பிரீமியம் ஸ்டோரி

இன்றைக்கு 30 வயதான இளைஞர் களிடம் ‘உங்கள் எதிர்கால இலக்கு என்ன’ என்று கேட்டால், ‘45 வயதில் ஓய்வுபெற வேண்டும்’ என்றுதான் சொல்கிறார்கள். ‘Financial Independence and Retire Early’ (சுருக்கமாக FIRE) என்கிற சிந்தனை அவர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. 45 வயது என்பதே இளம் வயதுதான். இந்த வயதிலேயே பணி ஓய்வு பெற சேமிப்பு, முதலீடு மற்றும் நிதிப் பழக்கங்களில் நிறைய விடாமுயற்சி, நுட்பமான அறிவு மற்றும் அர்ப்பணிப்பு அவசியம் தேவை. 25 வயது முதற்கொண்டே நீங்கள் சில அம்சங்களைத் தவறாமல் கடைப்பிடித்தால்தான், இந்த FIRE-ஐ உங்களால் நிச்சயம் அடைய முடியும்.

சதீஷ்குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
சதீஷ்குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

1. நிதிக் கட்டுபாடு கட்டாயம்

இளம் வயதில் முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிடுபவர்கள் சம்பளம் அல்லது வருமானத்தை அதிகரித்தல், வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் செலவுகளைக் குறைத்தல் போன்ற விஷயங்களில் விடா முயற்சியுடன் திட்டமிட்ட பாதையில் தொடர வேண்டும். எதிர்காலத்தைத் திட்டமிடும் போது, செலவுகளின்மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் நிகர சொத்து மதிப்பு உங்களுக்குத் தெரிய வேண்டும். மேலும், ஆண்டுக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். அதன்படி செயல்படும் பட்சத்தில், முன்கூட்டியே பணி ஓய்வு பெறுவ துடன் நிதிச் சுதந்திரத்தையும் நிச்சயம் அடைய முடியும்.

45 வயதில் ஓய்வு பெற உதவும்
நான்கு அம்சங்கள்..!

2. குடும்பச் செலவுகளைக் குறைக்க வேண்டும்

குடும்பச் செலவுகளை முடிந்தவரைக்கும் குறைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது உங்களிடம் அதிக பணம் சேர்ந்து, அது நிதி சார்ந்த முதலீடாக மாறும். அப்போது பல்வேறு சொத்துப் பிரிவுகளில் முதலீடு செய்ய முடியும்.

அடுத்து, ஆடம்பரமான பெரிய வீடுகளில் அதிக பணத்தை முடக்கக் கூடாது. போதிய வசதி உள்ள அடக்கமான வீட்டில் வசிப்பது அவசியம். அடுத்தவர்கள் நம்மை மதிக்க வேண்டும் எனப் பெரிய பங்களா வீடு கட்டினால் அல்லது வாங்கினால் உங்கள் பணம் அதில் முடங்கிவிடும். இப்போதெல்லாம் வீட்டு வாடகை வருமானம் என்பது சொத்து மதிப்பில் சுமார் 3% அளவுக்குத்தான் இருக்கிறது. எனவே, வீடு வாங்கி வாடகைக்கு விட்டு வருமானம் சம்பாதிப்பது, அதுவும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி வாடகைக்கு விடுவது லாபகரமான விஷயமில்லை. வீட்டுக் கடனுக்குக் கட்டும் மாதத் தவணையை நீண்ட கால நோக்கில் நல்ல பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வந்தால், அதுவே நீங்கள் முன்கூட்டியே பணி ஓய்வு பெறத் தேவையான தொகுப்பு நிதியைச் சேர்த்துக் கொடுத்துவிடும்.

3. சம்பளம் / வருமானத்தை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் தேவை

45 வயதிலேயே ஓய்வுபெறத் திட்ட செலவைக் குறைத்து, சேமிப்பை அதிகரித்தால் மட்டும் போதாது. உங்களின் சம்பளம்/ வருமானத்தை அதிகரிப்பது மிக முக்கியம். சம்பளம் அதிகரிக்கும்போது லைஃப் ஸ்டைலை உயர்த்த செலவை அதிகரிப்பதற்குப் பதில், முதலீட்டை அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு 20% - 30% என ஒதுக்கியிருந்தால், அதை சம்பளம் / வருமானம் அதிகரிக்க அதிகரிக்க 40% - 50% என அதிகரித்து வர வேண்டும். இந்த சதவிகிதம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு விரைவாக ஓய்வு பெற முடியும்.

4. வேலை, முதலீட்டில் ரிஸ்க் எடுப்பது அவசியம்

பலர், வேலை / தொழில் மற்றும் முதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் இருக்கிறார்கள். இது போன்றவர்களால் சரியான வயதில் ஓய்வு பெற்றாலும் அவர்களிடம் போதிய தொகுப்பு நிதி இருக்காது. சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தும், கார் ஓட்டும்போது ஷீட் பெல்ட் அணிந்தும் ரிஸ்க்கைக் குறைக்கிறோம். அதே போல், முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க பல வழிகள் உள்ளன. இளம் வயது முதலே முதலீடு செய்து வருவது, முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்துச் செய்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு