தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கனவு காரை கரெக்ட்டா வாங்க கைகொடுக்கும் காசுக் கணக்கு!

நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் திட்டம்

நிதித் திட்டம்

நம்மவர்களில் பலருக்கு சொந்த வீடு போல், சொந்த கார் கனவும் இருக்கிறது. அந்த காரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

கார் வாங்கும் முன் ஒருவர் தனக்குத்தானே கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன?

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

* கார் வாங்க எவ்வளவு பணம் தேவை?

* புது கார் வாங்கப் போகிறோமா?

* பயன்படுத்தப்பட்ட காரை வாங்கப் போகிறோமா?

* ரொக்கப் பணம் கொடுத்து வாங்கப் போகிறோமா?

* கடனில் வாங்கப்போகிறோமா?

* கார் வாங்க எவ்வளவு முன்பணம் சேமித்து வைத்திருக்கிறோம்?

* அலுவலகம் செல்ல கார் வாங்கப் போகிறோமா?

* வார இறுதியில் அருகிலுள்ள இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர கார் வாங்கப் போகிறோமா?

* குடும்பத்துடன் நீண்ட தொலைவில் இருக்கும் சொந்த ஊர், கோயில், சுற்றுலா ஸ்தலங்களுக்குப் பயணம் செய்ய வாங்கப் போகிறோமா?

கனவு காரை கரெக்ட்டா வாங்க
கைகொடுக்கும் காசுக் கணக்கு!

கார் வாங்க பட்ஜெட் போடுங்கள்...

முதலில், உங்கள் தேவை மற்றும் நிதி வசதியைப் பொறுத்து காரின் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள். காரின் பட்ஜெட், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு அம்சங்கள், பெட்ரோல் காரா, டீசல் காரா, எரிவாயு காரா என்பதைப் பொறுத்து அமையும்.

அடுத்து, புது காரா, பழைய காரா என்பதைக் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து பேசி முடிவு எடுங்கள்.

சிலர், காரை சொத்து மற்றும் முதலீடாக நினைக்கிறார்கள். அது தவறாகும். காரின் மதிப்பு மிக வேகமாகக் குறையத் தொடங்கும். அதை ஒரு தேயும் சொத்து எனக் குறிப்பிடலாம். முதல் மூன்று ஆண்டுகளில் தேய்மானம் மிக அதிகமாக இருக்கும்.

புது கார் Vs பழைய கார்...

புது காராக இருந்தால், நவீன தொழில்நுட்பம் மற்றும் சமீபத்திய சிறப்பு அம்சங்கள் என பிராண்ட் நியூவாக இருக்கும். பாதக அம்சம், என்கிறபோது பழைய காரைவிட விலை அதிகமாக, அதிக கடன் சுமையாக இருக்கும்.

பழைய கார் எனில், விலை குறைவாக, வாங்கக் கூடிய விலையில் இருக்கும்; பதிவுக் கட்டணங்கள், இதர கட்டணங்கள் இருக்காது; கடன் வாங்காமல் சுலபமாக வாங்க முடியும். குறைவான காப்பீட்டு பிரீமியம், குறைவான தேய்மானம், அதிக மறு விற்பனை விலை, அதிக சேமிப்பு என்பது சாதக மான அம்சங்களாகும்.

பாதகமான அம்சம் என்னவெனில், பயன் படுத்தப்பட்ட காரில் பழைய தொழில்நுட்பம், பழுது பார்க்கும் செலவு அதிகம், அதிக பராமரிப்பு, சட்டரீதியான பிரச்னைகள் (பழைய உரிமையாளர் யார், கார் ஏதாவது விபத்தில் சிக்கியிருக்கிறதா என்கிற விவரங் கள்) போன்றவை ஆகும்.

காரை ஒருவர் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்போகிறார் எனில், அவர் ‘செகண்ட் ஹாண்ட்’ கார் எனப்படும் ஏற்கெனவே பயன் படுத்தப்பட்ட காரை வாங்குவது நல்லது. இதுவே நான்கு ஆண்டு களுக்கு மேல் பயன்படுத்துவார் எனில், புது கார் வாங்குவது சரியாக இருக்கும்.

கார் வாங்குவதற்கான பட்ஜெட் குறைவாக இருந்தால், பழைய கார் வாங்குவது நல்லது. அதிக பட்ஜெட் எனில், புது கார் வாங்கலாம். கார் ஓட்டிய அனுபவம் குறைவாக இருந்தால், பழைய காரும், நல்ல நீண்ட கால அனுபவம் இருந்தால் புது காரும் வாங்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் தேவையைப் பொறுத்து புதிய காரா, பழைய காரா என்பதை முடிவு செய்யுங்கள்.

மறுவிற்பனை விலை...

காரின் மறு விற்பனை மதிப்பைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. நிதிச் சிக்கல் காரணமாக காரை விற்க வேண்டிய சூழ்நிலை வரும் பட்சத்தில் புது கார் வாங்குவது நல்லது.

காருக்கான அடிப்படை விலை என்ன, என்னென்ன கூடுதல் செலவுகள் (பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை) இருக் கின்றன என்பதை முன் கூட்டியே விசாரிப்பதன்மூலம் எந்த அளவு பணம் திரட்ட அல்லது கடன் வாங்க முடியும், கார் வாங்கு வதால் உங்களுக்கு என்னென்ன செலவுகள் கூடும் என்பதையும் கணக்கிடுங்கள்.

பெட்ரோல் / டீசல், டோல்கேட், பார்க்கிங், பஞ்சர், பழுது பார்த்தல், சர்வீஸ், காப்பீடு, ஆயில் மாற்றுதல், ஏர் ஃபில்டர்கள், டயர் மாற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு இவற்றை ஒருவரால் சுலபமாகச் சமாளிக்க முடியும் எனில் மட்டுமே சொந்தமாக கார் வாங்க வேண்டும்.

கூடுதல் செலவுகள்...

சராசரியாக ஒருவர் ஒரு காரை ஆறு ஆண்டுகள் வைத்திருக்கிறார். ரூ.10 லட்சத்துக்கு கார் வாங்கினால் இந்தக் காலகட்டத்தில் கூடுதல் செலவுகள் தோராயமாக எவ்வளவு இருக்கும் எனப் பார்ப்போம்.

கார் விலை ரூ.10 லட்சம்

பெட்ரோல் / டீசல் ரூ.7 லட்சம்

கார் காப்பீடு ரூ.1 லட்சம்

சர்வீஸ் ரூ.80,000

டயர் மாற்றம் ரூ.20,000

இதர செலவுகள் ரூ.10,000

கார் கடன் வட்டி ரூ.4 லட்சம்

காருக்கென ஆறு ஆண்டுகளில் மொத்தம் செலவு செய்வது ரூ.23.10 லட்சம். கடன் வாங்கவில்லை எனில், காருக்கான செலவு ரூ.15.10 லட்சமாக இருக்கும்.

ஆறு ஆண்டுகள் கழித்து காரை விற்றால், சுமார் ரூ.4 லட்சம்தான் கிடைக்கும்.

கனவு காரை கரெக்ட்டா வாங்க
கைகொடுக்கும் காசுக் கணக்கு!

விலையில் பேரம் பேசுதல்...

கார் வாங்கும்போது ரொக்கப் பணம் தந்து வாங்கும்பட்சத்தில் விலையில் பேரம் பேசி குறைக்க முடியும். எனவே, பேரம் பேசத் தயங்காதீர்கள். பல கார் டீலர் களிடம் விலை விசாரியுங்கள். யார் குறைவான விலை சொல்கிறார்களோ, அவரிடம் வாங்குங்கள்.

கூடுமானவரைக்கும் காரை கடன் மூலம் வாங்குவதைத் தவிருங்கள். காரணம், அது வீட்டைப் போல அதிக விலை கொண்டதில்லை. மேலும், தேய்மான சொத்து என்பதோடு, அதிகம் செலவிடவும் வேண்டியிருக்கிறது.

கார் விலை ரூ.10 லட்சம் எனில், ரூ.2 லட்சம் உங்கள் பங்காக நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும். மீதி ரூ.8 லட்சம்தான் கடன் கிடைக்கும்.

உதாரணமாக, 11% வட்டியில் கார் கடனை ஐந்து ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக வைத்துக்கொள்வோம். மாதத் தவணை ரூ.17,394. வட்டி மட்டும் ரூ.2,43,640 ஆகும். எனவே, கடனில் கார் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், ஐந்து ஆண்டுகளில் காரின் மதிப்பு 50% குறையும் நிலையில், அதை ரூ.5 லட்சத்துக்குதான் விற்க முடியும் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

கார் வாங்குவதற்கு என மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை அதிக ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுகள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்துவரலாம். சேமிப்புத் தொகையைக் கொண்டு கார் வாங்குவதில் தனியாகக் கூடுதல் சுகம் இருக்கிறது.

ஒருவருக்கு ஏற்கெனவே வீட்டுக் கடன் அல்லது ஏதாவது கடன் இருந்தால், கார் கடன் கூடுதல் சுமையாக மாற வாய்ப்பிருக்கிறது. அடுத்து, கார் கடனுக்கான வட்டி யும் அதிகமாகும். தற்போது வாடகை கார்கள் வசதியாகக் கிடைக்கின்றன. கார் வாங்கும் அளவுக்கு பணம் சேரும் வரை வாடகை கார்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை.

மேலும், காரை கடனில் வாங்கப்போகிறீர்கள் எனில், அதற்கான டவுன் பேமென்டை அதிகமாக வைத்துக் கொண்டால், கடன் தொகை குறைவாக இருக்கும். வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். இந்த டவுன் பேமென்ட் சேர்க்க வேண்டுமெனில், அந்தத் தொகையைக் கணக்கிட்டு முதலீடு செய்து வாருங்கள். கார் கடன் டவுன் பேமென்டுக்காகத் தங்க நகை அடமானக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்குவது வட்டிச் செலவை மேலும் அதிகரித்துவிடும்.

சிறந்த மற்றும் தெரிந்த மெக்கானிக் மூலம் காரின் நிலையைக் கண்டறிந்து பழைய கார் வாங்குவது லாபகர மாக இருக்கும். காரின் விலை அதிகமாக இருக்கும்போது காப்பீட்டுக்கான பிரீமியமும் அதிகமாக இருக்கும்.

கார் வாங்க நினைத்தால் என்னென்ன விஷயங்களைக் கட்டாயம் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டீர்களா?