உள்ளன. நீங்கள் பணம் தருவது, லாபம் மூலம் கிடைக்கும் பணம் அதில் சேர்வது, குறைவது என எல்லாக் கணக் கையும் சாஃப்ட்வேர் மூலம் எப்படி வேண்டுமானாலும் காட்டலாம். இந்தக் கணக்கு எல்லாம் உண்மை கிடையாது’’ என விளக்குகிறார்கள்.

‘‘ஒரு லட்சம் கொடுங்க... 
அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’
பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

கோடிக்கணக்கில் பணம்...

இந்த நிறுவனம் சொல்வதை நம்பி லப்பைக்குடிக்காட்டில் மட்டும் ரூ.100 கோடியும், வி.களத்தூரில் ரூ.100 கோடியும் மங்களூரில் ரூ.50 கோடியும், சிறுபாக்கத்தில் ரூ.50 கோடியும் மக்கள் பணம் போட்டிருப்ப தாகச் சொல்கிறார்கள். சில ஊர்களில் உள்ள வங்கிகளில் தங்க நகைக் கடன் வாங்கக் கூட்டம் அலைமோதக் காரணம், கையில் இருக்கும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, இதில் பணம் போடுவதற்குத்தான் என்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் மக்கள் கட்டும் பணத்துக்கு ‘Maxpro’ என்கிற நிறுவனத்தின் பெயரில் ரூ.1 ஸ்டாம்ப் ஒட்டி ஒரு ரசீது தருகிறார்கள். இந்த நிறுவனத்தில் பணம் கட்டி யிருக்கிறோம் என்பதற்கு மக்களுக்கு அளிக்கப்படும் ஒரே அத்தாட்சி இது மட்டும் தான்.

கூட்டு முதலீட்டுத் திட்டம்...

இந்த நிறுவனம் மக்களிடம் பணம் வசூலித்து ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்வதாகச் சொல் கிறது. இது, கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் (Collective Investment scheme) கீழ் வருகிறது. இந்தத் திட்டத்தை நடத்த வேண்டும் எனில், இந்த நிறுவனம் ‘செபி’யிடம் அனுமதி எதுவும் வாங்க வேண்டும். அப்படி எந்த அனுமதியையும் இந்த நிறுவனம் வாங்கிய மாதிரி தெரியவில்லை.

ரூ.5 லட்சம் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கி நடத்தப்பட்டு வருவதாக வர்த்தக விவகாரத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.என் நம்பர்கூட வாங்காமல் இந்த நிறுவனம் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

புதிதாக முதலீடு செய்யும் நபர்களை இந்த நிறுவனத் துக்கு அறிமுகம் செய்யும் உறுப்பினர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை கமிஷனாகத் தருகிறார்கள். இதனால், பலரும் புது உறுப்பினர்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று கூடுதல் தகவல்களையும் தந்தார்கள்.

இந்த நிறுவனத்தில் பணம் கட்டியவர்களுக்கு மாதத்துக்கு ஒருமுறை லாபத் தொகையை நேரடியாக சந்தித்துத் தந்துவிடுவதால், மக்கள் இந்த நிறுவனத்தின் புகார் எதையும் தராமல் இருக்கிறார்கள். தவிர, இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததே காவல் துறையைச் சார்ந்த ஒரு முன்னாள் உயரதிகாரிதான் என்கிறார்கள். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து காவல்துறை கண்டுகொண்ட மாதிரி தெரிய வில்லை. பிரச்னை முற்றிய பின்புதான் வழக்கம்போல காவல்துறை வருமோ என்னவோ!

‘‘ஒரு லட்சம் கொடுங்க... 
அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க...’’
பெரம்பலூரில் கொட்டுது ‘பணமழை!’

‘‘யாரிடமும் நாங்கள் நிதியைத் திரட்டவில்லை...’’

சரி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களுடைய இணையதளத்தில் இருக்கும் மொபைல் எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘யோகேஷ்’’ என்று தன் பெயரை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் நம்மிடம் பேசினார். அக்கவுன்ட்ஸ் துறையில் வேலை பார்க்கும் ஊழியர் அவர்.

‘‘ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்து அதிக லாபம் தருவ தாகக் கூறி மக்களிடம் நீங்கள் நிதி திரட்டுவதாகப் புகார்கள் வருகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன?’’ என்று கேட்டோம்.

“அப்படியெல்லாம் நாங்கள் யாரிடமும் நிதி திரட்டவே இல்லை. எங்களுடையது வங்கி சார்ந்த சேவைகள் தரும் நிறுவனம் மட்டுமே. சேமிப்பு, டெபாசிட், குறுங்கடன் போன்ற சேவைகள் மட்டுமே வழங்கி வருகிறோம். நீங்கள் கூறுவதுபோல எந்த டிரேடிங்கும் இங்கு நடப்பதில்லை. யாரிடமும் நாங்கள் நிதியைத் திரட்டவும் இல்லை” என்றார்.

‘`உங்களுடைய நிறுவனத்தை நடத்தத் தேவையான அனுமதியை யாரிடம் பெற்றிருக்கிறீர்கள், எங்கு பதிவு செய்திருக்கிறீர்கள்?’’ என்றெல்லாம் கேட்டதும், ‘‘அந்த விவரங்களெல்லாம் எங்கள் சாரிடம்தான் கேட்க வேண்டும். நான் சாதாரண ஊழியன்’’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார். இதை அடுத்து, அவர்களுடைய இணையதளத்திலிருக்கும் மெயில் முகவரிக்கு (agmk7moorthy@gmail.com) கீழ்க்கண்ட கேள்விகளை அனுப்பி, பதிலளிக்கக் கோரினோம்.

நாங்கள் கேட்ட கேள்விகள்...

1. சிறுசேமிப்பு, குறுங்கடன் ஆகியவற்றைத் தருவதாகச் சொல்கிறீர்கள்; இந்தத் தொழிலை நீங்கள் செய்கிறபட்சத்தில் மக்களிடம் இருந்து நிதி திரட்டுவது ஏன்? 2. உங்கள் நிறுவனத்தில் மக்கள் செய்யும் முதலீட்டு பணத்துக்கு மாதம்தோறும் 10% - 20% வரை நீங்கள் லாபம் தருவதாகவும் சொல்லப்படுவது உண்மையா?3. நீங்கள் வங்கிச் சேவையில் மட்டும்தான் ஈடுபடுகிறீர்களா, வங்கிச் சேவையில் ஈடுபட அரசிடம் அனுமதி பெற்றிருக்கிறீர்களா, அனுமதி வாங்கியதற்கான ஆவணங்களை எங்களுக்குத் தரமுடியுமா? 4. நீங்கள் ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் ஈடுபடுகிறீர்களா, அப்படிச் செய்ய எந்த கண்காணிப்பு அமைப்பிடம் (Regulators) நீங்கள் அனுமதி வாங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் ஃபாரெக்ஸ் டிரேடிங் செய்து லாபம் ஈட்டியதற்கான டிரான் ஸாக்‌ஷன் கணக்குகளை எங்களுக்குத் தரமுடியுமா? 5. உங்கள் நிறுவனத்துக்கும் வெளிநாட்டில் உள்ள ஆரா ஃபைனான்ஸிங் புரோக்கர் (Aura - Financing Broker) நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு? 6. மக்களிடம் இருந்து பணம் வாங்கி லாபம் தரும் திட்டங்களை நடத்த ‘செபி’ அமைப்பிடம் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா, அந்த அனுமதியைக் காட்ட முடியுமா?

இந்த ஆறு கேள்விகளுக்கும் ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப் பினோம். ‘‘சில நிமிஷங்களில் உங்களுக்கு பதில் தருகிறோம்’’ என்று மட்டும் பதில் வந்ததே தவிர, நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கப்பட வில்லை. எந்த ஆதாரத்தையும் அளிக்கவும் இல்லை. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.எஸ்.டி.எல் நிறுவனம் பதில் தரும் பட்சத்தில், அவற்றையும் பதிவிடத் தயாராகவே இருக்கிறோம்.

உஷார் மக்களே உஷார்!

மக்களே, அதீத வருமானத்தைத் தருவோம் என எந்த நிறுவனம் சொன்னாலும், அதை நம்பாதீர்கள். அந்த நிறுவனம் பற்றியும், உங்களுடைய சந்தேகங்களையும் navdesk@vikatan.com என்கிற எங்கள் இ-மெயில் முகவரிக்கு உடனே எழுதி அனுப்பி வையுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்காமல் இருப்பது உங்கள் கடமை. பேராசை பெரு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மட்டும் மறக்காதீர்கள்!