பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஆப் மூலம் கடன்... உஷார் மக்களே உஷார்..!

ஆப் மூலம் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப் மூலம் கடன்

லோன் எச்சரிக்கை

தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அவசரத் தேவைக்காக லோன் வழங்கும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகக் கடன் பெற்றிருக்கிறார். கொரோனா நெருக்கடிகள் காரணமாக சரியான நேரத்துக்கு அவரால் கடனைத் திரும்பச் செலுத்த முடிய வில்லை. ஒவ்வொரு நாளுக்கும் வட்டி என்கிற கணக்கில் கடன் தொகையைவிடவும் வட்டி அதிகமாகிக்கொண்டே செல்ல, அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த நிலையில், பணத்தைக் கட்டும்படி மிரட்டும் தொனியில் அவருக்கு மெசேஜ்கள் வந்திருக்கின்றன. அதற்கடுத்த சில நாள்களில் அவருடைய பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு, ‘இந்த நபர் 15 வயது பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுத் தப்பிவிட்டார். இவரைப் பார்த்தால், கீழே தரப்பட்டுள்ள குற்றப்பிரிவு எண்ணுக்குத் தெரிவியுங்கள்’ என அவரது தொடர்புப் பட்டியலில் உள்ள அனைவருக்கும் மெசேஜ் வர, மனிதர் நொந்துபோனார். நன்கு யோசித்துப் பார்த்தபோதுதான் இது லோன் அப்ளிகேஷன்காரர்கள் செய்த வேலை என்று புரிந்தது.

ஆப் மூலம் கடன்... உஷார் மக்களே உஷார்..!

இது ஓர் உதாரணம்தான். லோன் அப்ளி கேஷன் மூலமாகக் கடன் பெற்று உளவியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகம். கடனைத் திரும்பப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிற இது போன்ற லோன் அப்ளிகேஷன்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

சட்டத்துக்குப் புறம்பாக இது போன்ற அத்து மீறலில் ஈடுபடும் லோன் அப்ளிகேஷன்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.நாகஜோதியிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது...

“பணம் உள்ளவர்கள் உடனடியாகக் கடன் கிடைக்கிறதே என லோன் தரும் அப்ளி கேஷன்களை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் தரவிறக்குகின்றனர். தொடர்பு எண் பட்டியல், புகைப்படங்கள் என நமது டேட்டாக்களுக்கான அக்சஸைக் கொடுத்தால்தான் இன்ஸ்டால் செய்ய முடியும் என்பது போல் அந்த அப்ளி கேஷன்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன்பின்விளைவுகளை அறியாதவர்களும் அதற்கான அக்சஸைத் தந்துவிட்டு கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கும் தொகையில் இருந்து 30% பணத்தை பிராசஸிங் ஃபீஸ் எனக் கூறி பிடித்தம் செய்துகொண்டு மிச்சத்தை தான் தருகிறார்கள். முழுப் பணத்தையும் ஏழு நாள்களுக்குள் திரும்பச் செலுத்தும்படி அவகாசம் தரப்படுகிறது.

அந்த அவகாசம் முடிந்து கடன் தொகை யைத் திரும்பச் செலுத்தாவிட்டால், நாளொன்றுக்கு ரூ.200 - ரூ.500 வரை கடன் தொகைக்கேற்ப வட்டி விதிக்கின்றனர். பணத்தைக் கட்டுமாறு முதலில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கிறார்கள். அதன் பிறகு, கடன் பெற்ற நபரின் தொடர்புப்பட்டியலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கடன் வாங்கிய நபரைப் பற்றி தவறாகச் சித்திரித்து மெசேஜ் அனுப்புகின்றனர். இதுவே கடன் வாங்கியவர் பெண் எனில், அவரது கேலரியில் உள்ள புகைப்படங்களை தவறாகச் சித்திரித்துப் பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு பயந்தே கொள்ளை வட்டி என்றாலும், பலரும் பணத்தைக் கட்டிவிடுகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுபோன்று லோன் அப்ளிகேஷன் மூலம் கடன் தந்து தொந்தரவு செய்த கும்பலைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்தோம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து லோன் அப்ளி கேஷன்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டோம். தற்போது மீண்டும் இந்த அப்ளி கேஷன்கள் செயல் படத் தொடங்கியிருக் கின்றன. நாங்கள் இதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். முதலில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்குவதை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. இணைய வழியில் நடத்தப்படும் கந்து வட்டித் தொழில்தான் இது. எனவே, மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். லோன் அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி விதிக்கப்பட்டு அதைச் செலுத்தக் கூறி, உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.

“இணையவெளியில் நமது டேட்டாக்கள் திருடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், நாம்தான் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்” என்கிறார் சாஃப்ட்வேர் டெவலப்பர் சர்வேஷ்.

“லோன் அப்ளிகேஷன்கள் எளிதில் அனைவரையும் ஈர்க்கும்படியாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இருந்தாலே போதும். உடனடியாகக் கடன் கிடைக்கும் என்கிறபோது பணத்தேவை உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தி கடன் பெறுகின்றனர். லோன் அப்ளிகேஷன் மட்டுமல்ல, எந்த அப்ளிகேஷனாக இருந்தாலும் இன்ஸ்டால் செய்யும்போது தொடர்பு எண் பட்டியல், புகைப்படங்கள், ஆடியோ, லொகேஷன் போன்ற வற்றின் அக்சஸ்க்கான அனுமதி கேட்கும். கண்மூடித்தனமாக நாம் எல்லாவற்றுக்கும் அனுமதி தந்துவிடக் கூடாது. இதற்கும் நமது பயன்பாட்டுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்த பிறகே, அதை அனுமதிக்க வேண்டும்.

ஆப் மூலம் கடன்... உஷார் மக்களே உஷார்..!

லோன் அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றைக் கேட்பதற்கான தேவை இருக்கிறது. ஆனால், நமது மொபைலில் உள்ள தொடர்பு எண் மற்றும் புகைப்படங்களுக்கான அக்சஸ் கேட் பதற்கான தேவை இல்லை. எனவே, அந்த அனுமதியைத் தரக்கூடாது. இப்படித்தான் நமது டேட் டாக்களை அவர்கள் திருடிக்கொண்டு, தக்க சமயத்தில் அதை வைத்தே நம்மை மிரட்டு கின்றனர். கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை உளவியல் ரீதியாக எப்படியெல்லாம் துன்புறுத்த முடியுமோ, அப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள். வாட்ஸ் அப்பில் வெரிஃபிகேசன் பெற்ற பிசினஸ் அக்கவுன்டில் இருந்துகூட இது போன்ற மிரட்டல் மெசேஜ்கள் அனுப்பப் படுகின்றன.

கடன் பெற்றவர்களின் வயது மற்றும் பாலினத்துக்கேற்ப அவர் களைத் துன்புறுத்தும் விதமும் மாறுபடும். உன் டேட்டாக்கள் என்னிடம் இருக்கின்றன. ‘‘கடனைச் செலுத்தாவிட்டால் நீ இன்னும் அனுபவிப்பாய்’’ என்பதை அவர்கள் உணர்த்தி விடுகிறார்கள். அந்த பயம்தான் அந்தத் தொழிலுக்கான மூல தனமாக இருக்கிறது. இணைய வெளியில் நமது டேட்டாக்கள் பாதுகாப்பாக இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இது போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது’’ என்கிறார் சர்வேஷ்.

கடன் வாங்கும் மக்களே... இனி ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கும்போது உஷாராக இருங்கள்!